ஈபிஎஸ்க்கும் சபாநாயகர் அழைப்பு.. ராஜினாமா செய்த 4 எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் அடுத்தகட்ட நகர்வு

Published On:

| By Pandeeswari Gurusamy

eps

அதிமுகவில் இருந்து விலகி எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மரகதம் குமரவேல், ஜெயக்குமார், இசக்கி சுப்பையா மற்றும் சத்தியபாமா ஆகிய 4 பேரும் வரும் ஜூலை 30-ஆம் தேதி சபாநாயகர் முன் மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் விசாரணை நடத்தப்பட உள்ளதால், அவருக்கும் சட்டப்பேரவைச் செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார்.

முன்னதாக, தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்த நிலையில், அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கொறடா உத்தரவை மீறி அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனைத் தொடர்ந்து, கடந்த மே 25-ஆம் தேதி பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ ஜெயக்குமார், மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ மரகதம் குமாரவேல், தாராபுரம் தொகுதி எம்.எல்.ஏ சத்தியபாமா ஆகிய மூவரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். தொடர்ந்து மே 26-ஆம் தேதி, அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ இசக்கி சுப்பையாவும் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டுத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து, பதவியை ராஜினாமா செய்த 4 பேரையும் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அதிமுக சார்பில் சபாநாயகரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இப்புகாரின் அடிப்படையில், ஏற்கனவே சபாநாயகர் சம்பந்தப்பட்ட நபர்களை நேரடியாக அழைத்து விளக்கத்தைப் பெற்றதோடு, எழுத்துப்பூர்வமான விளக்கங்களையும் பெற்றிருந்தார்.

இந்நிலையில், சட்டப்பேரவைச் செயலாளர் சாந்தி மூலம் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த நான்கு பேருக்கும் மீண்டும் ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், வரும் ஜூலை 30-ஆம் தேதி சபாநாயகர் அறையில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சட்டப்பேரவைச் செயலாளர் அனுப்பியுள்ள இந்தக் கடிதம், அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இரு தரப்பு விளக்கங்களையும் கேட்டறிந்த பின்னரே, இவ்விவகாரத்தில் சபாநாயகர் இறுதி முடிவை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share