தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் செயல்பாடுகள் குறித்து ஆட்சிக்கு ஆதரவு தரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளிப்படையாக கருத்துகளை பகிர்ந்துள்ளார்.
நமது மின்னம்பலம் யூடியூப் சேனலுக்கு பெ. சண்முகம் அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிராகப் போராடிய மாணவர்களைக் கல்லூரி வகுப்பறைக்குள் புகுந்து கைது செய்தது போன்ற காவல்துறையின் அத்துமீறல்களை சிபிஎம் வன்மையாகக் கண்டிக்கிறது. முந்தைய அதிமுக மற்றும் திமுக ஆட்சிகளைப் போலவே தற்போதைய ஆட்சியிலும் காவல்துறையின் அணுகுமுறையில் பெரிய மாற்றம் இல்லை.
நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைக் கொண்டாடும் இளைஞர்களைத் தவறாக நினைக்கத் தேவையில்லை. சினிமா ரசனையையும் அரசியலையும் குழப்பக் கூடாது.
உச்சநீதிமன்றம் 2018-ல் காவிரி விவகாரத்தில் இறுதித் தீர்ப்பு வழங்கிவிட்ட நிலையில், இனி கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பலனளிக்காது
உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு உள்ள நிலையில், மேகேதாட்டு விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமாரிடம் தமிழக முதல்வர் தன்னிச்சையாகப் பேச்சுவார்த்தை நடத்தச் செல்வது தவறான முடிவு. அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆளுநர் வருகையையொட்டி தமிழ் தாய் வாழ்த்துக்குப் பதிலாக வந்தே மாதரத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது போன்ற விவகாரங்களில் அரசு இன்னும் தீவிர எதிர்ப்பு காட்ட வேண்டும்.
தேசிய அளவில் பாஜகவை எதிர்ப்பதில் காங்கிரஸ் ஒரு பிரதானமான கட்சி. 100 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அந்தக் கட்சியை விட்டுவிட்டு பாஜக எதிர்ப்பு சாத்தியமில்லை.
காங்கிரஸ் கட்சியுடன் உறவே கிடையாது என்று திமுக எடுக்கும் முடிவு தேசத்திற்குப் பயனளிக்காது. அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இடதுசாரி கட்சிகளைத் தவிர மற்ற கட்சிகளும் அமைச்சரவைக்குள் இருப்பதால் தற்போது குறைந்தபட்ச செயல் திட்டம் எதையும் தனித்து முன்வைக்கவில்லை. அமைச்சரவையில் உள்ள கட்சிகள் அப்படி ஒரு முடிவுக்கு வந்தால் அதன்பிறகு அது குறித்து யோசிக்கலாம்.
