2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு இந்தியா முழுதும் 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையில் முறைகேடு என்று ஒரு புயல் வீசியது. அப்போது காங்கிரஸ் கூட்டணி அரசில் அங்கம் வகித்த தகவல் தொடர்புத் துறை அமைச்சரான ஆ.ராசாவை மையம் கொண்ட இந்த புயல் அவரை சிறையில் தள்ளியது. கனிமொழியை சிறையில் தள்ளியது. காங்கிரஸ் ஆட்சியை 2014 இல் முடிவுக்குக் கொண்டுவருவதிலும் அந்த புயல் பெரும் பங்காற்றியது.
இப்போது ..?
5ஜி மெகா மோசடி: ஆ.ராசா
இந்த ஏலம் நடந்து முடிந்த பிறகு ஆகஸ்டு 4 ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் தகவல் தொடர்புத் துறை அமைச்சரும், 2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறை சென்று வழக்கை வென்று வந்திருப்பவருமான ஆ.ராசா சில முக்கியமான தகவல்களை முன் வைத்தார்.

“5ஜி அலைக்கற்றை ரூ.5 லட்சம் கோடிக்கு ஏலம் போகும் என அரசு சொன்னது. ஆனால் ரூ.1½ லட்சம் கோடிக்குத்தான் ஏலம் போய் இருக்கிறது. 2ஜி அலைக்கற்றை வெறும் 30 ‘மெகா ஹர்ட்ஸ்’தான் (அதிர்வெண் அளவு) ஏலம் விடப்பட்டது.
அதை தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில் கொடுத்தபோது ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி நஷ்டம் என கணக்கு மற்றும் தணிக்கைத்துறை தலைவர் வினோத் ராய் அறிக்கை அளித்தார்.
2ஜி-யை விட 5ஜி 20 மடங்கு அதிக திறன் வாய்ந்தது. 2ஜி-யில் வெறும் குரல்தான் சென்றது. 3ஜி-யில் வீடியோ வந்தது. இப்போது 5ஜி-யில் எந்த ஒரு இணைய தேடுதலாக இருந்தாலும் ஒரு நொடியில் வந்துவிடும். இந்த திறன் அடிப்படையில் பார்த்தால் ரூ.5 லட்சம் கோடி அல்லது ரூ.6 லட்சம் கோடிக்கு ஏலம் போயிருக்க வேண்டும்.
ஆனால் போகவில்லை. அப்படியானால் திட்டமிடுதலில் மோசமா? நான்கைந்து கம்பெனிகளோடு சேர்ந்து மத்திய அரசு கூட்டு சதி செய்ததா?.
இதுகுறித்து விசாரிக்கப்பட வேண்டும். 2ஜி-க்கும், 5ஜி-க்கும் உள்ள வித்தியாசத்தை பார்த்தாலே எவ்வளவு பெரிய மோசடியை வினோத்ராய் செய்திருக்கிறார் என்பது தெரியும். அவர் யாருக்காக இதை செய்து இருக்கிறார்?.
ஒரு ஆட்சி மாற்றத்துக்காக அவரது பின்னால் யார் யாரெல்லாம் இருந்தனர்? என்பதை விசாரிக்க வேண்டும். இதற்கு அரசு முன்வரவில்லை என்றால், இந்த அரசு நிச்சயமாக மாறும். அப்படி மாறும்போது அடுத்து வருகிற அரசாங்கமாவது விசாரித்து நாட்டுக்கு உண்மையை சொல்ல வேண்டும். இது ஒரு மிகப்பெரிய மோசடி” என்று டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் ஆ.ராசா.
5ஜி ஏலத்தில் என்ன நடந்தது? 2ஜியில் ஏற்பட்டது இழப்பு, ஊழல் என்றால் 5 ஜியில் நடப்பது என்ன? இந்தக் கேள்விகளை அறிந்துகொள்வதற்கு முன் 2ஜியில் என்ன நடந்தது என்ற பிளாஷ்பேக்கை பார்த்துவிடுவோம்.
2ஜியில் நடந்தது என்ன?
2008 ஆம் ஆண்டு 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஏலம் நடந்தது. 2ஜி என்பது அலைபேசிகளில் குரல் வழி அழைப்புக்கு மட்டுமே பயன்பட்டது. அப்போதைய தகவல் தொடர்புத் தேவைகளுக்கேற்ப 30 மெகா ஹர்ட்ஸ் 2ஜி அலைக்கற்றை ஏலம் விடப்பட்டது. அது அப்போது 9 ஆயிரத்து 16 கோடி ரூபாய்க்கு விற்பனையானது.
வெறும் குரல் அழைப்புகளுக்கான தொழில் நுட்பமே அப்போது இருந்த நிலையில் 2ஜி அலைக்கற்றை இந்த விலைக்கு விற்பனையானது. இந்த ஏலம் முழுக்க முழுக்க தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடத்தப்பட்டதாக அப்போதைய துறை அமைச்சர் ஆ.ராசா தெரிவித்தார்.
ஆனால் அப்போதைய சிஏஜி (கணக்குத் தணிக்கைக் குழு காம்ப்ட்ரோலர்) வினோத் ராய், இந்த ஏலத்தின் மூலம் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக அறிக்கை அளித்தார்.
மேலும் அப்போது நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுத் தலைவராக இருந்த முரளி மனோகர் ஜோஷி தனது வரம்பை மீறி 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிஏஜி அறிக்கை தயாரித்துக் கொண்டிருக்கும்போதே, கணக்கு தணிக்கை அதிகாரிகளை சந்தித்து அழுத்தம் கொடுத்ததாக சிஏஜி முன்னாள் அதிகாரி ஆர்.பி சிங் பிற்பாடு தெரிவித்தார்.
இந்த வழக்கு சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து முடிந்து இழப்பு ஏற்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று ஆ.ராசா உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். அந்த தீர்ப்புக்கு எதிரான மேல் முறையீடு சட்ட நடவடிக்கைகளை செய்திருக்கிறது தற்போதைய பாஜக அரசு.
இப்போது 5ஜியில் என்ன நடந்திருக்கிறது?
2008 ஆம் ஆண்டு 2ஜி வெளிப்படையாக நடந்த ஏலத்தின் மூலம் 9 ஆயிரத்து 016 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அன்று இந்திய அரசு விற்பனை செய்தது வெறும் 30 மெகா ஹர்ட்ஸ் அலைக்கற்றைகளைத்தான்.
ஆனால் இன்று 2022 இல் 5ஜி தொழில் நுட்பத்தில் சுமார் 51 ஜிகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றைகளை விற்பனை செய்திருக்கிறது. ஒரு ஜிகா ஹெர்ட்ஸ் என்றால் ஆயிரம் மெகா ஹர்ட்ஸ் ஆகும். அப்படிப் பார்த்தால் இப்போது 51 ஆயிரம் மெகா ஹர்ட்ஸ் அலைக்கற்றைகள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன.

அரசின் செய்திப்படி, மத்திய அரசு 72 ஆயிரத்து 98 மெகா ஹர்ட்ஸ் அதாவது 72 ஜிகா ஹர்ட்ஸ் அலைக்கற்றைகளை ஏலத்தில் வைத்தது. ஆனால் அதில் 71 சதவிகிதம்தான் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அதாவது 51 ஆயிரத்து 236 மெகா ஹர்ட்ஸ் அலைக்கற்றைதான் ஏலம் போயிருக்கிறது.
தற்போது விற்பனை செய்யப்பட்ட 51 ஆயிரத்து 236 மெகா ஹர்ட்ஸ் அலைக்கற்றை 2008 ஆம் ஆண்டு விற்பனை செய்யப்பட்ட விலைக்கே விற்றிருந்தால் கூட அரசுக்கு கிடைத்திருக்க வேண்டிய தொகை ஒரு கோடியே 53 லட்சத்து 94 ஆயிரத்து 710 கோடி ரூபாய்கள். 2008 ஆம் ஆண்டு விலைக்கே விற்றால் கூட இவ்வளவு கிடைத்திருக்க வேண்டும். ஆனால் 2022 ஆம் ஆண்டு 51 ஆயிரத்து 236 மெகா ஹர்ட்ஸ் அலைக்கற்றை விற்பனை செய்ததால் அரசு பெற்ற தொகை வெறும் 1 லட்சத்து 50 ஆயிரத்து 173 கோடி ரூபாய் மட்டுமே. இது 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்ற விலையில் நூறில் ஒரு பங்கு மட்டுமே.
ஏலம் எடுத்தவர்கள் யார் யார்?

1 லட்சத்து 50 ஆயிரத்து 173 கோடி ரூபாய் ஏலம் போனதில் அதானி குழுமம் 212 கோடி ரூபாய், ஏர்டெல் நிறுவனம் 43,084 கோடி ரூபாய், ஜியோ நிறுவனம் 88 ஆயிரத்து 78 கோடி ரூபாய், வோடஃபோன் நிறுவனம் 18, 799 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளன. இவை அனைத்தும் சேர்ந்து வருடத்துக்கு அரசுக்குக் கட்ட வேண்டிய வருடாந்திர தவணைத் தொகை 13 ஆயிரத்து 365 கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
2ஜி ஏலம் 5ஜி ஏலம்: ஏலம் நடத்துபவர்கள் யார்?
2ஜி ஏலம் 2008 ஆம் ஆண்டு நடந்தபோது சர்வதேச நிறுவனங்களிடம் நம்பிக்கையைப் பெறுவதற்காக ஏலம் நடத்துபவராக அதாவது auctioneer ஆக உலகளாவிய முதலீட்டு வங்கி நிறுவனமான NM Rothschild நிறுவனம் நியமிக்கப்பட்டது. அதாவது வெளிப்படையாகவும் அரசு எந்த இடையீட்டுதலையும் செய்யவில்லை என்பதை நிறுவும் விதமாகவும் இதுபோன்ற சர்வதேச தரம் வாய்ந்த நிறுவனம் மூலம் ஏலம் நடத்தப்பட்டது.

ஆனால் இப்போது 2022 இல் மத்திய அரசு நிறுவனமான மெட்டல் ஸ்க்ரேப் ட்ரேடிங் கார்ப்பரேஷன் (Metal scrap trading corporation) என்ற நிறுவனம்தான் ஏலம் நடத்துபவராக இருந்துள்ளது. மோடியின் அமைச்சரவையில் இருக்கும் இரும்புத் துறை அமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நிறுவனம் 5ஜி ஏலத்தை நடத்துபவராக இருந்துள்ளது. சர்வதே நிறுவனங்கள் கலந்துகொள்ளும் 5ஜி ஏலத்தை இந்திய இரும்பு அமைச்சகத்துக்கு உட்பட்ட ஒரு நிறுவனம் எப்படி நடத்த முடியும்? எனவே இதில் வெளிப்படைத் தன்மை இல்லை என்றும் புகார்கள் எழுகின்றன.
ஏலத் தொகையை கட்டுவது, வருவாயில் பங்கு என்னாச்சு?
மேலும், ஆ.ராசா அமைச்சராக இருந்தபோது 2008 இல் நடந்த 2ஜி ஏலத்தில் ஏலம் எடுத்தவர்கள் அதற்கான தொகையை உடனடியாக அரசுக்கு செலுத்திட வேண்டும் என்ற விதிமுறை இருந்தது. மேலும், ஏலம் எடுத்த நிறுவனங்கள் தங்கள் லாபத்தில் அரசுக்கு பங்கு தர வேண்டும் அதாவது ரெவின்யூ ஷேர் தர வேண்டும் என்ற விதிமுறை இருந்தது.

ஆனால் 2022 இல் நடந்திருக்கும் 5ஜி ஏலத்தில் ஏலம் எடுத்த நிறுவனங்கள் அதற்கான தொகையை 20 வருடங்கள் வரை அரசுக்கு செலுத்தலாம் என்று நிபந்தனை மாற்றப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு ஏற்கனவே ஏற்பட்ட இழப்பைத் தாண்டி கூடுதல் இழப்பு ஏற்படும். அதுமட்டுமல்ல, 5ஜி ஏலத்தில் ஏலம் எடுத்த நிறுவனங்கள் தங்கள் லாபத்தில் அரசுக்கு பங்கு தரவேண்டும் என்ற நிபந்தனை முற்றிலுமாக நீக்கப்பட்டிருக்கிறது.
2ஜி விலை 5ஜி விலை ஒப்பீடு:

2008 இல் 2ஜி அலைக்கற்றை விற்ற விலையில் நூறில் ஒரு பங்கு மட்டுமே 2022 இல் 5ஜி அலைக்கற்றை விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பார்த்தால் 2ஜியில் நட்டம் ஏற்பட்டதாக வினோத் ராய் கூறியதை விட நூறு மடங்கு அதிக நட்டம் இப்போது 5ஜியில் ஏற்பட்டிருக்கிறது. எனவே இப்போது 5ஜி ஏலம் நடத்தப்பட்டது குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
அன்று 2ஜி ஒதுக்கீட்டில் நட்டம் ஏற்பட்டதாக சொன்ன வினோத் ராய் சொன்னது உண்மை என்றால் இப்போதைய ஏலத்தில் அதை விட 100 மடங்கு அதிக நட்டம் ஏற்பட்டிருப்பதும் உண்மை, அதேபோல் இப்போது நடந்திருப்பது நியாயம்தான் என்றால் 2ஜி ஏலத்தில் நடந்ததும் நியாயம்தான் என்கிறார்கள் எதிர்க்கட்சியினர்.
–வேந்தன்
இன்னும் ஒரு மாநிலம்தான்… தேசிய கட்சி அந்தஸ்து நோக்கி ’ஆம் ஆத்மி’
