தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பிளஸ்-2 பள்ளி மாணவி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு நீதிமன்றம் இரட்டைத் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், குளத்தூா் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சோ்ந்த 12ஆம் வகுப்பு மாணவி, கடந்த மார்ச் 10 ஆம் தேதி இரவு நேரத்தில் இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டின் அருகே உள்ள காட்டுப் பகுதிக்குச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீசார் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், மார்ச் 11-ஆம் தேதி அன்று அந்த மாணவி காட்டுப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார்.
சிசிடிவி காட்சி மூலம் சிக்கிய கொலையாளி
தமிழகத்தையே உலுக்கிய இந்தத் துயரச் சம்பவம் குறித்து குளத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில், தூத்துக்குடி ராஜபாண்டி நகர் பகுதியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்பவரைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்ற உத்தரவின்படி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தக் கொடூரக் கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்துப் போலீசார் தூத்துக்குடி மாவட்ட போக்சோ (POCSO) நீதிமன்றத்தில் விரைவாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், பல்வேறு சாட்சியங்களிடம் நீதிமன்றம் விசாரணை நடத்தியது.
அனைத்துத் தரப்பு விசாரணைகளும் கடந்த மே 21-ஆம் தேதி முழுமையாக நிறைவடைந்ததை அடுத்து, இவ்வழக்கின் தீர்ப்பு மே 25-ஆம் தேதியான இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு:
அதன்படி இன்று வழக்கை விசாரித்த போக்சோ நீதிமன்ற நீதிபதி பிரீத்தா, கைதான தர்ம முனீஸ்வரன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், அவரை குற்றவாளி என அறிவித்தார். தொடர்ந்து, குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு இரட்டைத் தூக்கு தண்டனை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
சம்பவம் நடந்த 76 நாட்களுக்குள் வழக்கு விசாரணை நிறைவடைந்து குற்றவாளிக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
