ஊஊஊ… ஊளையிட்ட ரசிகர்கள்: திரும்பி வந்து முறைத்த கோலி; எம்.சி.ஜியில் நடந்தது என்ன?

Published On:

| By Kumaresan M

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரின் 4-வது போட்டி பாரம்பரியமான மெல்போர்ன் எம்சிஜி மைதானத்தில் தொடங்கி நடந்து வருகிறது.

பார்டர்-கவாஸ்கர் கோப்பையில் 5 போட்டிகளில் இதுவரை இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. காபா டெஸ்ட் மழையால் டிரா ஆனதால், அடுத்த இரு டெஸ்ட் போட்டிகளும் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை தூண்டியுள்ளன.

இந்த நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் நடக்கும் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியைக் காண ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர். இந்த போட்டியில் முதன் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 474 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாவது பேட் செய்த இந்திய அணி 164 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. இந்த போட்டியில் விராட் கோலி ஸ்காட் போலாண்ட் பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவர் 36 ரன்கள் எடுத்திருந்தார்.

அவுட் ஆனதையடுத்து, பெவிலியனை நோக்கி கோலி நடந்து சென்றார். அப்போது, மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் அவரை கேலி செய்யும் விதத்தில் ஊஊஊ என்று ஊளையிட்டனர். முதலில் அதை சட்டை செய்யாத கோலி, அவர்களை கடந்து சென்று விட்டார். உள்ளே சென்றவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. பின்னர் வெளியே வந்து ரசிகர்களை பார்த்து முறைத்தார். இதை கவனித்த, அங்கிருந்த பாதுகாவலர் விராட் கோலியை சமாளித்து அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் மைதானத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

முன்னதாக நேற்று ஆஸ்திரேலியா பேட் செய்த போது, இளம் வீரர் சாம் கோன்ஸ்டாசுடன் விராட் கோலி தோளில் இடித்து சர்ச்சையில் சிக்கினார். கோன்ஸ்டாஸ் பும்ரா பந்தை சிக்சருக்கு விளாசிய காரணத்தினால், அவரின் கவனத்தை திருப்பும் விதத்தில் கோலி இப்படி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து,நேற்றைய சம்பவம் குறித்து இன்று ஆஸ்திரேலிய மீடியாக்கள் கோலியை கடுமையாக விமர்சித்தன. கோமாளி கோலி என்றும் கோழை என்று அந்நாட்டு பத்திரிகை ஒன்று கோலியை விமர்சித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

-எம்.குமரேசன்

குடிபோதையில் விபத்து… பாஜக மாவட்ட தலைவர் மீது வழக்கு!

தயிர்சாதம், மாதுளை, அப்பளம், கொஞ்சம் ஊறுகாய்… சிம்பிள் மேனின் சிம்பிள் உணவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share