டெல்லியில் நீட் குளறுபடிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியான முறையில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது கடந்த ஜூலை 20 அன்று நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
அதில், “நமது மாணவர்கள் நேர்மையான மற்றும் பொறுப்புமிக்க ஒரு கல்வி முறையைக் கோரிப் போராடினர். அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிவதற்குப் பதிலாக, பாதுகாப்புப் படையினர் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ஆயுதங்கள் மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகள் உள்ளிட்டவற்றைக் கொண்டு அளவற்ற பலத்தைப் பயன்படுத்தி அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் பலத்த காயமடைந்துள்ளனர். மாணவிகள் ஆண் காவல்துறையினரால் தாக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக அவர்களின் அந்தரங்கப் பகுதிகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மிகவும் அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால், உயிருக்கு ஆபத்தான பெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டதாகும். ஒரு பத்திரிகையாளர் உட்பட பலரும் இதனால் படுகாயமடைந்துள்ளதை ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகச் செய்திகள் தெளிவாகக் காட்டுகின்றன. பெல்லட் துப்பாக்கியால் சுடப்பட்டதால் வலியால் துடிப்பதோடு, தனது ஒரு கண்ணின் பார்வையை இழக்கும் நிலையில் உள்ள 19 வயதான சாஹில் லோச்சப் என்ற மாணவனை நான் நேரில் சந்தித்தேன்.
டெல்லியில் குவிக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் படைகள் இறுதியாக உங்களது கட்டுப்பாட்டின் கீழ்தான் வருகின்றன, என்பதால் நான் கேட்கிறேன்.
- உள்துறை அமைச்சர் என்ற முறையில், மாணவர்கள் மீது பெல்லட் துப்பாக்கிகள் உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தான பலத்தைப் பயன்படுத்த நீங்கள் ஒப்புதல் அளித்தீர்களா? இல்லையெனில், அதற்கு ஒப்புதல் அளித்தது யார்?
- சாதாரண உடையில் மாணவர்களை லத்திகளால் தாக்கும் நபர்கள் காவலர்களா அல்லது தன்னார்வலர்களா? அவர்களைப் பணியில் ஈடுபடுத்த உத்தரவிட்டது யார்?
எந்தவொரு ஜனநாயகத்திற்கும் அமைதியான போராட்டம் மிக முக்கியமானது. போராட்டக்காரர்களைப் பாதுகாப்பதும், பேச்சுவார்த்தை மூலம் அவர்களின் குறைகளைத் தீர்ப்பதும் அரசின் பொறுப்பு. இத்தகைய கொடூரமான வன்முறை அனைத்து ஜனநாயக நெறிமுறைகளையும் தகர்த்தெறிந்துள்ளது மற்றும் நாடு முழுவதும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நம் நாட்டின் எதிர்காலமான இளைஞர்களும் மாணவர்களும் பதிலையும் பொறுப்பையும் எதிர்பார்க்கின்றனர். அவர்களின் குரல் நிச்சயம் கேட்கப்படும்.” என தெரிவித்துள்ளார்.
