ஆளுநரின் அதிகாரம் பற்றி எல்லாம் திமுக எப்போது பேச ஆரம்பித்தது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி 100 கோடி ரூபாய் மோசடி செய்ததாக பிடி அரசகுமார் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கில் முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடர்புடைய இடங்களிலும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சோதனை செய்தனர்.
இந்த வழக்கில் சென்னையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, போலீசாரின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அவரிடம் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
இந்த நிலையில் தன் மீது பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர்-ஐ ரத்து செய்ய கேட்டு அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் காவல்துறை பதிலளிக்க அக்டோபர் 12ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி நீதிபதி லட்சுமி நாராயணன் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் தன் மீது ஊழல் வழக்கு பதிவு செய்ய முடியாது என்பதால் ரத்து செய்ய வேண்டும் என்று அன்பில் மகேஷ் தரப்பு வழக்கறிஞர், ரிச்சர்ட் வாதம் முன் வைத்தார்.
அப்போது நீதிபதி, ‘ஆளுநரின் அதிகாரம் குறித்தெல்லாம் திமுக எப்போது பேச ஆரம்பித்தது? ஆளுநர் பதவி என்பது ஆட்டு தாடியை போல தேவையற்றது என்று தானே திமுக கூறும்.
திமுக-வை பொறுத்தவரை ஆளுநர் பதவி என்ற ஒன்றே தேவை இல்லாதது தானே? என்று கேள்விகளை எழுப்பினார்.
தொடர்ந்து வழக்கு விசாரணையை அக்டோபர் 29ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
