புதிதாக அமைந்திருக்கும் த.வெ.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் அமைச்சரவை கூட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று (ஜூன் 5) கூட்டினார். சுமார் ஒரு மணி நேரம் இந்த கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 436 திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார், ”
தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நிறைவடைந்துள்ளது.
தமிழகத்தின் தொலைநோக்குத் திட்டங்களாக ஒவ்வொரு துறைக்கும் சேர்த்து மொத்தம் 436 திட்டங்களை முதல்வர் வழங்கியுள்ளார்.
ஒவ்வொரு துறையும் எதை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதற்கான இலக்குகளை முதல்வர் நிர்ணயித்துள்ளார்.
அந்தந்த துறை அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசித்து இந்தத் திட்டங்களை எவ்வளவு நாட்களில் விரைவாகச் செயல்படுத்த முடியும் என்பதற்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரித்து, முதல்வரின் ஒப்புதலோடு பணிகளை மேற்கொள்வார்கள்.
இளைஞர்கள் மற்றும் மகளிரின் மேம்பாடு, விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வளர்ச்சி, லஞ்சமில்லாத நல்லாட்சி மற்றும் போதை இல்லாத தமிழகத்தை உருவாக்குவது ஆகியவை இந்தத் திட்டங்களின் முக்கிய நோக்கங்களாகும்.
தொழில் நிறுவனங்கள் மூலம் எவ்வாறு அதிகப்படியான வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்பது குறித்தும், விவசாயிகள் மற்றும் பெண்களின் முன்னேற்றம் குறித்தும் ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன
இதில் தேர்தல் வாக்குறுதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன
தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் கஞ்சா, மெத்தபெட்டமைன், சிந்தெடிக் டிரக்ஸ் போன்ற போதைப்பொருட்களும், பள்ளி மாணவர்கள் வரை குட்கா போன்ற பொருட்களும் அதிகம் புழக்கத்திற்கு வந்துள்ளன.
போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் வகையில் முதல்வர் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோதமாக குட்கா விற்கும் கடைகளுக்குச் சீல் வைக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது குண்டாஸ் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடகா எந்த முயற்சி எடுத்தாலும், அதனைச் சட்டப்பூர்வமாகத் தடுப்பதற்கான அனைத்து வழிகளையும் மேற்கொள்ளுமாறு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். அதற்கான சட்ட ஆலோசனைகளும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
அமைச்சர்கள் அனைவரும் தங்கள் துறைக்கு வழங்கப்பட்டுள்ள இலக்குகளைத் தீவிரமாக ஆராய்ந்து, அதற்கான செயல் வடிவத்தைக் கொண்டு வந்து, முதல்வரிடம் பிரசென்டேஷன் செய்து ஒப்புதல் பெற்ற பிறகு திட்டங்களைச் செயல்படுத்துவார்கள்” என்று கூறினார்.
