அடக்குமுறை அரசுகள் நகைச்சுவையை வெறுப்பது ஏன்?

Published On:

| By Minnambalam Desk

ராஜேந்திரன் நாராயணன் Oppressive governments hate humor

1948இல் செக்கோஸ்லோவேக்கிய கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியபோது பல்கலைக்கழக மாணவனும் கட்சி உறுப்பினருமான லுட்விக் ஜான் கோடைக்கால கேம்புக்காக வெளியூர் சென்றிருந்த காதலி மார்கெடாவுடன் கடிதப் போக்குவரத்தைத் தொடங்கினான். கட்சி உறுப்பினரான மார்கெடா கேம்பில் ‘ஆரோக்கிய சூழல்’ நிலவுவதாக கூறியதற்கு ‘ஆரோக்கிய சூழ்நிலையில் முட்டள்தனம் நிரம்பியிருக்கும். நம்பிக்கைதான் மக்களின் ஓபியம்! ட்ராட்ஸ்கி வாழ்க! என போஸ்ட்கார்டில் பதில் அனுப்பினான் லுட்விக்.

லுட்விக்கைப் பற்றிக் கட்சியின் மேலிடத்திற்குப் புகாரளித்தாள் மார்கெடா. விசாரணைக்கு அழைக்கப்பட்ட லுட்விக்கிடம் மன்னிப்பு கோரும்படி சொல்லப்பட, “தமாஷாகத்தான் அப்படி சொன்னேன், காம்ரேட்!” என்றான் லுட்விக். அதை யாரும் ஒப்புக்கொள்ளாததால் லுட்விக்கை பல்கலைக்கழகத்திலிருந்து டிஸ்மிஸ் செய்து சுரங்கத்தில் கடினமான வேலைகளைச் செய்ய அனுப்பிவைத்தனர்.

பிரபல செக் எழுத்தாளர் மிலன் குந்தேராவின் முதல் நாவலின் கதையின் சாராம்சம் இது. ‘தி ஜோக்’ ஒரு காதல் கதை என குந்தேரா கூறினாலும் சர்வாதிகார ஆட்சியின் பிடியில் இருக்கும் நகைச்சுவையற்ற சமூகத்தின் முட்டாள்தனத்தையும் இக்கதை விரிவாகக் காட்டுகிறது. முதலில் 1967இல் வெளியான இப்புத்தகத்தின் அனைத்துப் பதிப்புகளும் மிக விரைவாக விற்றுத் தீர்ந்தன. Oppressive governments hate humor

1968இல் ‘ப்ரேக் ஸ்ப்ரிங்’ சீர்திருத்தங்களின்போது பேச்சு சுதந்திரத்தை அதிகரித்தல், தணிக்கையை நீக்குதல் உள்ளிட்ட தாராளமயச் சீர்திருத்தங்களை கட்சியின் செயலாளர் அறிவித்தார். சோவியத் யூனியனின் படைகள் செக்கோஸ்லோவேக்கியாவை முற்றுகையிட்டு சீர்திருத்தங்களை ரத்துசெய்து சர்வாதிகார ஆட்சி நிலவரத்தை மீண்டும் கொண்டுவந்ததால் அவை குறுகிய காலம் மட்டுமே நீடித்தன.

‘தி ஜோக்’ புத்தகமும் அதன் திரைவடிவங்களும் தடை செய்யப்பட்டன. முற்றுகை நடந்தபின் ‘இயல்பான காலம்’ என விவரிக்கப்பட்ட காலத்தில்தான் குந்தேரா பிரான்சில் தஞ்சம் புகுந்தார்.

Oppressive governments hate humor

இந்துத்துவம் பின்பற்றும் ஸ்டாலினிசம்

வாழ்க்கையும் கலை போலவே இருப்பதால் செக்கோஸ்லோவேக்கியாவில் ஸ்டாலினின் ஆட்சிக்கும் இந்தியாவில் இந்துத்துவா கொள்கையில் மூழ்கியுள்ள சிவசேனை-பா.ஜ.க கூட்டணியின் அரசு ஸ்டாண்ட்-அப் காமெடியன் குனால் கம்ராவின் மீது புரிந்துள்ள அடாவடி செயல்பாட்டுக்கும் இடையில் சில ஒற்றுமைகள் இருப்பதாகத் தெரிகின்றன.

லுட்விக் ஜானைப் போலவே கம்ராவும் நகைச்சுவைக்காக மன்னிப்புக் கோர மறுத்துவிட்டார். மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை நையாண்டி செய்யும் வீடியோ பாடலை அவர் பதிவு செய்திருந்தார். மார்ச் மாதம் வீடியோ வெளியானவுடன் மும்பையின் புறநகரில் அப்பாடல் படமாக்கப்பட்ட இடத்தை ஒரு ரவுடி கும்பல் அடித்து நொறுக்கியது. சிவசேனையின் ஷிண்டே பிரிவுக்கு ஆதரவாக செயல்பட்ட காவல்துறை தாக்குதல் நடத்தியவர்களைத் தடுக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை.

சிவசேனையின் ஷிண்டே பிரிவு ஆதரவாளர்களின் புகார்களின் அடிப்படையில் பல்வேறு முதல் தகவல் அறிக்கைகள் (FIRs) கம்ராவுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு மிரட்டல்கள் கம்ராவுக்கு அச்சுறுத்தல்களும் விடப்பட்டுள்ளன.

கம்ராவின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு சம்மன் அனுப்பிய மும்பை காவல் துறையினர் அவர்களது வாக்குமூலங்களை சாட்சிகளாகப் பதிவுசெய்துள்ளனர். இது போதாதென்று, அனுமதியின்றிக் கட்டப்பட்டதாக ஒரு கட்டிடத்தையும் மும்பை நகராட்சி அதிகாரிகள் இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளனர். கம்ரா மன்னிப்புக் கோராவிட்டால் அவருக்கெதிரே சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படுமென மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார். அரசியல் சாசனத்தின் அடிப்படையிலான ஜனநாயகம் இந்தியாவில் இருப்பதாலோ என்னவோ, கராவைச் சுரங்கத்துக்கு அனுப்பிக் கடினமாக உழைக்கும்படி அரசாங்கம் சொல்லவில்லை.

வேறுபடும் இடங்களும் ஒன்றிணையும் புள்ளியும்

மேலோட்டமாகப் பார்த்தால் ஸ்டாலினிஸமும் இந்துத்துவக் கொள்கையும் முற்றிலும் வித்தியாசமான இரு அரசியல் சித்தாந்தங்கள். மதம் என்பதை வெறுப்பூட்டும் விஷயமாக ஸ்டாலினிசம் பார்க்கிறது. இந்துப் பெரும்பன்மைத்துவத்தை அதிரடியாக நிலைநிறுத்துவதே இந்துத்துவத்தின் எரிபொருள். தனியார் முதலீட்டை ஸ்டாலினிஸம் அறவே ஒதுக்கியது; ஆனால் இந்துத்துவம் முதலாளித்துவத்தின் தயவால்தான் தழைத்தோங்குகிறது. Oppressive governments hate humor

ஸ்டாலினிஸம் அதிகபட்ச அரசுக்கு உத்திரவாதம் தருகிறது; ஆனால் இந்துத்துவத்தின் குறிக்கோள் ‘குறைந்தபட்ச அரசை’த் தருவதுதான். சமத்துவத்தை இரும்புக்கை கொண்டு ஸ்டாலின் பிரகடனம் செய்தார்; வம்சாவளியாக வரும் சாதி ரீதியான ஏற்றத்தாழ்வுகளை நீடிக்கச்செய்வதில் இந்துத்துவம் முனைப்போடு இருக்கிறது.

சிந்தாந்த ரீதியாக முற்றிலும் மாறுபட்ட முனைகளில் அமர்ந்துள்ள இவ்விரு ஆட்சிகளும் நகைச்சுவைக்கு எதிராக ஒரேமாதிரியான எதிர்வினை புரிவதேன்?

ஒடுக்கப்பட்ட பிரிவினரின் ஒற்றுமைக்கான ஆதாரமே நகைச்சுவைதான் என்பது மிகத் தெளிவான விஷயம். “நகைச்சுவையின் மதிப்பை ஸ்டாலினின் கொடுங்கோலாட்சியின் போதுதான் கற்றுக்கொண்டேன்.” என்கிறார் குந்தேரா. “சிரிப்பை வைத்தே ஸ்டாலினின் ஆதரவாளர்களை என்னால் கண்டுபிடிக்க முடியும்; அவர்களிடம் எனக்கு பயமில்லை. அங்கீகரிப்பின் நம்பிக்கையான அறிகுறியே நகைச்சுகை உணர்வு. நகைச்சுவை உணர்வை இழந்துவரும் உலகைப் பற்றி நினைத்தாலே எனக்கு பயமாக உள்ளது,” என்றும் அவர் கூறுகிறார். Oppressive governments hate humor

நகைச்சுவையானது எதிர்ப்பைத் தெரிவிக்கும் கருவியாகவும் உள்ளது. ‘தி ஜோக்’ நாவலில் கட்சி அனுதாபி ஒருவர் கூறுவதுபோல “உலகையே மாற்ற உருவான எந்த இயக்கமும் தான் எள்ளி நகையாடப்படுவதைத் தாங்கிக்கொள்ளாது.”

ஸ்டாலினிஸத்திலும் இந்துத்துவத்திலும் ஒற்றுமையும் சுதந்திரமும் தலைகீழாக்கப்படுகின்றன. குடிமக்களிடையே நிலவும் இணக்கமே ஒற்றுமை என்பதாக அல்லாமல் அதிகாரத்தில் இருப்போருடன் மறைமுக ஒப்பந்தத்தில் இருப்பதே ஒற்றுமை எனக் காட்டப்படுகிறது. உதாரணமாக, மும்பையில் ஷிண்டேவுடன் காட்டிய ‘ஒற்றுமைக்காக’ கம்ரா மீது தாக்குதல் நடத்திய ரவுடி கும்பலுக்கு ‘பரிசுகள்’ கிட்டுமென எதிர்பார்க்கப்படுகிறது. Oppressive governments hate humor

இரு அரசுகளிலும் அதிருப்தி தெரிவிப்போருக்குத் தொந்தரவளிக்க அரசுக்கும் அதன் அடியொற்றிகளுக்கும் எல்லையற்ற சுதந்திரம் உள்ளது. தனிமனிதச் சுதந்திரத்தைத் தொடர்ந்து கட்டுப்படுத்திவந்தால், அதனால் தொந்தரவுக்குள்ளாவோர் அரசின் கண்காணிப்பிலிருந்து தப்புவதற்காகத் தமது எண்ணங்களை வெளிப்படுத்துவதையும் அதிருப்தியைக் காட்டும் செயல்களையும் குறைத்துக்கொள்ளத் தொடங்கிவிடுவார்கள்.

மும்பையில் படப்பிடிப்பு நடந்த இடம் நொறுக்கப்பட்டு பின்னர் அரசு அனுமதியுடன் கட்டிடம் இடிக்கப்பட்டவுடன் “எமக்கும் எமது சொத்துகளுக்கும் அபாயம் ஏற்படாத வகையில் சுதந்திரமாகக் கருத்து வெளியிடும் மேடையைக் கண்டுபிடிக்கும்வரை” தமது நிகழ்ச்சிகளைக் கைவிடுவதாக நிகழ்ச்சியை நடத்துபவர்கள் அறிவிப்பு வெளியிட்டனர்.

நகைச்சுவை, நம்பிக்கை, சுதந்திரம் நசுக்கப்பட்டு மனிதாபிமானமற்ற சமூகம் உருவாகும் இந்த பயம் கலந்த விளைவைத்தான் இந்துத்துவக் கூட்டணி எதிர்பார்க்கிறது. “(விளையாட்டு, அன்பு, நட்பு, நகைச்சுவை அடங்கிய) மனித நடத்தைக்கும் (சிரிக்க மறந்து விட்ட) மனிதத்தன்மை அற்ற நடத்தைக்கும்இடையிலுள்ள பதைபதைப்பை நகைச்சுவையான நிகழ்வுகள் வெளிக்கொணர்கின்றன,” என்று உறுதிபடக் கூறுகிறார் குந்தேராவின் நாவலில் வரும் கல்வியாளர் பர்ட் ஃபெயின்டச்.

மேற்சொன்ன இரு ஆட்சியாளர்களுக்கு இடையிலுள்ள ஒற்றுமைகள் அன்றாட அரசியல் நடைமுறைகளிலும் சமூகம் பற்றிய நமது கற்பனையிலும் நீங்காத முத்திரையைப் பதித்துவிட்டன.

ஸ்டாலினின் அரசுக்கும் இந்துத்துவத்திற்கும் நகைச்சுவை என்பது மோசமானது. குடிமக்களின் சிரிப்பு என்ற மிகச் சாதாரண செயல்பாடானது கொடுங்கோலாட்சி என்ற கட்டிடத்தையே ஆட்டுவிக்கிறது. Oppressive governments hate humor

கட்டுரையாளர் குறிப்பு:

ராஜேந்திரன் நாராயணன்பெங்களூரு நகரின் அஸீம் ப்ரேம்ஜி பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகப் பணிபுரிகிறார்.

நன்றி: ஸ்க்ரால் இணைய இதழ்

தமிழில்: சுப்ரஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share