கேரளா-தமிழ்நாடு எல்லையில் ரயில் மோதிய விபத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பெண் யானை மற்றும் குட்டி யானை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாளையார் சாவடிப்பாரா குடியிருப்புப் பகுதியிலிருந்து வனப்பகுதிக்குத் திரும்பிக்கொண்டிருந்த தாய் யானையும் குட்டி யானையும் புதுப்பதி ரயில் தண்டவாளத்தைப் புதன்கிழமை நள்ளிரவில் கடக்க முயன்றுள்ளன. அப்போது அந்த வழியாக வந்த மங்களூரு – சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் எதிர்பாராதவிதமாக யானைகள் மீது மோதியது.
மோதிய வேகத்தில் யானைகளின் உடல்கள் தண்டவாளத்தில் சுமார் 50 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டன. இதில் யானைகள் இரண்டும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தன. ரயில் வனப்பகுதியில் குறைந்த வேகத்தில் சென்றதால் தடம் புரளாமல் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விபத்தைத் தொடர்ந்து, ரயில் சுமார் 20 நிமிடங்கள் வனப்பகுதியில் நிறுத்தப்பட்டது.
தகவலறிந்த வனச்சரக அலுவலர் ஆர்.எஸ். பிரவீன் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கேரளா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வனத்துறை அதிகாரிகளும், பாலக்காடு ரயில்வே கோட்ட மேலாளர் (DRM) மதுகர் ரவுத் உள்ளிட்ட மூத்த ரயில்வே அதிகாரிகளும் நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.
அதிகாலை 4 மணியளவில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் யானைகளின் உடல்கள் தண்டவாளத்தில் இருந்து மீட்கப்பட்டு, பழுதான ரயில் என்ஜின் சரிசெய்யப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டது.
விபத்து நிகழ்ந்த இடம் தமிழக எல்லையிலிருந்து சுமார் 300 முதல் 400 மீட்டர் தொலைவில் கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. மதுக்கரை வனச்சரகத்தின் ‘பி’ டிராக்கைக் கடந்து பாலத்தின் வழியே வளைவான பாதையில் ரயில் சென்றதால், லோகோ பைலட்டால் யானைகளை முன்கூட்டியே பார்த்துச் சுதாரித்து விபத்தைத் தடுக்க முடியாமல் போனதே காரணம் எனக் கூறப்படுகிறது.
தமிழக வனப்பகுதியில் மதுக்கரை எல்லைக்கு உட்பட்ட இரண்டு ரயில் தடங்களிலும் ரூ.16 கோடி செலவில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கேமராக்கள், ட்ரோன்கள் மூலம் யானைகள் நடமாட்டம் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனால் பெருமளவு விபத்துகள் தவிர்க்கப்படுகின்றன.
ஆனால் இப்போது விபத்து நடந்த பகுதி வாளையார் வனச்சரகத்தின் கீழ் வருகிறது. இங்கு யானைகள் தண்டவாளத்தைக் கடப்பதைத் தடுக்க ரயில்வே பாதுகாப்பு வேலி அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. சில மாதங்களுக்கு முன்பும், வாளையார் மான் பூங்கா பின்புறப் பகுதியில் ரயில் மோதி ஒரு யானை உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2021-ஆம் ஆண்டிலும் இதே மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி, தற்போது விபத்து நடந்த இடத்திற்கு அருகே கருவுற்ற பெண் யானை உள்பட 3 யானைகள் உயிரிழந்தன. இந்நிலையில் உலக யானைகள் தினமான நேற்று இரவில் 2 யானைகள் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
