குதிரை பேர வழக்கு : செந்தில் பாலாஜி 2வது நாளாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜர்!

Published On:

| By Pandeeswari Gurusamy

senthil balaji

தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த ஊத்தங்கரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜியும் அவரது சகோதரர் அசோக் குமாரும் முன்ஜாமின் பெற்ற நிலையில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் 2-வது நாளாக ஆஜராகி கையெழுத்திட்டனர்.

தவெக எம்.எல்.ஏ இளையராஜாவிடம் பேரம் பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், சென்னை திருவல்லிக்கேணி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கியது.

ADVERTISEMENT

நீதிமன்ற உத்தரவின்படி, ரூ.25,000 சொந்தப் பிணைத்தொகையும், அதே தொகைக்கான இரு நபர் பிணையும் செலுத்த ஆணையிடப்பட்டது. மேலும், மறு உத்தரவு வரும் வரை தினமும் காலையிலும் மாலையிலும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.

முன்னதாக, விசாரணை என்ற பெயரில் காவல்துறை தங்களைத் துன்புறுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரி செந்தில் பாலாஜியும் அவரது சகோதரரும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இருப்பினும், முன்ஜாமீன் வழங்கப்பட்டும் இருவரும் சரணடையாத நிலையில், “சரணடையாத பட்சத்தில் துன்புறுத்தக் கூடாது என எப்படி கோரிக்கை வைக்க முடியும்?” எனக் கூறி நீதிபதி அந்த மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜி நேற்று முன்தினம் (ஜூலை 24) சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் சென்று பிணைத்தொகை செலுத்தினார். நீதிமன்ற உத்தரவின்படி, நேற்று செந்தில் பாலாஜியும் அவரது சகோதரரும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டனர்.

நேற்று காலை மற்றும் மாலை என சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக இருவரிடமும் திருவல்லிக்கேணி துணை ஆணையர் ஜெயச்சந்திரன் தீவிர விசாரணை மேற்கொண்டார். இந்த நிலையில், இன்று 2-வது நாளாக செந்தில் பாலாஜியும் அவரது சகோதரரும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகியுள்ளனர். அவர்களிடம் காவல்துறையினர் இன்றும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

இவ்வழக்கில் ஏற்கனவே கரூரைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஹவாலா பணப் புழக்கம் உள்ளிட்ட பல்வேறு கோணங்களிலும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share