இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி கட்சியினர் தற்போது டெல்லியில் உச்ச நீதிமன்றம் நோக்கி பேரணி நடத்தி வருகின்றனர். இதனால் தலைநகர் டெல்லியில் பதற்றம் நிலவி வருகிறது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்தக் குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையமும் பாஜகவும் மறுத்து வருகின்றன.
அதே நேரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை நிறுத்த வேண்டும், மீண்டும் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில், ‘சலோ டெல்லி – ஜனநாயகத்துக்கான பேரணி’ என்ற பெயரில் உச்ச நீதிமன்றம் நோக்கி இன்று பேரணி நடத்தப்படும் என்று ராகுல் காந்தி அறிவித்திருந்தார்.
இதன்படி, டெல்லியில் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மமதா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் டி.ராஜா உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணியில் பங்கேற்றுள்ளனர். தேசியக் கொடிகளை உயர்த்திப் பிடித்தும் அரசியலமைப்புச் சட்டப் புத்தகங்களைக் கைகளில் ஏந்தியும் ஆயிரக்கணக்கானோர் இந்தப் பேரணியில் கலந்து கொண்டுள்ளனர்.
பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ஆகியோருக்கு எதிராகவும் இந்த பேரணியில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த பேரணியையொட்டி டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதிவிரைவுப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பேரணியின் முடிவில் உச்சநீதிமன்றத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக ராகுல் காந்தி மனுத் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளார்.
