நீட் போராட்டம் வாபஸ்: ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு

Published On:

| By Pandeeswari Gurusamy

நீட் தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ‘காக்ரோச் ஜனதா கட்சி’ அமைப்பினர் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.

கடந்த 20-ம் தேதி நாடாளுமன்றம் நோக்கி அவர்கள் பேரணியாகச் சென்றபோது, காவல்துறையினர் தடியடி நடத்தியும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும் தாக்குதலில் ஈடுபட்டனர். இதைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.

ADVERTISEMENT

தமிழகத்திலும் இதன் எதிரொலியாக பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. குறிப்பாக, சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகமான ‘பாலன் இல்லத்தில்’, நீட் தேர்வுக்கு எதிராக காக்ரோச் ஜனதா கட்சி இயக்கத்தினருடன் இணைந்து பல்வேறு அமைப்பினரும் மாணவர்களும் போராட்டத்தில் களமிறங்கினர்.

இரவு பகலாகத் தொடர்ந்து 6 நாட்களாக போராட்டம் நீடித்த நிலையில், நேற்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து, போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக காக்ரோச் ஜனதா கட்சி இயக்கத்தினர் அறிவித்தனர். ஆனால், இந்த அறிவிப்பிற்குப பாலன் இல்லத்தில் போராட்டத்தில் பங்கேற்ற ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

பாலன் இல்லத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் இது குறித்துக் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நாங்கள் எந்தவொரு அரசியல் கட்சியையும் முன்னிறுத்தாமல், மாணவர்கள் என்ற முறையில்தான் இங்கு வந்து போராடினோம். ஆனால், கடைசியில் காக்ரோச் ஜனதா கட்சி இயக்கத்தினர் இந்த போராட்ட வெற்றியைத் தங்களுடைய தனிப்பட்ட வெற்றி என்பது போலக் காட்டிக் கொள்கிறார்கள். உண்மையில், போராட்டத்தில் களமிறங்கிய ஒவ்வொருவருக்கும் இந்த வெற்றியில் பங்கு இருக்கிறது.

நாங்கள் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரிதான் போராடினோம். ஆனால், இங்கு திரண்ட பொதுமக்களை அவர்கள் தங்களது சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டார்கள். இனி சி.ஜே.பி (CJP) என்ற அமைப்பே இல்லாமல் போவதற்கான வேலைகளை அவர்களே செய்து கொண்டிருக்கிறார்கள்.

ADVERTISEMENT

அம்பேத்கர், பெரியார் மற்றும் மார்க்சிய சிந்தனைகளைப் பின்பற்றுபவர்கள்தான் இங்குப் பெருமளவில் கூடியிருந்தோம். அப்படி இருக்கும்போது, இங்கு வந்த ஒருவரைப் பார்த்து ‘வெளியே போ’ என்று ஒருவர் பேசியது எங்களை மிகவும் காயப்படுத்தியிருக்கிறது. நாங்கள் இங்கு வந்தது சி.ஜே.பி அமைப்பை நம்பி அல்ல; வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த பாலன் இல்ல அலுவலகத்தை நம்பிதான். இங்கு எத்தனையோ நேர்மையான போராட்டங்கள் நடந்துள்ளன. ஆனால், இவர்கள் இந்த அலுவலகத்தையும் தவறாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்” என்று ஆதங்கத்துடன் குற்றம் சாட்டியுள்ளனர்.

மத்திய அமைச்சர் பதவி விலகிய நிலையில் நேற்று இரவு போராட்டம் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் ஒரு தரப்பினர் போராட்டம் தொடரும் என கூறியதால் பாலன் இல்லத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share