ஜனவரி 9 ஜனநாயகன் வெளியாகுமா? நீதிமன்றத்தில் நடந்த காரசார வாதம் – தீர்ப்பு ஒத்திவைப்பு!

Published On:

| By Kavi

ஜனநாயகன் பட வழக்கின் தீர்ப்பு தேதியை நீதிபதி ஆஷா ஒத்தி வைத்துள்ளார்.

நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் வரும் ஜனவரி 9ஆம் தேதி வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்தது. தணிக்கை சான்றிதழுக்காக, ஜனநாயகன் படம் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்துக்கு அனுப்பப்பட்டது.

ADVERTISEMENT

இதில், படத்தில் சில காட்சிகள் கட் செய்யப்பட்டவுடன், படத்திற்கு U/A சான்றிதழ் வழங்க CBFC ஆரம்பத்தில் பரிந்துரைத்திருக்கிறது. ஆனால் சான்றிதழ் வழங்கப்படவில்லை.

எனவே, ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் தாமதம் செய்கிறது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் ப்ரொடக்‌ஷன் வழக்குத் தொடர்ந்தது.

ADVERTISEMENT

இந்த வழக்கை நீதிபதி ஆஷா விசாரித்தார்.

நேற்று நடந்த விசாரணையின் போது, படத்துக்கு எதிராக புகார் வந்துள்ளதால், படம் மறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சென்சார் போர்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதை கேட்ட நீதிபதி புகாரை தாக்கல் செய்ய சென்சார் போர்டுக்கு உத்தரவிட்டார்

இவ்வழக்கு இன்று (ஜனவரி 7) விசாரணைக்கு வந்தபோது, புகார் உள்ளிட்ட ஆவணங்களை சென்சார் போர்டு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.

தொடர்ந்து பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சதீஷ் பராசரன், ’மத்திய திரைப்பட வாரியம் (CBFC) மிகவும் வெளிப்படையான முறையில் செயல்பட வேண்டும். ஒரு பரிந்துரை எப்படி புகாராக மாறுகிறது என்று எங்களுக்கு தெரியவில்லை.

மறுஆய்வு குழுவுக்கு படத்தை அனுப்புவது தொடர்பான அந்தக் கடிதத்தைப் பாருங்கள் — அது மிகவும் செயற்கையாக எழுதப்பட்டதாக உள்ளது.‘மத உணர்வுகளை பாதித்தது மற்றும் பாதுகாப்புத் துறையின் சித்தரிப்பு குறித்து புகார் வந்ததால்’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்துக்காக 500 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளோம். எனவே இந்த விவகாரத்தை இவ்வளவு லேசாகக் கையாள முடியாது. படத்தை பார்த்த அதிகாரிகளில் ஒருவரே புகார்தாரராக மாறியிருக்கிறார்.

யு/ஏ சான்றிதழுக்கு பரிந்துரை செய்த தணிக்கை வாரிய தலைவரே, மறுஆய்வு குழுவுக்கு படத்தை அனுப்பி வைக்க அதிகாரம் இல்லை. இந்த படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவித்துவிட்டோம்.

இன்னும் சில தினங்களில் உலகம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் படம் வெளியாகவுள்ள நிலையில், தணிக்கை சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிப்பது ஏற்புடையதல்ல. எனவே, தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும்”என்று வாதிட்டார்.

இதை கேட்ட நீதிபதி ஆஷா, படத்தை ஆய்வு செய்த குழுவில் இடம்பெற்றவர் அளித்த புகார் ஏற்கத்தக்கது தானா? அனைத்தும் வினோதமாக இருக்கிறதே… படத்துக்கு யு/ ஏ சான்று வழங்க முடிவு செய்த பின் மறு ஆய்வுக்கு அனுப்பியது ஏன்?

படத்தை மறு ஆய்வுக்கு அனுப்புவது தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்துக்கு தகவல் தெரிவிக்காதது ஏன்? என நீதிபதி, சென்சார் போர்டு தரப்புக்கு கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேஷன், “ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் எந்த தீய நோக்கமும் கிடையாது. மறு ஆய்வு குழுவுக்கு அனுப்புவதற்கு வாரிய தலைவருக்கு முழு அதிகாரம் உள்ளது.

ரூ.500 கோடி படமாக இருந்தாலும் ரூ.1 கோடி படமாக இருந்தாலும் அது தணிக்கை வாரியத்துக்கு ஒன்றுதான்.

மனுதாரர் 9ஆம் தேதி திரைப்படத்தை வெளியிடுவதாக அறிவித்து விட்டார் என்பதற்காக அவருக்கு தணிக்கை சான்றிதழ் உடனே வழங்கி விடவேண்டும் என நிர்பந்திக்க முடியாது.

அனைத்தும் சட்ட விதிகளை பின்பற்றியே நடந்துள்ளது. படத்தை மறு ஆய்வு குழுவுக்கு அனுப்புவது தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்துக்கு ஜனவரி 5ஆம் தேதியே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பாதுகாப்புப்படைகளின் இலச்சினைகள் உள்ளதால் அவர்களிடமிருந்து ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும். பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும். புதிய உறுப்பினர்கள் படத்தை பார்க்க வேண்டியுள்ளது. மறு ஆய்வுக்கு அனுப்பிய முடிவு மத்திய அரசு முடிவல்ல.” என்று வாதம் முன்வைத்தார்.

தயாரிப்பு நிறுவனம் சார்பில், புகார் அளித்ததே குழுவின் உறுப்பினர்களில் ஒருவர் தான். வாரிய குழுவில் 5ல் 4 உறுப்பினர்கள் படத்துக்கு சான்று வழங்க பரிந்துரைத்துள்ளனர். பெரும்பான்மை முடிவாக இருக்கும் போது, ஒரு உறுப்பினர் மட்டும் ஆட்சேபம் தெரிவித்திருக்கிறார் என படத்தை மறு ஆய்வுக்கு எப்படி அனுப்ப முடியும்’ என மீண்டும் வாதம் முன்வைக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆஷா தீர்ப்பை ஒத்திவைத்துள்ளார்.

அப்போது தயாரிப்பு நிறுவனம் சார்பில், படம் 9ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்த போது, நீதிபதி ஆஷா 9ஆம் தேதி காலை தீர்ப்பு வழங்குகிறேன் என்று கூறியிருக்கிறார்.

இதனால் அறிவித்தபடி 9ஆம் தேதி ஜனநாயகன் படம் வெளியாகுமா என்பது கேள்விகுறியாகியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share