7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் லலித்குமார் தயாரித்துள்ள படம் கோப்ரா.
இந்தப் படத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், மியா ஜார்ஜ், மிருணாளினி ரவி, மீனாட்சி கோவிந்தராஜ், ரேணுகா, ரோபோ ஷங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
’டிமாண்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அஜய் ஞானமுத்து இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.
கோப்ரா படத்தில் 12 வித்தியாசமான வேடங்களில் விக்ரம் நடித்திருக்கிறார். இதில் 11 வேடங்கள் சில நிமிடங்களே வந்தாலும் இன்னுமொரு கதாபாத்திரம் விக்ரமின் இரட்டை வேடத்தில் இடம் பெற்றுள்ளது.
கணித அறிவை பயன்படுத்தி கொலை!
கணக்கு வாத்தியார் தனது கணித அறிவை பயன்படுத்தி சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் பல பெரிய புள்ளிகளை படுகொலை செய்கிறார்.
தடயமே இல்லாமல் நடக்கும் இந்தப் படுகொலைகளை விசாரிக்கும் சர்வதேச புலனாய்வு இண்டர்போல் போலீஸூக்கும், அந்தக் கணக்கு வாத்தியாருக்கும் இடையில் நடக்கும் ஆடு புலி ஆட்டம்தான் இந்தக் ‘கோப்ரா’ படம்.
கணக்குப் பாடத்தை போன்றே திரைக்கதையும் எளிதில் புரிந்துகொள்ள முடியாத வகையில் படம் பார்க்கும் பார்வையாளன் நெளியவேண்டியுள்ளது
அம்மா, அப்பா இல்லாமல் தனித்து வாழும் ‘மதி’ என்ற விக்ரம் சென்னையில் சிறுவர்களுக்கான இல்லத்தை நடத்தி வருகிறார்.
நெல்லையில் வசித்து வரும் அவரது கணித ஆசிரியரான கே.எஸ்.ரவிக்குமார் சொல்லும் சில கொலைகளை கச்சிதமாகச் செய்து தடையம் இன்றி தப்பித்துவிடும் தொழில்முறை கொலையாளி
முதல் கொலையாக ஸ்காட்லாந்து பட்டத்து இளவரசரை அவரது திருமணத்தன்று சர்ச்சில் வைத்து கொல்கிறார் மதி.
இரண்டாவது கொலையாக ரஷ்யாவின் பாதுகாப்பு துறை அமைச்சரை ரஷ்யாவில் கொலை செய்கிறார்.
மூன்றாவது ஒடிசா மாநில முதல்வர் தனது கட்சியின் மாநில மாநாட்டில் கலந்து கொள்ள கோவை வந்திருந்தபோது மதியால் கொலை செய்யப்படுகிறார்
இந்த மூன்று கொலைகளும் வித்தியாசமான முறையில் கணித அறிவை பயன்படுத்தி திட்டமிட்டு நடந்து இருப்பதாக கணித ஆராய்ச்சி மாணவியுமான சென்னையை சேர்ந்த மீனாட்சி கோவிந்தராஜ் ஒரு ஆய்வு கட்டுரையை வெளியிடுகிறார்.
ஸ்காட்லாந்து இளவரசர் கொலையை விசாரிக்கும் இண்டர்போல் போலீஸின் அதிகாரியான இர்பான் பதானிடம் இந்த வழக்கும், மீனாட்சியின் ஆய்வுக்கட்டுரையும் வந்து சேர்கிறது.
அடிப்படையில் தமிழரான இர்பான் பதான் சென்னை வந்து மீனாட்சியை சந்திக்கிறார். இதற்கிடையில் இண்டர்போல் அமைப்பின் சர்வரையே ஹேக் செய்து வித்தை காட்டும் ஒரு அனாமதேய ஹேக்கர்,
இந்தப் படுகொலைகளுக்கெல்லாம் தரகராக இருக்கும் சுரேஷ் மேனனை போலீஸிடம் காட்டிக் கொடுக்கிறார்.இதையடுத்து சுரேஷ் மேனனுக்கு இந்த வேலையைகொடுத்த தொழிலதிபரான வில்லன் சுரேஷ் மேனனை தன் இருப்பிடத்திற்கு வர வைத்து கொல்கிறான்.
அதே சமயம் கே.எஸ்.ரவிக்குமாரை அந்த ஹேக்கர் கடத்தி வைத்துக் கொண்டு மதியை தன்னிடம் வரச் சொல்கிறான்.
விடிந்தால் திருமணம் என்ற நிலைமையில் கேரளாவில் இருந்து ஓடத் துவங்கும் மதி, கே.எஸ்.ரவிக்குமாரை காப்பாற்ற முயல்கிறான்.
அதே சமயம் அவரைக் கொலை செய்யவும் வில்லனின் ஆட்கள் துரத்துகிறார்கள். கூடவே லோக்கல் போலீஸூடன் இண்டர்போல் போலீஸும் பின்னால் துரத்துகிறது. முடிவு என்ன என்பதுதான் ‘கோப்ரா’ படத்தின் திரைக்கதை.
‘கோப்ரா’ எனப்படும் ராஜ நாகம் கடித்தால் மனிதனுக்கு உடனடி சாவு உறுதி என்பார்கள்.அது போன்ற சாவைக் காட்டும் மனிதன்தான் படத்தின் நாயகன் ‘மதி’ என்பதால் இந்தப் பெயரை வைத்திருக்கிறர்கள்.
அப்பாவியான கணக்கு வாத்தியார் அந்நியனாக மாறிய பின்பு, பலவித வேடங்களில் கடல்கடந்து பல தேசங்களில் கொலைகளை அலட்சியமாக செய்யும் கொலைகாரன்,
இன்னொரு பக்கம், அமைதியான கதிர் என்ற இளைஞனாக விக்ரமின் நடிப்பு பசிக்கு தீனி போட்டிருக்கிறார் இயக்குநர் அஜய் ஞானமுத்து.
விக்ரம் ஏற்றிருக்கும் ஒரு சில வேடங்கள் வெறும் மாறுவேடமாகத் தெரிந்தாலும், தனது உடல் மொழி மூலம் அவற்றுக்கு உயிர் கொடுத்திருக்கிறார். அதே சமயம் சில வேடங்கள் கடந்து போன பின்புதான் அது விக்ரம் என்பதே படம் பார்க்கும் நமக்கு தெரிய வருகிறது
அம்பியாகவும், அந்நியனாகவும் நடிப்பதெல்லாம் விக்ரமுக்கு சர்வசாதாரணமானது. இந்தப் படத்திலும் அப்படியொரு காட்சியை காவல் நிலையத்தில் நடைபெறும் விசாரணைக் காட்சியில் வைத்திருக்கிறார் இயக்குநர்.
இந்தக் காட்சியில் விக்ரமோடு இணைந்து நடிப்பின் பல பரிமாணங்களை காட்டியிருப்பவர் ஆனந்த்ராஜ். தொடர்ந்து இந்தக் குழுவினர் சுற்றிச் சுற்றி வந்து விக்ரமை வார்த்தைகளால் சுளுக்கெடுக்கும் காட்சிதான் படத்தின் ஹைலைட் என்று சொல்ல வேண்டும்.
மதியாகவும், கதிராகவும் மாறி, மாறி இருவரும் பேசும் காட்சிகளில் அன்பையும், பாசத்தையும், பரிவையும் காட்டிவிட்டு வில்லனுடன் பேசும்போது குதர்த்தக்கத்தைக் காட்டிப் பேசி ரசிக்க வைத்திருக்கிறார் விக்ரம்.
நாயகியின் காதலை மறுதலித்து சித்தப் பிரமையில் இருப்பதுபோலவே நடிப்பதும், பின்பு காதலை மறக்க முடியாமல் கேரளாவரையிலும் சென்று காதலுக்கு ஒத்துக் கொண்டு கல்யாணத்துக்குக் காத்திருக்கும் அமைதியையும் விக்ரமால் கொடுக்க முடிந்திருக்கிறது.
படம் நெடுகிலும் தனது ஆக்கிரமிப்பை தனது அனைத்துக் கதாபாத்திரங்கள் வாயிலாகவும் செலுத்தியிருக்கிறார் விக்ரம்.
வில்லன் ரோஷன் மேத்யூவுக்குக் குறைவான காட்சிகள்தான் என்றாலும் தான் இருக்கும் காட்சிகளில் பீதியைக் கிளப்புகிறார்.
சினிமாவுக்குள் புது வரவாக வந்திருக்கும் கிரிக்கெட்டர் இர்ஃபான் பதான் ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். முதல் படம் போலவே இல்லாமல்.. பல படங்களில் நடித்தது போன்ற அனுபவ நடிப்பைக் காட்டியிருக்கிறார்.
தொழில் நுட்பத்தில் ஒளிப்பதிவாளர்கள் இருவரும் வர்ண ஜாலங்களைக் காட்டியிருக்கிறார்கள். ஸ்காட்லாந்து சர்ச்சின் பிரம்மாண்டமும், ரஷ்யாவின் மேகம் மூடிய ஐஸ் கட்டிகளாலான ஊரையும் காண்பித்து கொலையைப் பின்னுக்குத் தள்ளியிருக்கிறார்.
படத்தின் பிரம்மாண்டத்துக்கு ஏற்றாற் போன்ற காட்சியமைப்புகள் வேண்டும் என்பதால் அந்த ரிச்னெஸ்ஸை கடைசிவரையிலும் கொண்டு வர முயற்சித்திருக்கிறார்.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் ஏற்கெனவே ‘தும்பி துள்ளல்’, ‘அதிரா’ பாடல்கள் ரசிகர்களைத் தொட்டுவிட்டன என்பதாலும் படத்தில் பார்க்கும்போது அதெல்லாம் ஒருவித அந்நியமாக இருக்கின்றன. பின்னணி இசையில் ஒலிக்கும் தீம் மியூசிக்கை ரசிக்கலாம்.

இயக்குநர் அஜய் ஞானமுத்து ஒரு ஜேம்ஸ்பாண்ட் கதையை நம்முடைய தமிழ் வாழ்வியலுக்கு ஏற்றாற்போல் கொடுக்க முனைந்திருக்கிறார். ஆனால் அதில் நம்பகத்தன்மையை உருவாக்காமல் சறுக்கிவிட்டார்.
மதி செய்யும் சர்வதேச கொலைகளெல்லாம் நம்மால் நம்பமுடியவில்லை என்பதை காட்டிலும் காதில் பூ சுற்றிய கதையாக ஜீரணிக்க முடியாததாகவே இருக்கிறது.
அயல்நாட்டிலும் நம்மூர் போலவே காவல்துறை, ராணுவம், அரசியல்வாதிகள் இருப்பார்கள் என்று நினைத்திருப்பது காமெடியாக போனது.
சாதாரண பத்திரிகையாளராக வரும் கே.எஸ்.ரவிக்குமார் சர்வதேச மாபியா போன்று ஆபரேஷன் செய்யும் நபராகக் காட்டி புதுமையைச் செய்திருக்கிறார் இயக்குநர்.
ஆனால் எப்படி இவர் மதியுடன் தொடர்பு கொள்கிறார்..? மதி எப்படி ரவிக்குமாரின் ஆர்டர்களை புரிந்து கொள்கிறார்..? என்பதை தெளிவாக வசனத்தின் மூலமாகச் சொல்லியிருக்க வேண்டும்.
1995-களில் ‘சொடுகு’ என்ற கணிதக் குறுக்கெழுத்துப் புதிர் போட்டி ஆங்கில தினசரிகளில் பிரபலமானது.
இந்தக் கணிதக் குறுக்கெழுத்துப் புதிர் போட்டியை வைத்துதான் கே.எஸ்.ரவிக்குமார் தனது சீடனான மதிக்கு அஸைன்மெண்ட்டை சொல்கிறார்.
கணிதச் சூத்திரத்தின் நம்பர்களை வைத்து அதன் மூலமாக ஏபிசிடியின் வரிசை நம்பர்களாக்கி வார்த்தைகளைக் கண்டறிந்து விஷயத்தைத் தெரிந்து கொள்கிறார் மதி. இதைத் தெளிவாகச் சொல்ல தவறிவிட்டார் இயக்குநர்.
விக்ரம் நடிப்பில் வெளியான சாமுராய் படத்தில் யாரை கடத்த வேண்டும் என்பதை சம்பந்தபட்டவருக்கு தினசரி பத்திரிகை விளம்பரம் மூலம் சில குறியீடுகள் மூலம் அறியும் வகையில் செய்யப்படும் இதனை சாமான்யன் புரிந்துகொள்ளும் வகையில் இயக்குநர் பாலாஜி சக்திவேல் காட்சிபடுத்தியிருப்பார்.

நிறைய டிவிட்ஸ்களை ஆங்காங்கே முடிச்சுக்களாக வைத்திருந்து எல்லாவற்றையும் அவ்வப்போது அவிழ்த்துக் கொண்டே வந்து சுவாரஸ்யத்தை அதிகரிக்க முனைந்திருக்கிறார் இயக்குநர்.
முதல் பாதி நகர்ந்த அளவுக்கு இரண்டாம் பாதி இல்லாதது படத்திற்கு கிடைத்த மிகப் பெரிய பின்னடைவு. மதியும், கதிரும் பேசும்போது இருவரும் ஒருவரையொருவர் மாற்றி மாற்றி பூடகமாகப் பேசிக் கொள்வதுபோல வசனங்களை வைத்திருப்பது படத்திற்கு மிகப் பெரிய பின்னடைவாக போனது.
நீ கதிராகவே இரு. நான் மதியாகவே செத்துப் போகிறேன் என்று சொல்வது கதிர். கடைசியாக சாவது அப்பாவியான கதிர். கொலையாளி மதி உயிருடன் இருக்கிறார். இதையும் சாதாரண ரசிகர்கள் புரிவதுபோல சொல்லியிருக்க வேண்டும்.
இயக்குநர் தன்னால் முடிந்ததைத் தந்திருந்தாலும் நடிகராக விக்ரம் தனது ரசிகர்களுக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை. அவரது நடிப்புக்காகவே இந்தக் ‘கோப்ரா’ படத்தை நிச்சயமாக அவரது ரசிகர்கள் பார்க்கலாம்…!
இராமானுஜம்
