கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியைத் தொடர்ந்து தோனியை விமர்சித்த நடிகர் விஷ்ணு விஷாலுக்கு எதிராக ரசிகர்கள் கடும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
நடப்புத் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிராக சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுமோசமாக தோற்றது.
குறிப்பாக ருத்துராஜ் தொடரில் இருந்து விலகியதால் மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்ற தோனி, நேற்றைய போட்டியில் 9வது பேட்ஸ்மேனாக களமிறங்கி 1 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார்.
இதனையடுத்து சென்னை அணியின் மீதும், தோனி மீதும் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
அந்த வகையில் நடிகர் விஷ்ணு விஷால் தோனியை விமர்சித்து தனது எக்ஸ் பக்கத்தில் இன்று ட்விட் செய்திருந்தார். அதில், “நானே கிரிக்கெட்டர் என்பதால் இதை பற்றி பேச வேண்டாம் என தவிர்த்து வந்தேன். ஆனால் இது மிகவும் கொடூரமாக இருக்கிறது. அவர் ஏன் இவ்வளவு கீழ் வரிசையில் களமிறங்க வேண்டும்? வெற்றி பெறவே கூடாது என எந்த விளையாட்டையாவது விளையாடுவார்களா? சர்க்கஸுக்கு செல்வதுபோலதான் இருக்கிறது. எந்தவொரு தனிமனிதரும் விளையாட்டை விடப் பெரியவர் அல்ல“ என அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து அவருக்கு எதிராக தோனி ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஒரு பயனர் கூறுகையில், “வெட்கமில்லாத கிரிக்கெட் வீரரே, ஏன் டக் அவுட் ஆன மற்ற வீரர்களை கேள்வி கேட்கவில்லை. 20 ஓவர்கள் பீல்டிங் செய்யும் 43 வயது வீரரிடமிருந்து ரொம்ப எதிர்பார்க்கிறீர்கள். உண்மையில் தோனி நன்றாக பேட்டிங் செய்கிறார். மேதாவி போல பேசுவதை நிறுத்துங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு பயனர், ”சச்சின் சார் நீங்களா?” என கிண்டலடித்துள்ளார்.
இன்னொரு பயனர் ‘நானும் கிரிக்கெட் வீரர் என்று விஷால் கூறியதை, வடிவேலு மீம்ஸ் போட்டு கலாய்த்துள்ளார்.
ஒரு பயனர், “5வது அல்லது 6வது விக்கெட்டுக்கு களமிறங்கி தற்காப்புடன் விளையாடுபடுபவர் தோனி இல்லை என்று பல வருடமாக அவரை பார்த்து வரும் அனைவருக்கும் தெரியும். அவர் அதிரடி பேட்ஸ்மேன் தான்.
குறைந்தபட்சம் அணியில் உள்ள ஒரு வீரர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினால், மீண்டும் பீஸ்ட் தோனியை நாம் பார்க்க முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.