“உங்க வீட்டில் என்ன கஷ்டம் வந்தது? உங்க குழந்தை…” – செய்தியாளர்களிடம் ஆவேசமடைந்த அமைச்சர் செங்கோட்டையன்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Sengottaiyan

“தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்த 20 நாட்களில் என்ன சட்டம்-ஒழுங்கு பிரச்சனை வந்தது? உங்கள் வீட்டில் என்ன கஷ்டம் வந்தது? உங்கள் குழந்தை…” என அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் ஆவேசமாகப் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை விமான நிலையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று (ஜூன் 5) இரவு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ” தென்மேற்கு பருவமழையைப் பொறுத்தவரை, அனைத்துத் துறைகளின் சார்பாக மாவட்ட வாரியாக உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. வயநாடு நிலச்சரிவு போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் எதிர்காலத்தில் நடக்காதவாறு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT

பா.ஜ.க.விலிருந்து விலகிய அண்ணாமலை தமிழகத்தில் புதிய இயக்கம் தொடங்குவது குறித்த கேள்விக்கு, “இதுபோன்ற கேள்விகளைக் கேட்கக் கூடாது என முதலிலேயே சொல்லிவிட்டேன். இதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “இன்று காலையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அடுத்த ஐந்தாண்டுகளில் எப்படிச் செயல்பட வேண்டும் என முதல்வர் ஒவ்வொரு துறையையும் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்” என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்பட்டது குறித்த கேள்விக்கு, “எங்கெங்கே முறைகேடுகள் நடைபெறுகின்றன என்பதை எங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்தால், உங்கள் மூலமாகத் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். நீங்கள் கேள்விகள் மட்டும் கேட்டுவிட்டுச் செல்வதைத் தவிர்த்து, எங்கே தவறு நடைபெறுகிறதோ அதை ஊடகங்கள் சுட்டிக்காட்டினால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை குறித்த கேள்விக்கு, “ஒரு பிரச்சனையும் கிடையாது. 20 நாட்களில் என்ன சட்டம்-ஒழுங்கு பிரச்சனை வந்தது? உங்கள் வீட்டில் என்ன கஷ்டம் வந்தது? உங்கள் குழந்தை ஏதாவது… சும்மா ஏதாவது கேள்வி கேட்கக் கூடாது” என ஆவேசமாகப் பேசினார். மேலும், “6 மாத காலத்திற்கு இந்த அரசு தன்னிச்சையாகச் செயல்படட்டும், அதன் பிறகுதான் கேள்வி கேட்போம் என்று எதிர்க்கட்சிகள் கூறின. அப்படியிருக்க, உங்களைப் போன்றவர்கள் (ஊடகங்கள்) இப்போது கேள்வி கேட்பது வேடிக்கையாக இருக்கிறது” என செங்கோட்டையன் தெரிவித்தார்.

ADVERTISEMENT

“ஆட்சிக்கு வந்தவுடன் கேள்வி கேட்டால் மிரட்டுகிறீர்களா?” என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், செய்தியாளர்களை நோக்கி மீண்டும் திரும்பி வந்த அமைச்சர் செங்கோட்டையன், “இந்த மாதிரி எல்லாம் கேட்கக் கூடாது. யாரையும் நான் மிரட்டவில்லை. சட்டம்-ஒழுங்கு பிரச்சனையில் கடுமையான நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். சூலூர் பகுதியில் நடந்த குற்றத்திற்கு 24 மணி நேரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது. பொத்தாம் பொதுவாகச் சொல்லக் கூடாது. மிரட்டும் தொனி எங்களிடம் இல்லை. நாங்கள் மென்மையான குணம் கொண்டவர்கள். எங்கள் தொனி எதுவும் மாறவில்லை. அரசுக்குக் குறிப்பிட்ட கால அவகாசம் கொடுக்க வேண்டும். முதல்வர் படிப்படியாகச் செய்துகொண்டிருக்கிறார். அதற்கு ஒரு டைம் கொடுக்க வேண்டும். கேள்வி கேட்பது சுலபம், பதில் சொல்வதில் எங்களைப் போன்றவர்களுக்கு இருக்கும் கஷ்டங்களை உணர வேண்டும்” என்றார்.

சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த கேள்விக்கு, “எங்களைப் பொறுத்தவரையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதுதான் எங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள விஷயம். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் மட்டும்தான் இலக்கை அடைய முடியும்” என்றார்.

அண்ணாமலையின் புதிய அமைப்பு குறித்த கேள்விக்கு, “ஒவ்வொருவருக்கும் இயக்கம் தொடங்குவதற்கு ஜனநாயக உரிமை உண்டு. அவர் அந்த உரிமையை நிலைநாட்டியிருக்கிறார். அவருக்கு இருக்கும் வேதனை என்ன? பா.ஜ.க.விலிருந்து வந்திருக்கிறார். அவர் என்ன செய்யப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

“சட்டம்-ஒழுங்கு என்பது பெரிய விஷயம். வளர்ந்து வரும் நகரில் போதைப்பொருள் நடமாட்டத்தைத் தடுத்து வருகின்றோம். ஒருவர் வீட்டை காட்டுக்குள் கட்டியிருக்கிறார் என்றால் அவருக்கு எப்படிப் பாதுகாப்பு கொடுப்பது?” எனக் கேள்வி எழுப்பிய அவர், “தனியாக வசிப்பவர்களுக்கு எப்படிப் பாதுகாப்பு கொடுப்பது என்பதை ஒவ்வொன்றாகத்தான் பார்க்க முடியும். இதுபோன்ற குற்றச்சாட்டுகள் வரும்போது அதை எப்படிச் சரி செய்வது என்பதைக் கூர்ந்து கவனித்துதான் முடிவு செய்ய முடியும்” எனத் தெரிவித்தார்.

மேகதாது அணை குறித்த கேள்விக்கு, “முதல்வர் பிரதமரைச் சந்திக்கும்போது, காவிரி நீர் விவகாரத்தில் மேகதாது அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்; சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்” என்றார்.

இந்தியா கூட்டணி கூட்டத்திற்கு அழைப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு, “கூட்டணி அமைச்சரவை தற்போதுதான் உருவாகியிருக்கிறது. அதில் என்ன வாக்குறுதிகளைக் கொடுத்தோமோ அதை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றோம். காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், ஐ.யு.எம்.எல். ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன. எங்களைப் பொறுத்தவரையில் திறந்த மனதுடன் இருக்கின்றோம். நாங்கள் இதற்கெல்லாம் பதில் சொல்வதைக் காட்டிலும், எங்களது கூட்டணியில் இருப்பவர்கள் நேரடியாகத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது” என்றார்.

‘தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு, “அப்படி ஒன்றும் இல்லை. எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் வந்தது வேறு. அந்த மாதிரி எந்தப் பெயரும் வைக்கவில்லை” என விளக்கம் அளித்தார்.

“தவெக அமைச்சர்கள் பொறுப்பற்றவர்கள் என செந்தில் பாலாஜி பேசியிருப்பது குறித்த கேள்விக்கு, “செந்தில் பாலாஜி கருத்துக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. அமைச்சர்கள் பொறுப்பற்றவர்கள் என்று சொல்வதற்கு அவருக்குத் தகுதி இல்லை. அவரால் ஏன் தொடர்ந்து அமைச்சராக இருக்க முடியவில்லை என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும். அவர் அமைச்சரவையில் இடம்பெற முடியாமல் போனதற்கு உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதற்கு அவர் பதில் சொல்ல வேண்டும்” என்றார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share