இனி 2 மணி நேரம் மட்டுமே! குழந்தைகள் இன்ஸ்டா, ஃபேஸ்புக் பயன்படுத்த மெட்டா வைத்த புதிய செக்

Published On:

| By Minnambalam Desk

அமெரிக்காவில் 18 வயதுக்குட்பட்ட சிறார்கள் இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் பயன்படுத்துவதற்கு புதிய கட்டுப்பாடுகளை மெட்டா நிறுவனம் கொண்டு வந்துள்ளது.

இதன்படி, இரண்டு செயலிகளையும் சேர்த்து ஒரு நாளைக்கு அதிகபட்சம் 2 மணி நேரம் மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த வரம்பை பெற்றோரின் அனுமதி இல்லாமல் மாற்ற முடியாது.

ADVERTISEMENT

நள்ளிரவு முதல் காலை வரை தடை

புதிய விதிகளின்படி, நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் பயன்பாடு முடக்கப்படும். இந்த நேரத்தில் பதிவுகளைப் பார்ப்பது, ஸ்டோரிஸ், ரீல்ஸ் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதற்கும் தடை இருக்கும்.

ADVERTISEMENT

மேலும், 2 மணி நேர பயன்பாட்டு வரம்பு இரண்டு செயலிகளுக்கும் தனித்தனியாக கிடையாது. இரண்டிலும் செலவிடும் நேரம் ஒன்றாகக் கணக்கிடப்படும்.

பள்ளி நேரத்தில் நோட்டிபிகேஷன் கிடையாது

ADVERTISEMENT

திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை சிறார்களின் மொபைல்களுக்கு வரும் புஷ் நோட்டிபிகேஷன்கள் இயல்பாகவே முடக்கப்படும். இருப்பினும், நேரடி மெசேஜ்கள் மற்றும் கணக்கு பாதுகாப்பு தொடர்பான முக்கிய அறிவிப்புகள் மட்டும் விதிவிலக்காக இருக்கும்.

தொடர்ந்து ஸ்க்ரோல் செய்வதைத் தவிர்க்க 15 நிமிடங்களுக்கு ஒருமுறை இடைவேளை எடுக்க நினைவூட்டும் அறிவிப்புகளும் வழங்கப்படும்.

AI மூலம் வயது சரிபார்ப்பு

குழந்தைகள் தவறான பிறந்த தேதியை கொடுத்து கணக்கு தொடங்குவதைத் தடுப்பதற்காக செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான வயது சரிபார்ப்பு முறைகளையும் மெட்டா பயன்படுத்துகிறது. மேலும், சிறார்களுக்கு மனநல பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய உள்ளடக்கங்களின் வெளிப்பாட்டை குறைக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

அமெரிக்காவின் பல மாநிலங்கள் தொடர்ந்த வழக்குகளுக்கு இடையிலான சமரசத்தின் ஒரு பகுதியாகவே இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதேபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை TikTok, YouTube போன்ற தளங்களும் மேற்கொள்ள வேண்டும் என மெட்டா வலியுறுத்தியுள்ளது.


Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share