மும்பையில் ஆட்டோ சவாரிக் கட்டணமாக ரூ.156 செலுத்துவதற்குப் பதிலாக, யூபிஐ (UPI) செயலியில் கவனக்குறைவாக ரூ.15,682 தொகையைத் தவறாக அனுப்பிய பயணியிடம், அந்தப் பணத்தை ஆட்டோ ஓட்டுநர் நேர்மையுடன் திருப்பி ஒப்படைத்துள்ளார். டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை தவறுகள் அதிகரித்து வரும் சூழலில், ஓட்டுநரின் இந்தச் செயல் பொதுமக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மும்பையைச் சேர்ந்த தொழில்முனைவோரும் நிறுவன சிஇஓ-வுமான (CEO) சுபம் குனே சில தினங்களுக்கு முன் காலை நேரத்தில் வாடிக்கையாளர் ஒருவரைச் சந்திப்பதற்காக ஆட்டோவில் சென்றுள்ளார். காலை நேரப் போக்குவரத்து நெரிசல் மற்றும் கூட்டத்திற்கு நேரத்திற்குச் செல்ல வேண்டும் என்ற பதற்றம் காரணமாக, அவர் குறிப்பிட்ட இடத்தை அடைந்தவுடன் அவசரமாகத் தனது மொபைல் செயலி மூலம் கட்டணத்தைச் செலுத்தியுள்ளார். அப்போது, ஆட்டோ கட்டணமாக ரூ.156-க்கு பதிலாக ரூ.15,682 எனத் தவறாகப் பதிவிட்டு, தொகையைச் சரிபார்க்காமல் பரிவர்த்தனையை முடித்துவிட்டு அவசர அவசரமாக அங்கிருந்து சென்றுள்ளார்.
காத்திருந்த ஓட்டுநர்
சுபம் குனே சென்ற சிறிது நேரத்திற்குப் பின், தனது வங்கிக் கணக்கிற்கு வழக்கத்திற்கு மாறாக ஒரு பெரிய தொகை வந்திருப்பதை ஆட்டோ ஓட்டுநர் அல்தாப் கவனித்துள்ளார். பணத்தைப் பெற்றுக்கொண்டு அங்கிருந்து செல்லாமல், பயணி மீண்டும் அதே இடத்திற்கு வர வாய்ப்புள்ளதாகக் கருதி, அவர் இறங்கிச் சென்ற இடத்தின் அருகிலேயே அல்தாப் நீண்ட நேரம் காத்திருந்துள்ளார்.
சுமார் ஒரு மணி நேர தொழில் தொடர்பான கூட்டம் முடிந்து பயணி சுபம் குனே திரும்பியபோது, ஆட்டோ ஓட்டுநர் அல்தாப் அவரை அடையாளம் கண்டு நேராகச் சென்று விபரத்தைக் கூறியுள்ளார். மேலும், தனது கணக்கிற்குத் தவறாக வந்த முழுத் தொகையையும் உடனடியாக அவரிடம் திருப்பி அளித்தார்.
அசல் கட்டணத்தையும் வாங்க மறுப்பு
தன் கணக்கில் இருந்து இவ்வளவு பெரிய தொகை சென்றதையே அறியாமல் இருந்த பயணி சுபம் குனே, ஓட்டுநரின் நேர்மையைக் கண்டு சொல்வதறியாது திகைத்துள்ளார். ஓட்டுநரின் இந்தச் செயலைப் பாராட்டி, அசல் பயணக் கட்டணமான ரூ.156 மற்றும் கூடுதல் பணத்தையும் ஓட்டுநரிடம் வற்புறுத்தி வழங்கியுள்ளார். ஆனால், ஓட்டுநர் அல்தாப் அந்த அசல் கட்டணத்தையும் வாங்க மறுத்து, “உங்களுடைய இன்றைய நாளைக் கவனிப்பதில் கவனம் செலுத்துங்கள் சார்” எனக் கூறி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.
டிஜிட்டல் பரிவர்த்தனைகளும் விழிப்புணர்வும்
இச்சம்பவம் குறித்து பயணி சுபம் குனே தனது சமூக வலைதளப் பக்கத்தில் இச்சம்பவம் குறித்து விரிவாகப் பதிவிட்டுள்ளார். இந்தியாவில் யூபிஐ பணப் பரிவர்த்தனைகள் பெருமளவு அதிகரித்து வரும் தற்போதைய சூழலில், பணப் பரிவர்த்தனையின் போது எண்களை இருமுறை சரிபார்க்க வேண்டியதன் அவசியத்தை இச்சம்பவம் உணர்த்துவதாகத் தொழில்நுட்ப வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
பெரும்பாலான டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை தவறுகள் நீண்ட சட்டப் போராட்டங்கள் மற்றும் வங்கி நடைமுறைகளுக்குப் பின்னரே சரி செய்யப்படும் நிலையில், ஆட்டோ ஓட்டுநரின் இந்தத் நேர்மையான குணம் பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
