திருமாவளவனை முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை என்று சிவி சண்முகம் கூறியுள்ளார்.
அதிமுக மீண்டும் இரண்டாக பிரிந்திருக்கிறது. இன்று தவெக ஆட்சி மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அப்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். “அதிமுகவில் ஒரு சிலருக்கு அமைச்சர் பதவி கொடுப்பதாக ஆசை காட்டுவதாக தகவல் வருகிறது. தூய்மையான ஆட்சி நடத்துவதாக கூறியிருக்கிறீர்கள். அந்த எண்ணத்தில் எந்த மாற்றமும் இருக்கக்கூடாது. தவெக அரசு தொடர்வதற்கு ஆதரவு அளிக்கவில்லை” என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டிருக்கும் போது சட்டப்பேரவையிலேயே சி.விஜயபாஸ்கருடன் சி.வி.சண்முகம் ஆலோசனை செய்து கொண்டிருந்தார். பின்னர் வேலுமணி தலைமையிலான எம்.எல்.ஏ.க்கள் தவெக ஆட்சிக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இந்தநிலையில் எம்.ஆர்.சி நகரில் சிவி சண்முகம், விஜயபாஸ்கர், வேலுமணி ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர்.

அப்போது சிவி சண்முகம் கூறுகையில், “இன்று நடைபெற்ற நம்பிக்கை கோரும் தீர்மானத்தில், 25 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அதிமுக, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளோம். சில சிறுபான்மை எம்.எல்.ஏ-க்கள் மட்டும் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பத்திரிகை வாயிலாக சில கருத்துகளை சொல்லியிருக்கிறார்.
நான் பொதுச்செயலாளராக இருக்கிறேன். பொதுச் செயலாளரால் நியமிக்கப்பட்ட கொறடா உத்தரவை மீறி வாக்களித்திருக்கிறார்கள் என்று சொல்கிறார். இது முற்றிலும் தவறான கருத்து.
பொதுச்செயலாளர் நேரடியாகக் கொறடாவை நியமிக்க முடியாது. சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி, சட்டமன்றக் குழுத் தலைவரையும் கொறடாவையும் தேர்ந்தெடுப்பதே மரபு. ஆனால், எடப்பாடி பழனிசாமி தான் நியமித்த கொறடாவின் உத்தரவை மீறிவிட்டதாகக் கூறுவது சட்டரீதியாகத் தவறானது
எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாதது ஒன்றும் இல்லை. தனக்கு ஆதரவு இல்லை என்பதை மறைப்பதற்காக தவறான தகவலை சொல்கிறார். இன்னொன்று நான் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டேன் என்கிறார். இது அப்பட்டமான, ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்.
47 எம்.எல்.ஏ-க்கள் தன்னிடம் இருப்பதாகக் கூறுகிறார்.இவர்களிடம் எங்கே எப்போது கையெழுத்து பெற்றார் என்று சொல்ல முடியுமா?. அப்படி ஒரு கூட்டம் எப்போது, எங்கே நடைபெற்றது? எந்த தேதியில் நடைபெற்றது. அஜெண்டா என்ன? அதற்கான தீர்மானத்தை அவரால் காட்ட முடியுமா? அப்படியிருந்தால் அந்த தீர்மானத்தில் 47 பேர் கையெழுத்திட்டிருக்கிறார்களா?

அவர் பக்கம் நியாயம் இருந்தால் அந்த தீர்மான புத்தகத்தை எடப்பாடி வெளியிடுவாரா? அது முடியாது.
ஏனென்றால் அப்படி ஒரு கூட்டமே நடைபெறவில்லை. ஒரு போட்டோவைக் காட்டுவார், நாங்களெல்லாம் அமர்ந்திருக்கிற மாதிரி. அது கூட்டம் இல்லை. அது நாங்கள் கடைசியாக அவரைச் சந்தித்துப் பேசியபோது எங்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது எடுக்கப்பட்ட படம். அந்தப் படத்தை வேண்டுமானால் காட்டுவார், ஆனால் நோட்டைக் காட்ட முடியுமா? கையொப்பத்தைக் காட்ட முடியுமா?
அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பாண்டிச்சேரியிலே தங்க வைக்கப்பட்டிருந்த போது… உங்களுக்கு எல்லாருக்கும் தெரியும், அன்றைக்கு முன்னாள் முதலமைச்சர் அவர்கள் பாண்டிச்சேரிக்குச் சென்றார், இரவு நேரத்தில் சென்றார், வேகவேகமாகச் சென்றார், யாரையும் அழைக்காமல் சென்றார். போய் கையெழுத்தைப் பெற்றார், தனித்தனியாகப் பெற்றார்.
அன்றைக்கு பாண்டிச்சேரி விடுதியிலே என்ன பேசினார், என்ன சொன்னார் தெரியுமா? அதைச் சொல்ல அவர் தயாராக இருக்கிறாரா?.
‘நான் மேலே பேசிவிட்டேன், மேலே சம்மதம் சொல்லிவிட்டார்கள், நாம் ஆட்சி அமைக்கிறோம், நான் முதலமைச்சராகப் போகிறேன், திமுக நமக்கு வெளியிலிருந்து ஆதரவு தருகிறது, திமுகவுடைய ஆதரவோடு எடப்பாடி பழனிசாமியாகிய என் தலைமையிலே ஆட்சி அமையப்போகிறது, நீங்களெல்லாம் அமைச்சராகலாம்’ என்று ஆசை வார்த்தைகளைக் கூறினார். பிஜேபி எம்.எல்.ஏ-வும் நம்முடைய கட்சியில இணைந்து கொள்வார் என்று சொன்னார்.
நடந்தது ஒரே சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம். அது கடந்த 8ம் தேதி எங்களுடைய தலைமையிலே நடைபெற்றது. பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் வேலுமணியை சட்டமன்ற குழு தலைவராகவும், சி. விஜயபாஸ்கரை கொறடாவாகவும் தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். அதை நாங்கள் சபாநாயகரிடம் கொடுத்திருக்கிறோம்.
பொதுச்செயலாளர் கொடுத்திருக்கிற கடிதம் போலி கடிதம், செல்லாத கடிதம். அவர் 47 பேர் என்னை ஆதரிக்கிறார்கள் என்று சொல்லி ஒரு கடிதத்தைச் சபாநாயகரிடம் கொடுத்திருக்கிறார். நாங்கள் 27 சட்டமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களைப் பெற்று கொடுத்தோம். இரண்டு கடிதமும் இப்போது சபாநாயகர் இடத்திலே இருக்கிறது. இப்படிப் போலியான ஒரு கடிதம் கொடுத்திருக்கிறார் என்று தெரிந்த உடனே, அடுத்த அரை மணி நேரத்திலே அதற்கு ஆட்சேபனை கடிதத்தை நாங்கள் கொடுத்துவிட்டோம்.
இப்போது சபாநாயகர்தான் இதை விசாரணை செய்து எது உண்மை, எது பொய் என்பதை ஆராய்ந்து, யாருக்கு பெரும்பான்மை இருக்கிறது என்பதை முடிவு செய்ய வேண்டும். இதையெல்லாம் மூடி மறைத்துவிட்டு, எதுவுமே நடக்காதது போல இன்றைக்கு அவர் பேட்டியளித்திருக்கிறார்.
இன்னொன்று சொல்லுகிறார், ஏதோ சில முன்னாள் அமைச்சர்கள் பதவி ஆசைக்காக இன்றைக்கு ஆளும் கட்சியோடு ஆதரவாக வாக்களித்திருக்கிறார்கள் என கூறுகிறார். யாருக்கு பதவி ஆசை என்பதை அவர் மனசாட்சியைத் தொட்டுச் சொல்ல வேண்டும். நான் சொல்கிறேன், உங்களுக்கும் பிள்ளை இருக்கிறது, எனக்கும் பிள்ளை இருக்கிறது. உங்களுக்குத் தைரியம் இருந்தால் வாங்க, உங்கள் பிள்ளையை நிறுத்துங்கள், என் பிள்ளையை நிறுத்துகிறேன். என் பிள்ளையின் தலைமேல் சத்தியம் செய்து சொல்கிறேன், நீங்கள் சொன்னது என்ன?.
கடந்த 4ஆம் தேதி தேதி தேர்தல் முடிவு முடிந்து நான் சான்றிதழ் வாங்கிவிட்டு சென்னைக்கு வந்து கொண்டிருக்கும்போது, திமுகவில் இருந்து இரண்டு முன்னாள் அமைச்சர்கள் பேசினார்கள். ‘பார்த்து நல்ல பதவியை (அமைச்சர்) வாங்கிக்கொள்ளுங்கள்’ என்கிறார்கள். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. காலையில் தான் விஷயமே வருகிறது.
பொதுச்செயலாளர் பேசுகிறார் , ‘நமக்கு திமுக வெளியிலிருந்து ஆதரவு தருகிறது, நான் டெல்லியில் பேசிவிட்டேன். எல்லாம் முடிந்துவிட்டது. திமுக ஆட்சியில் பங்கெடுக்கவில்லை. அவர்களது கூட்டணியில் இருக்கிறவர்களுக்கு ஒரு ஒரு அமைச்சர் பதவி கொடுத்துவிட்டு, நமக்கு 25 அமைச்சர் பதவி கிடைக்கும் என்றார். ஆனால் நாங்கள் இது எப்படி நடக்கும் என்று கேட்டோம். திமுகவை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் தான் அதிமுக. திமுகவை எதிர்த்து அரசியல் செய்து கொண்டிருக்கிறோம். நீங்கள் செய்வது எப்படி நியாயம் என்று கேட்டோம். மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றோம். அதற்கு மக்களை விடுப்பா என்றார். தொண்டர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்று கேட்டோம். தொண்டர்கள் எல்லாம் சரியாகிவிடுவார்கள் என்றார்.
அதற்கு நமது மனசாட்சி ஏற்றுக்கொள்ளாது என்றோம். வீட்டில் மனைவி பிள்ளைகள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்றோம். இதையெல்லாம் அவர் ஏற்கவில்லை. இன்றே முடிவை சொல்லுங்கள் என்றார். அதனால் முடியாது என்று சொல்லிவிட்டு வந்துவிட்டோம்.
இன்னொன்றையும் சொல்கிறேன். 47 எம்.எல்.ஏ.க்கள்தான் அதிமுகவில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஆனால் இதுவே மிகப்பெரிய வெற்றி என்கிறார். இப்படிப்பட்ட பொதுச்செயலாளரை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும்.
1996ல் தோல்வி அடைந்த போது அம்மா ஜெயலலிதா, இந்த தோல்விக்கு நான் பொறுப்பேற்றுக்கொள்கிறேன் என்றார். அதுதான் ஆளுமை. ஆனால் இப்போது அதிமுக எத்தனை தோல்விகளை சந்தித்திருக்கிறது. இதற்கு அவர் பொறுப்பேற்றாரா. பொறுப்பேற்க மறுக்கிறார். கட்சியின் சீர்த்திருத்தத்துக்கு மறுக்கிறார்.
மேலும், திருமாவளவனை முதலமைச்சராக்க திமுக முன்மொழிந்தது. அவர் மட்டும் முதல்வர். 33 அமைச்சர்களும் அதிமுகவினர் என வாய்ப்பு வந்தது. இதற்கு முடியாது என்று சொல்லிவிட்டார். ஆனால் நான் முதல்வராக வேண்டும், இல்லையென்றால் நாம் எதிர்க்கட்சியாக இருப்போம்’ என்று சொன்னார்.
அண்ணா திமுக தொடங்கப்பட்டதன் நோக்கம் என்ன? திமுக ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான். தமிழக வெற்றிக் கழகத்தின் நோக்கமும் அதுதான். நீங்கள் திமுகவோடு போகும் மனநிலையில் வந்துவிட்டீர்கள். அப்படியானால் நாம் ஏன் விஜய் தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவு கொடுக்கக்கூடாது என்று கேட்டோம். இதுதான் எங்களுக்கும் அவருக்கும் வந்த கருத்து வேறுபாடு. இதுதான் நடந்த உண்மை.
இதில் எந்த விதமான ஒளிவு மறைவும் கிடையாது. எங்கள் மனதில் இருந்த உண்மையை சொல்லிவிட்டோம். அவரை பொதுச்செயலாளராக ஆக்கியது யார் தொண்டர்கள் தான்.
எங்கள் உயிர் மூச்சு இருக்கிற வரை அதிமுகதான் எங்கள் கட்சி இதில் எந்த சமரசமும் கிடையாது. திமுகவை அகற்ற வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் இன்றைக்கு தவெக ஆட்சிக்கு ஆதரவு அளித்திருக்கிறோம். இதுதான் ஒவ்வொரு அடிமட்டத் தொண்டனின் எண்ணம்” என்று கூறினார்.
மேலும் அவர், அதிமுகவில் பிளவு இல்லை. பொதுச்செயலாளர் அவர்தான் மாற்றுக் கருத்து இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து வேலுமணி பேசுகையில், ‘ஓபிஎஸ், செங்கோட்டையன், ஜேசிடி பிரபாகர், சசிகலா, டிடிவி தினகரன் என எல்லோரையும் அவர் வெளியே அனுப்பிவிட்டார். இனி யாரைவும் அவர் வெளியே அனுப்பக் கூடாது எல்லோரையும் அவர் அரவணைத்து செல்ல வேண்டும்’ என்று கூறினார்.
