சமூக வலைதளங்களில் இப்போது எங்கு பார்த்தாலும் மக்கள் தரையில் படுத்துக் கொண்டு காலைத் தூக்க முயற்சி செய்யும் (Yoga pose) வீடியோக்கள் தான் ஆக்கிரமித்திருக்கின்றன. “இவ்வளவு தானா? இதையெல்லாம் ஒரு சவால் என்று செய்கிறார்களே” என்று நினைப்பவர்கள், ஒருமுறை முயற்சி செய்து பார்த்தால் தான் அதன் கஷ்டம் புரிகிறது.
இணையதளங்களில் எப்போதுமே ஏதாவது ஒரு சவால் (Challenge) வைரலாகிக் கொண்டே இருக்கும். சில சவால்கள் நடனம் ஆடுவது போல இருக்கும், சில சவால்கள் ஆபத்தானதாக இருக்கும். ஆனால், தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் இந்த ‘யோகா போஸ்‘ சவால் பார்க்க மிகவும் எளிமையாகவும், செய்யப் போனால் “அப்பாடா…” என மூச்சு வாங்க வைக்கக் கூடியதாகவும் இருக்கிறது.
நிஜமாகவே இது அவ்வளவு கஷ்டமா? இதோ அந்த சுவாரஸ்யமான தகவல்கள்.
அது என்ன Yoga Pose சவால்?
இந்தச் சவால் மிகவும் எளிமையானது. நீங்கள் செய்ய வேண்டியது இவ்வளவு தான்: தரையில் மல்லாக்கப் படுத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு காலை மட்டும் அப்படியே செங்குத்தாக (90 டிகிரி கோணத்தில்) மேலே தூக்க வேண்டும். இதில் முக்கிய நிபந்தனை என்னவென்றால், தூக்கும் கால் நேராக இருக்க வேண்டும், முட்டி மடங்கக் கூடாது. அதே சமயம் தரையில் இருக்கும் மற்றொரு கால் தரையை விட்டு எழும்பக் கூடாது.
கேட்பதற்கு மிக எளிதாகத் தோன்றுகிறதல்லவா? ஆனால் இங்கே தான் ட்விஸ்ட்டே இருக்கிறது!
குவியும் ‘ஃபெயில்’ வீடியோக்கள்
இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக் பக்கங்களில் இந்த சவாலை செய்ய முயன்று தோற்றுப் போகும் வீடியோக்கள் தான் (Fail Videos) இப்போது செம வைரல். பலரும் “எனக்கு நன்றாகத் தான் வளையும்” என்று நம்பிக்கையுடன் ஆரம்பித்து, கால் பாதியிலேயே நடுங்குவதையும், முட்டி தானாக மடங்குவதையும் பார்த்து அதிர்ச்சியடைகிறார்கள்.
“இதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை” என்று நினைத்து செய்த பல இளைய தலைமுறையினர், தங்கள் கால்கள் மரக்கட்டை போல வளைக்க முடியாமல் இருப்பதைப் பார்த்து, நகைச்சுவையான ரியாக்ஷன்களுடன் வீடியோக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
ஏன் இது இவ்வளவு கஷ்டம்?
பார்க்க எளிதாகத் தெரிந்தாலும், இதற்கு நம் உடலின் ‘ஹாம்ஸ்ட்ரிங்’ (Hamstring) எனப்படும் பின்னங்கால் தசைகள் மற்றும் இடுப்புப் பகுதி நல்ல நெகிழ்வுத்தன்மையுடன் (Flexibility) இருக்க வேண்டும். இன்றைய காலக்கட்டத்தில் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பதாலும், போதிய உடற்பயிற்சி இல்லாததாலும் பலருக்கும் இந்த தசைகள் மிகவும் இறுக்கமாகி விடுகின்றன.
இந்தச் சவால் நம் உடல் எவ்வளவு ஆரோக்கியமாகவும், நெகிழ்வாகவும் இருக்கிறது என்பதைத் தோல் உரித்துக் காட்டிவிடுகிறது.
நீங்களும் முயற்சி செய்யப் போகிறீர்களா?
உடல் நலனில் அக்கறை கொண்டவர்களும், ஜாலியாக எதையாவது முயற்சி செய்ய விரும்புபவர்களும் இந்த ‘யோகா சேலஞ்சை’ கையில் எடுத்துள்ளனர். நீங்கள் இதைச் செய்யும் போது அவசரப்பட வேண்டாம். கால் வலிக்க வலிக்க வளைக்க முயன்றால் தசைப்பிடிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மெதுவாக முயற்சி செய்து பாருங்கள்.
ஒரே நாளில் வராவிட்டாலும், தொடர் பயிற்சியின் மூலம் இந்த “சிம்பிள் ஆனால் பவர்ஃபுல்” சவாலை உங்களால் வெல்ல முடியும். உங்கள் உடலின் ஃபிட்னஸை செக் பண்ண இது ஒரு நல்ல வாய்ப்பு!
