தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக் மதுபான கடைகளில் பார்களை அமைப்பதற்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.
டாஸ்மாக் பார்களின் பழைய உரிமங்கள் அண்மையில் முடிவடைந்தன. புதிய டெண்டர் விதிமுறைகளை வெளியிடுவதற்காக பார்களின் உரிமம் தற்காலிகமாக நீட்டிக்கப்பட்டிருந்தது.

தற்போது டாஸ்மாக் பார்களுக்கான புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, டாஸ்மாக் மதுபான கடைகளுடன் இணைந்து- கடைகளை ஒட்டி பார்கள் செயல்பட்ட நிலைமையை மாற்றி 100 மீட்டர் சுற்றளவில் பார்களை அமைக்க அனுமதி வழங்கப்படுகிறது.
பார் அமைப்பதற்கான இடமும் 15 சதுர மீட்டரில் இருந்து 20 சதுர மீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல பார் நடத்த ஆன்லைன் மூலம் டெண்டர் கோரும்போது, அந்த இடத்தின் உரிமையாளரிடம் இருந்து கட்டாயமாக தடையில்லா சான்று பெற வேண்டும் என்ற கடுமையான விதி நடைமுறையில் இருந்தது. இதன் மூலம் ஒரே ஒரு நபர் மட்டுமே பார் நடத்த முடியும் என்கிற ஏகபோக நிலைமை இருந்தது. ஆனால் தற்போது அப்படி எதுவும் கெடுபிடி இல்லாமல் யாரும் டெண்டர் உரிமை கோரலாம் என விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த இடத்தைத் தேர்வு செய்வது மற்றும் விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான முழு அதிகாரமும் தற்போது மாவட்ட ஆட்சியரிடமே வழங்கப்பட்டுள்ளது.
