தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தள்ளி போகும் சூழ்நிலை உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில்,
மாநகராட்சிகள் 25
நகராட்சிகள் 148
பேரூராட்சிகள் 490
ஊராட்சி ஒன்றியங்கள் 388
கிராம ஊராட்சிகள் 12,618க்கும் மேற்பட்டவை உள்ளன.
இந்த உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் பொதுவாக 5 ஆண்டுகள். 2021-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதனால் இந்த ஆண்டின் இறுதி அல்லது 2027-ம் ஆண்டின் தொடக்கத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது.
தமிழக சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் புதிய கூட்டணிகள் உருவாகி உள்ள நிலையில் உள்ளாட்சித் தேர்தல் பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக உள்ளது. சட்டசபை தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றி கூட்டணி ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றிக் கழகம், உள்ளாட்சித் தேர்தலிலும் அதே அளவு வெற்றியை பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்நிலையில் உள்ளாட்சி அமைப்புகளின் நிதிநிலையை ஆய்வு செய்யும் 7-வது நிதிக் குழுவின் அறிக்கை அடுத்த மாதம் அதாவது ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்பட இருந்தது டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது.

அதில், “கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளின் நிதி நிலையை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள ஏழாவது மாநில நிதிக் குழுவின் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்பு நிர்ணயிக்கப்பட்டிருந்த ஆகஸ்ட் 31-க்கு பதில் டிசம்பர் 31 என என நீட்டிக்கப்பட்டு திருத்தம் செய்யப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளின் நிதிநிலை தொடர்பான நிதிக்குழு அறிக்கையை தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டித்திருப்பதன் மூலம் உள்ளாட்சித் தேர்தல் தாமதமாகக் கூடும் என தெரிகிறது.
