வைகோவை பின் தொடரும் சர்ச்சைகள்…

Published On:

| By Balaji

மாடக்கண்ணு

ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ எப்போதுமே சென்ஸிட்டிவ்.

ADVERTISEMENT

2006 முதல் 2011 வரை அதிமுக கூட்டணியில் இருந்தார் வைகோ. 2011 சட்டமன்ற தேர்தலில் மதிமுகவுக்கு 6தொகுதிகள் தருவதாக சொன்னது அதிமுக. பின்னர் நடந்த தொடர் பேச்சு வார்த்தைகளில் சின்ன சின்ன முன்னேற்றங்கள். அதிமுகவுடன் கூட்டணியா இல்லையா என முடிவு செய்ய கட்சியினருடன் தாயகத்தில் வைகோ ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தபோது- தாயகத்துக்கு நேரில் வந்தார் ஓபிஎஸ். 12 சீட் தருகிறோம் என்றார் . வைகோ ஏற்கவில்லை. அதனை தற்காலிகமாக ஏற்று ஜெயலலிதாவை சந்தித்திருந்தால் இன்னும் கூடுதல் தொகுதிகள் கிடைத்திருக்கலாம்.

ஆனால் அன்று நடந்த மதிமுக பொதுக்கூட்டத்தில் அதிமுகவையும் ஜெயலலிதாவையும் நாஞ்சில் சம்பத் ஒரு பிடி – பிடித்தார். மறு பக்கத்தில் தாயகத்தில் பேச்சு வார்த்தை. தமிழகமே வைகோ முடிவுக்காக இரவு முழுவதும் காத்திருந்தது. காலை 5 மணிக்கு தேர்தலை மதிமுக புறக்கணிக்கிறது என்று அறிவித்தார்-வைகோ. முதல்நாள் கூட்டத்தில் ஜெ.வை திட்டி தீர்த்த நாஞ்சில் சம்பத் இன்று அதிமுகவில்.இன்னும் சிலர் திமுகவில். இது வைகோ ராசி.

ADVERTISEMENT

இப்போது இந்த தேர்தல் தேதி அறிவிக்க பட்டபின்னர்-வைகோ உணர்ச்சிவசப்பட்டு எடுத்த நடவடிக்கைகள்,அளித்த பேட்டிகள்,வெளியிட்ட அறிக்கைகளை அலசலாம். கடந்த 6ம்தேதி மக்கள் நல கூட்டணி தலைவர்களுடன் தாயகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் வைகோ. மாற்றுகட்சிகளில் இருந்து நிர்வாகிகளை திமுக இழுப்பதற்கு கண்டனம் தெரிவித்த வைகோ, இதை செய்வதற்கு வேறுதொழில் செய்யலாம் என ஆரம்பித்தார். தொடர்ந்து ஆலகாலவிஷம் கலந்து அவர் ,கொட்டிய வார்த்தைகள் -அவரது இமேஜை வெகுவாகவே டேமேஜ் ஆக்கியது.

“இதை செய்வதற்கு வேறு தொழில் செய்யலாம்.நான் சொல்லும் தொழில் ஆதிமனிதன் காலத்தில் இருந்தே இருக்கிறது.இதற்குசிலர் சட்டபூர்வ அங்கீகாரம் கொடுக்கவேண்டும் எனபோராடி வருகிறார்கள். அந்த தொழிலை கருணாநிதி செய்யலாம்.தவறாக நினைக்கவேண்டாம். கருணாநிதிக்கு நாதஸ்வரம் வாசிக்கதெரியும்.அதைத்தான் சொன்னேன் ‘’- என்று தீப்பொறி ஆறுமுகம்,வெற்றிகொண்டான் ஆகியோரின் நாக்குகளை எதிரொலித்தார்.

ADVERTISEMENT

இந்த அநாகரீக கருத்துக்காக-பல்வேறு தரப்பில் இருந்தும் வாங்கி கட்டிகொண்டார். மற்ற கட்சிகளை விட-வைகோவின் கூட்டணி கட்சிகள் வைத்த குட்டுகள்-சத்தமாக இருந்தன.

பதறிப்போனார். அன்று இரவே கடிதம் வாயிலாக கருணாநிதியிடம் மன்னிப்பு கோரினார். அவரது அறிக்கையின் சாராம்சம் இது. “உலகின் ஆதித்தொழில் என்றுஅண்ணன்(கருணாநிதி)குடும்பத்தை குறிப்பிட்டு நான் கூறியதாக கருதுவதற்குஒரு இடம் ஏற்பட்டு விட்டதே என்பதை நினைக்கும்போது என்மேனிமுழுவதும் நடுக்கமுற்றது. என்வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன். அதற்கு மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன்”-காலையில் உணர்ச்சிவசப்பட்டு அளித்த பேட்டிக்கு சற்றும் சளைக்காமல் இருந்தது -அதீத உணர்ச்சி வசப்பட்டு இரவில் எழுதிய மன்னிப்பு கடிதம்.

இது-தேர்தல் நேரம். தேர்தல் அரசியலில் கவனம் செலுத்தாமல் இமானுவேல் சேகரன் கொலைக்கும் முத்துராமலிங்கத் தேவருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என எப்போதோ நிகழ்ந்த சம்பவத்தில் மூக்கை நுழைத்து -தலித் அமைப்புகளின் எதிர்ப்புகளைத் தேர்தல் சீசனில் ஏன் சம்பாதிக்க வேண்டும்?

வேட்புமனுதாக்கல், தேர்தல் பிரச்சாரம் ஆகிய இரு வேலைகளை செய்து முடிப்பதற்காக வாரக்கடைசியில் ரயில் ஏறி நெல்லை புறப்பட்டு போனார். ஒரு நாள் விளாத்திகுளத்தில் பிர்ச்சாரம். 20 வருடங்களுக்கு முன் வைகோவை தோற்கடித்த அதே விளாத்திகுளம். பச்சை தலைப்பாகையை தலையில் கட்டிக்கொண்டு மைக் பிடிக்க- பக்கத்து கோவிலில் இருந்து பக்தி பாட்டு சத்தமாய் ஒலிக்கிறது. உணர்ச்சிவசப்பட்டு பேசாமலேயே கோவில்பட்டிக்கு நடையை கட்டினார்.

திங்கள்கிழமை கோவில்பட்டியில் பிரச்சாரம் செய்வதாக திட்டம். அங்குள்ள வடக்கு திட்டங்குளம் என்ற ஊரில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக சென்றார். ஆனால் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பு தெரிவித்த இளைஞர்களை போலீசார் அப்புறப்படுத்திய பின் தேவர் சிலைக்கு வைகோ மாலை அணிவித்துவிட்டு பிரச்சாரம் தொடங்கினார்.

நேற்று கோவில்பட்டியில் வேட்புமனு தாக்கல் செய்து விட்டு பிரச்சாரம் செய்வதாக வைகோவின் சுற்றுப்பயண திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொண்டர்கள் புடை சூழ வேட்புமனுதாக்கல் செய்ய-கோட்டாட்சியர் அலுவலகம் புறப்பட்டார். வழியில் தேவர் அமைப்புகளை சேர்ந்த சிலர் கறுப்புக்கொடி காட்ட -அவர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் வைகோ ஆர்டிஓ அலுவலகம் வந்து சேர்கிறார். மனுதாக்கல் செய்யப்போகிறார் என போட்டோகிராபர்கள் பிளாஷ் ஒளிகற்றைகளை வைகோ மீது பாய்ச்ச-எதிர்பாராத திருப்பங்கள் நிகழ்ந்தன.

மதிமுக வின் மாற்று வேட்பாளர் விநாயகா ரமேஷ் மட்டும் மனு தாக்கல் செய்கிறார். ஆர்டிஓ அலுவலகத்தில்இருந்து வெளியே வந்த வைகோ- அந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் . “ இந்த தேர்தலில் நான் போட்டியிடப்போவதில்லை”என்பதே அந்த அறிவிப்பு.

பின்னர் கையில் வைத்திருந்த நீண்ட அறிக்கையை படித்தார். அதில் இருந்த வாசகங்களில் இருந்து சில துளிகள்…

“கோவில்பட்டி தொகுதியில் என்னை மையப்படுத்தி சாதி மோதலை ஏற்படுத்த திமுக திட்டமிட்டிருப்பது ஆதாரபூர்வமாக எனக்கு தெரிய வந்துள்ளது.சாதி வெறியும் சாதிய ஆணவமும் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை நாசமாக்கிவிடும் என்பதால் 2016 மே 16ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவது இல்லை என முடிவு செய்துள்ளேன்.”

-இது வைகோவின் ஸ்டேட்மெண்ட்.

தேமுதிக வை தங்களிடம் சேரவிடாமல் தடுத்ததில் வைகோ முக்கிய பங்கு வகித்தவர் என்பதால்- திமுக,காங்கிரஸ் ,பாஜக போன்ற கட்சிகள் வைகோவை வறுத்தெடுத்து வருகின்றன. தோல்வி பயத்தால் போட்டியில் இருந்து வைகோ விலகி விட்டதாக அவர்கள் எள்ளி நகையாடுகின்றனர்.

வைகோவின் முடிவு மக்கள் நலகூட்டணி தலைவர்களை அதிர வைத்துள்ளது. தனது முடிவை வைகோ விலக்கி கொள்ளவேண்டும் என அவர்கள் ஒருமித்த குரலில் ஒலிக்கிறார்கள்.வைகோ என்ன முடிவு எடுக்கப்போகிறார்?

Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share