கோவையில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… 250 சிசிடிவி காட்சிகள்… 5 தனிப்படைகளின் அதிரடி வேட்டை! நடந்தது என்ன?

Published On:

| By Pandeeswari Gurusamy

sulur case updates

கோவையில் 10 வயது சிறுமி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளது தமிழக மக்களையே உலுக்கியுள்ளது. ஒரு சாக்லேட்டை ஆசையாக வாங்க சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியைச் சேர்ந்த குடும்பம் ஒன்று, பிழைப்பு தேடி கோவை மாவட்டம் சூலூர் பகுதிக்குக் குடி வந்தது. மே 21-ஆம் தேதி மாலை 5 மணியளவில், இவர்களது 10 வயது சிறுமி விளையாடுவதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். வீட்டின் அருகே குழந்தை விளையாடிக் கொண்டிருக்கிறாள் என்று பெற்றோர் முதலில் நினைத்துள்ளனர்.

ADVERTISEMENT

ஆனால், இரவு 7 மணியைக் கடந்தும் சிறுமி வீடு திரும்பாததால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அப்போதும் கூட வழிதெரியாமல் குழந்தை எங்காவது தவித்துக்கொண்டிருப்பாள் என்று நினைத்தவர்களுக்கு, இனி குழந்தையைச் சடலமாகத்தான் கையில் வாங்கப் போகிறோம் என்பது தெரிந்திருக்கவில்லை.

குழந்தையை அப்பகுதி முழுவதும் தேடி அலைந்தனர். எங்கு தேடியும் குழந்தை கிடைக்காததால் பதற்றத்தின் உச்சத்துக்கே சென்ற பெற்றோர் இரவு 9 மணியளவில் அவசர போலீஸ் எண் 100-ஐத் தொடர்புகொண்டு புகார் அளித்தனர்.

ADVERTISEMENT

களமிறங்கிய 5 தனிப்படைகள்

அச்சமயத்தில் கோவை மாவட்டத்திற்கு ரெகுலர் எஸ்பி (SP) இல்லை. புகாரின் தீவிரத்தை உணர்ந்த போலீஸ் கட்டுப்பாட்டு அறை, உடனடியாக சூலூர் டி.எஸ்.பி. கரிகால் பாரிசங்கர் கவனத்திற்குத் தகவலைக் கொண்டு சென்றது. அவர் உடனடியாக சூலூர் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய உத்தரவிட்டார்.

“புதிய ஆட்சி அமைந்துள்ள நிலையில் இந்த வழக்கை மிக எச்சரிக்கையுடனும், வேகமாகவும் கையாள வேண்டும்” என கோவை ஐஜி ரம்யபாரதி மற்றும் கோவை சரக டிஐஜி சுவாமிநாதன் ஆகியோர் டி.எஸ்.பி-க்கு அறிவுறுத்தினர்.

ADVERTISEMENT

இதையடுத்து, டி.எஸ்.பி. கரிகால் பாரிசங்கர் மேற்பார்வையில், 5 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 5 அதிரடி தனிப்படைகள் அன்று இரவே அமைக்கப்பட்டன:

சூலூர் இன்ஸ்பெக்டர் ஆனந்த் பிரேம் மற்றும் எஸ்.ஐ. யுவராஜ் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

கோயில்பாளையம் இன்ஸ்பெக்டர் இளங்கோ, எஸ்.ஐ. விக்னேஷ் இரண்டாவது குழுவாகவும், நீலாம்பூர் இன்ஸ்பெக்டர் திவாகர் மற்றும் போலீசார் மூன்றாவது குழுவாகவும் அமைக்கப்பட்டனர்.

இதில் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரமாதேவி மற்றும் போலீசார் நான்காவது குழுவாகவும், இன்ஸ்பெக்டர் வடிவேலு மற்றும் போலீசார் ஐந்தாவது குழுவாகவும் அமைக்கப்பட்டனர்.

புலனாய்வில் திருப்பம் தந்த சிசிடிவி!

தனிப்படைகள் வெவ்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கிவிட்டன. ஒரு டீம் சிசிடிவி காட்சிகளைச் சேகரிக்க, மற்றொரு டீம் அதை ஆய்வு செய்தது. மற்ற குழுக்கள் மொபைல் எண் குறித்த விவரங்களை சேகரிப்பது, நீர்நிலைகள் அருகே தேடுதல் வேட்டை மற்றும் வீடு வீடாகச் சென்று விசாரணை என பல்வேறு கோணங்களில் விசாரணையில் இறங்கின.

சுமார் 250-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டனர். முதலில் மாலை 6 மணிக்கு சிசிடிவியில் பதிவான ஒரு வாகனம் மீது சந்தேகம் ஏற்பட்டு 3 மணி நேரம் தேடினர். ஆனால், அவர்கள் ரிசார்ட்டுக்குச் சென்ற ஜோடி என்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து விடாப்பிடியாக மீண்டும் சிசிடிவி காட்சிகளைப் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போதுதான் போலீசாருக்கு ஒரு துப்பு கிடைத்தது.

அதில் இளைஞர் ஒருவர், நம்பர் பிளேட்டே இல்லாத ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கில் ஒரு ஒரு சிறுமியை வைத்துக்கொண்டு செல்கிறான். சூலூர் தங்கமாளிகை ஜூவல்லரி அருகே பைக்கை நிறுத்திவிட்டு, ரோடுக்கு எதிரே பூ விற்கும் பெண்ணிடம் பேசிவிட்டு மீண்டும் திரும்பினான்.

அதே பைக், சிறுமியின் வீட்டில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஏரிக்கரை தென்னந்தோப்பு அருகே செல்கிறது.

இரவு 7.45 மணியளவில் அந்த இளைஞர் மட்டும்பைக்கில் திரும்புகிறான். அவனுடன் சென்ற சிறுமியை காணவில்லை.

இந்த சிசிடிவி காட்சியால் போலீசாருக்குச் சந்தேகம் எழுந்தது. உடனடியாக பைக் நின்ற இடத்தில் பூ விற்றுக் கொண்டிருந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அந்தப் பெண்ணிடம் நடத்திய விசாரணையில், பைக்கில் சென்றவன் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பதும் தெரியவந்தது. அவன் லோடுமேன் வேலை செய்வதும் உறுதியானது. அந்த பெண்ணின் தம்பி மோகனிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர்.

குற்றவாளியை சுற்றி வளைத்த காவல்துறை

இதற்கிடையே, மே 22-ஆம் தேதி மதியம் 1 மணியளவில் சூலூர் பகுதியில் உள்ள ஒரு குடோன் அருகே பதுங்கியிருந்த கொலையாளி கார்த்திக்கை தனிப்படை போலீஸார் சுற்றி வளைத்தனர். அப்போது தப்பியோட முயன்ற கார்த்திக் தவறி விழுந்ததில் அவனது கை, கால்கள் உடைந்தன என்று கூறப்படுகிறது.

இந்தக் களேபரங்களுக்கு இடையில் மே 22 மாலை 5 மணிக்கு, கோவை மாவட்டத்தின் புதிய எஸ்பி-யாக பவன் குமார் ரெட்டி பொறுப்பேற்றார். அதற்குள் சிறுமியின் பெற்றோரும், உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறுமியின் உடல் மே 22 ம் தேதி மாலை 6 மணியளவில் கண்ணம்பாளையம் குளம் அருகிலுள்ள தென்னைத் தோப்பு பகுதியில் இருந்து மீட்கப்பட்டது.

அன்று நள்ளிரவில் 5 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் இந்த விவகாரம் ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்த்தது.

அதிர வைத்த வாக்குமூலம்:

கைது செய்யப்பட்ட கார்த்திக் முதலில் “எனக்கு யாரையுமே தெரியாது” எனத் திமிற ஆரம்பித்த நிலையில், போலீசார் சிசிடிவி ஆதாரங்களை அடுத்தடுத்து தூக்கிப் போட்டனர். குற்றவாளியிடம் துருவி துருவி கேள்விகளை எழுப்பினர். இதனால் வேறு வழியின்றி அவன் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டான்.

“எனக்கு சொந்த ஊர் நாகப்பட்டினம். மனைவி பிரிந்துவிட்டதால் குழந்தை என் அம்மாவிடம் உள்ளது. நான் இங்கு லோடுமேனாக வேலை செய்கிறேன். இந்தச் சிறுமி அவ்வப்போது கடைக்குச் செல்லும்போது பார்ப்பேன். சாக்லேட் வாங்கித் தந்து பழக்கப்படுத்தினேன்.

அன்றும் சாக்லேட் தருவதாகக் கூறி வண்டியில் ஏற்றி, 5 கி.மீ தள்ளி இருந்த தென்னந்தோப்புக்குக் கூட்டிச்சென்றேன். அங்கு பயந்துபோய் கத்திய சிறுமியைப் பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றேன். அவள் அங்கிருந்து ஓட முயற்சித்தாள். இந்த ஆத்திரத்தில் சிறுமியை கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு அங்கேயே போட்டுவிட்டு வந்துவிட்டேன்.” வாக்கு மூலத்தில் தெரிவித்தான்.

இதைத் தொடர்ந்து காவல்துறையினர் உண்மையை மறைத்ததற்காக, பூக்காரப் பெண்ணின் தம்பி மோகன் மீதும் கூட்டுச்சதி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மே 22 மாலை 6 மணியளவில் ஏரிக்கரையில் இருந்து சிறுமியின் உடலை மீட்ட போலீஸார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

என்கவுன்ட்டர் திட்டம்?

கார்த்திக்கின் கொடூரச் செயலைக் கேட்டு ஆத்திரமடைந்த சூலூர் போலீஸார், அவனை என்கவுன்ட்டர் செய்யத் திட்டமிட்டிருந்ததாகப் பரபரப்புத் தகவல்கள் கசிந்த நிலையில், காவல்துறைத் தரப்பில் இதனை மறுத்துள்ளனர்.

இதற்கிடையில், “மாற்றம்” முழக்கத்தை முன்வைத்து ஆட்சிக்கு வந்த விஜய், தனது ஆட்சியில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் குறித்து ஏன் வாய் திறக்கவில்லை என்று சமூக வலைதளங்களில் பலரும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தத் தொடங்கினர்.

இந்நிலையில் இன்று, (மே 24)முதல்வர் விஜய் குழந்தையின் குடும்பத்தினரிடம் செல்போனில் பேசி ஆறுதல் தெரிவித்துள்ளார். குற்றவாளிக்கு உரிய தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share