திமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பொறுப்பு வகித்த நகராட்சி நிர்வாகத் துறையில் பணி நியமனங்களில் முறைகேடு நடந்திருப்பதாக தமிழக டிஜிபிக்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியது.
இதைத்தொடர்ந்து கே.என்.நேரு மீது உடனடியாக வழக்குப்பதிய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் இன்பதுரை எம்.பி வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை செயல்படுத்தவில்லை என நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடர்ந்தார்.
இந்தசூழலில் ஆட்சி மாறிய நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக அருண் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டார்.
தற்போது நகராட்சி நிர்வாகத் துறையில் நடந்த பணி நியமனம் முறைகேடு விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இதுத்தொடர்பான தகவலை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் தெரிவித்தார்.
அப்போது, ”இந்த முறைகேடு தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. எப்படி வழக்குப்பதிவு செய்தீர்கள்?’ என கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம் ஜூன் 23ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வரும் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று கூறியுள்ளது.
இந்தசூழலில் விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் திருமாவளவனிடம் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அவர், ”நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி வழக்கு பதியப்பட்டுள்ளது என்றால் இதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக சொல்ல முடியாது” என்று பதிலளித்துள்ளார்.
