உடல் எடையை சீக்கிரமாகக் குறைக்க வேண்டும் என்ற ஆசையில், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எடை குறைப்பு மாத்திரைகள் மற்றும் சப்ளிமெண்ட்களை எடுத்துக்கொள்வது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்படுகிறது.
குறிப்பாக வேகமாக எடை குறைய வேண்டும் என்பதற்காக இவற்றை தொடர்ந்து பயன்படுத்துவது உடலின் இயல்பான செயல்பாடுகளையே பாதிக்கக்கூடும்.
முதலில் வரும் செரிமானப் பிரச்சினைகள்
எடை குறைப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ளும்போது வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், நெஞ்செரிச்சல், வயிறு உப்புசம் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். சிலருக்கு கடுமையான குமட்டல் மற்றும் வாந்தியும் உண்டாகும்.
மருந்தின் தாக்கத்தால் பசி குறைவதால், உணவு எடுத்துக்கொள்ளும் அளவும் குறையும். இதனால் உடல் சோர்வு, பலவீனம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது.
கணைய அழற்சி முதல் பித்தப்பை கற்கள் வரை
மருத்துவ கண்காணிப்பு இல்லாமல் எடை குறைப்பு மருந்துகளை பயன்படுத்துவது இன்னும் தீவிரமான பிரச்சினைகளை உருவாக்கலாம். கணையத்தில் அழற்சி (Pancreatitis) ஏற்படுவதுடன், வேகமாக உடல் எடை குறைவதால் பித்தப்பையில் கற்கள் உருவாகும் அபாயமும் அதிகரிக்கலாம்.
சில சப்ளிமெண்ட்கள் உடலில் நீரிழப்பை ஏற்படுத்தி சிறுநீரகங்களையும் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.
கொழுப்பு மட்டுமல்ல… தசையும் குறையும்!
எடை குறையும்போது கொழுப்பு மட்டும் குறைய வேண்டும் என்பதே ஆரோக்கியமான முறையாகும். ஆனால் மருந்துகளை மட்டுமே நம்பி எடை குறைக்க முயற்சித்தால் தசை நார்களும் குறையக்கூடும். இதனால் உடல் பலவீனமாகி, சோர்வு அதிகரிக்கலாம்.
எனவே விளம்பரங்களை நம்பி சுயமாக மாத்திரைகளை எடுத்துக்கொள்வதை தவிர்த்து, மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டுமே எடை குறைப்பு சிகிச்சையை மேற்கொள்வது பாதுகாப்பானது. முறையான உணவு, உடற்பயிற்சி மற்றும் போதிய தூக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதே நீண்ட காலத்திற்கு உதவும்.
