மரங்களை வளர்க்கிற, மரங்களை பாதுகாத்து, இயற்கையை நேசிக்கிற நண்பன்தாம் தமிழகத்தின் சிஎம் என்று தமிழக முதல்வர் விஜய்யின் (Vijay) தாயார் ஷோபா சந்திரசேகர் (Shoba Chandrasekhar) பெருமிதத்துடன் தெரிவித்தார்.
சத்குருவின் ‘மண் காப்போம் – காவேரி கூக்குரல்’ இயக்கம் மூலம் இந்தாண்டு (2026-27) 1.2 கோடி மரங்கள் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இதன் துவக்க விழா நேற்று ஜூன் 5-ந் தேதி தமிழகம் மற்றும் புதுவையில் 140-க்கும் மேற்பட்ட இடங்களில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த இயக்கம் மூலம் இதுவரை 13.4 கோடி மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் சைதாப்பேட்டை அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் நடைபெற்ற விழாவில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், சைதை எம்எல்ஏ அருள் பிரகாசம், முதல்வர் விஜய்யின் தாயாரும் திரைப்பட தயாரிப்பாளர்-இசைக்கலைஞருமான ஷோபா சந்திரசேகர், அன்னை வேளாங்கண்ணி கல்லூரித் தலைவர் தேவராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு பணிகளைத் துவக்கி வைத்தனர்.

புதுவையில் நடைபெற்ற விழாவில் முதல்வர் ரங்கசாமி மரம் நடும் பணிகளைத் துவக்கி வைத்தார்.
ஈஷாவின் உள்நிலை மாற்றமும் சூழல் பாதுகாப்பும்
சென்னையில் நடைபெற்ற விழாவில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பேசுகையில், “நோயற்ற வாழ்வாகிய குறைவற்ற செல்வத்தைப் பெற வேண்டுமெனில் சுற்றுச்சூழல் அவசியம் என்பதை ஈஷா தன்னுடைய செயல்பாட்டின் மூலமாக மக்களுக்கு தெரிவிக்கிறது. உள்நிலை மாற்றத்தை வளர்ப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஈஷா யோகா மையம், அதைத் தாண்டி உலகச் சுற்றுச்சூழல் தினத்தைக் கொண்டாடுவதும், காவிரி கூக்குரல் போன்ற இயக்கங்கள் மூலம் மரவளர்ப்பை முன்னெடுப்பதும் மிக பொருத்தமானதாக இருக்கிறது. நம் தமிழ்நாட்டில் அனைத்து வளங்களும் இருக்கின்றன. வனவளம் போன்றவை வளர்ந்தால் மழைப் பொழிவு அதிகமாகி விவசாய உற்பத்தி பெருக வழிவகுக்கும், இதற்கேற்ப, முதலமைச்சர் கனிமவளக் கொள்ளைகளைத் தடுத்து நிறுத்த, இயற்கை வளங்களைப் பேணி காக்க அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். வரும் 2031-ஆம் ஆண்டுக்குள் காடுகளின் பரப்பை 33 சதவீதமாக உயர்த்த உறுதியேற்று இருக்கிறார். சாயப்பட்டறை கழிவுகள் நீர்நிலைகளில் கலப்பதைத் தடுக்கவும், காற்று மாசுபடுவதைத் தவிர்க்கவும், ஆற்றங்கரைகளில் பசுமைப் பூங்காக்கள் அமைக்கவும், சதுப்பு நிலக் காடுகளைப் பாதுகாக்கவும், கூவம் நதியை மீட்டெடுக்கவும் முதல்வர் சிறப்பான திட்டங்களைத் தீட்டி, தொலைநோக்குப் பார்வையோடு செயல்பட்டு வருகிறார்.” எனக் கூறினார்.

மண், மரம்போல பயனுள்ள வாழ்வு- ஷோபா சந்திரசேகர்
இவ்விழாவில் முதல்வர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் பேசியதாவது:வெறும் மழைக்காக மட்டுமே மரங்கள் இல்லை. மனுஷனுடைய மனசுக்கு நிம்மதி கொடுப்பதும் மரங்கள் தான். எப்பெல்லாம் மனசு வலிக்குதோ, அப்ப உடனே வீட்டை விட்டு வெளியே வந்து ஒரு மரத்தடியில் உட்கார்ந்து பாருங்க. ஒரு மரத்தைக் கட்டிப்பிடிச்சு கண் மூடி இருங்க. உங்களுக்குள்ள புதுத் தெம்பு, புது தைரியம், புது உற்சாகம், புது விடை கிடைக்கும் பாருங்க. அதை நான் அனுபவிச்சிருக்கேன்.
மண்ணையும் மரத்தையும் விட்டுக் கொடுக்காமல்..
‘மண் காப்போம்’ இயக்கத்தை உருவாக்கி, உலக அளவிலான விழிப்புணர்வையும், சீர்திருத்த நடவடிக்கையையும் மேற்கொண்ட சத்குரு அவர்களுக்கு மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மண்ணையும் மரத்தையும் விட்டுக்கொடுக்காமல் வாழணும்னு சொல்லத்தான் இந்த விழா. நம்ம மூதாதையர்களை நாம் விட்டுக்கொடுப்போமா? இனி ‘மண் காப்போம் மரங்கள் நடுவோம்’னு உறுதி ஏற்போம்.
இந்த விழாவை நான் வெறும் செலிபிரிட்டீஸ் (Celebrities) கலந்துக்கிற விழாவா பார்க்கல. செல்ஃப் ரெஸ்பான்சிபிலிட்டிஸ் (Self-responsibilities) இருக்கிற நல்ல மனிதர்கள் கலந்துக்கிற விழாவாத்தான் பார்க்கிறேன். இப்படி ஒரு இயக்கம் வெற்றிகரமா செயல்பட முக்கிய காரணமா இருக்கிற எல்லா தன்னார்வத் தொண்டர்களுக்கும், டெடிகேட்டட் வாலண்டியர்ஸ் (Dedicated volunteers) எல்லாருக்கும் முதல்ல என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கம்.
இயற்கையை நேசிக்கிற நண்பன் நம் சிஎம்..
மக்களைக் காப்பாற்ற வந்திருக்கிற நம் புதிய அரசும், மக்களோடு சேர்ந்து இந்த மண்ணையும் மரங்களையும் காப்பாற்றும்னு நம்புறேன். சின்ன வயசுல இருந்தே மரங்களை வளர்க்கிற, மரங்களை விடாமல் பாதுகாத்து, இயற்கையை நேசிக்கிற ஒரு நண்பன்தான் நமக்கு சிஎம்-ஆக (CM) வந்திருக்கார். அதனால இனி இயற்கைச் சூழல் தூய்மையாக, பசுமையாக அமையட்டும். இப்படி ஒரு விழாவில் கலந்துக்கிட்ட மகிழ்ச்சி என் மனசுல வேர்விட்டு விருட்சமாக வளர்ந்து நிற்கிறது
“இங்கு மனிதர்களைப் பற்றிப் பேசாமல், மண்ணையும், மரத்தையும் பற்றி பேசவும், அவற்றிற்கு நன்றி செலுத்தவுமே கூடியிருக்கிறோம். ‘மண்ணு மாதிரி இருக்கியே’, ‘மரமண்டையா இருக்கியே’ என்று மனிதர்களைத் திட்டுவது எவ்வளவு பெரிய தவறு என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். மண்ணையும் மரத்தையும் போல நாம் பிறருக்குப் பயனுள்ளதாக வாழ்ந்தாலே போதுமானது. மரங்கள் என்பவை ‘வானத்தை நோக்கிப் பூமி எழுதிய கவிதைகள்’ என்று கவிஞர் கலீல் ஜிப்ரான் எழுதியுள்ளார். உண்மைதான், இங்கு இருக்கின்ற மரங்களை எல்லாம் பாருங்கள். அவை வானத்தை நோக்கி உயர்ந்து எழுதிய கவிதை போல இருக்கின்றன. அந்த அற்புதமான கவிதையை அழிக்கவோ அல்லது சாய்க்கவோ நமக்கு எந்த உரிமையும் கிடையாது. மண் காப்போம் இயக்கத்தை உருவாக்கி, உலக அளவிலான விழிப்புணர்வையும் சீர்திருத்த நடவடிக்கைகளையும் மேற்கொண்ட சத்குருவிற்கு என் மனமார்ந்த நன்றி மற்றும் வாழ்த்துகள். ‘மண் காப்போம் -காவேரி கூக்குரல்’ இயக்கம் இதுவரை 13.4 கோடி மரங்களை விவசாய நிலங்களில் நட்டு, 2.6 லட்சம் விவசாயிகளை மரம் சார்ந்த விவசாயத்திற்கு மாறச் செய்து உலக சாதனை படைத்துள்ளது. கடலூரில் உள்ள காவேரி கூக்குரல் நாற்றுப்பண்ணை ஆண்டுக்குச் சுமார் 85 லட்சம் மரக்கன்றுகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இது ஆசியாவின் மிகப்பெரிய நாற்றுப்பண்ணைகளில் ஒன்றாகவும், முழுமையாகப் பெண்களால் நிர்வகிக்கப்படும் மிகப்பெரிய பண்ணையாகவும் திகழ்கிறது. இதனை சாத்தியமாக்கும் தன்னார்வலர்களுக்கு வாழ்த்துகள்” எனக் கூறினார்.

1,00,000 மரக்கன்றுகள்
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 140-க்கும் மேற்பட்ட இடங்களில் இதன் துவக்க விழாக்கள் நடைபெற்றன. இதில் 1,00,000-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் விவசாய நிலங்களில் நடப்பட்டு, மொத்தம் 317 ஏக்கர் பரப்பளவில் மரம் சார்ந்த விவசாயம் மேற்கொள்ளும் பணிகள் தொடங்கப்பட்டன. தமிழகத்தில் மாவட்டவாரியாக நடைபெற்ற விழாக்களில் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட உயர் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். பருவநிலைக்காக, நமது எதிர்காலத்திற்காக இயற்கையிலிருந்து உத்வேகம் பெறுவோம்’ என்ற ஐநா-வின் இந்த ஆண்டிற்கான உலக சுற்றுச்சூழல் தின கருப்பொருளை மையமாகக் கொண்டு, இந்த மாபெரும் மரம் நடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

காவேரி கூக்குரல் இயக்கம்
சத்குருவின் வழிகாட்டுதலில் துவங்கப்பட்ட காவேரி கூக்குரல் இயக்கம் காவேரி நதியைப் புத்துயிர் பெறச் செய்வதோடு, விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் நோக்கில், காவேரி வடிநிலப் பகுதிகளில் மரம் சார்ந்த விவசாயத்தை ஊக்குவித்து வருகிறது. காவிரி கூக்குரல் இயக்கத்தின் மூலம் 2.6 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் மரம் சார்ந்த விவசாய முறைக்கு மாறியுள்ளனர். மேலும் இவ்வியக்கம், ஐநாவின் பாலைவனமாதலைத் தடுக்கும் அமைப்பு (UNCCD) மற்றும் ஐநா சுற்றுச்சூழல் திட்டத்தால் (UNEP) அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மரம் சார்ந்த விவசாயத்தில், பயிர்களுடன் பொருளாதார மதிப்புள்ள மரங்களும் வளர்க்கப்படுகின்றன. இந்த விவசாய முறையால் மண் வளம், நதிநீர் வளம், சுற்றுச்சூழல் மற்றும் விவசாயிகளின் வருமானம் ஒரே நேரத்தில் மேம்படுவதால் விவசாயிகளிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மரம் சார்ந்த விவசாயத்தின் மூலம் விவசாயிகள் தங்களின் வருமானத்தை 3 முதல் 5 மடங்கு வரை அதிகரிக்க முடியும். இதனை ஊக்குவிக்கும் வகையில், தேக்கு, செம்மரம், சந்தனம், வேங்கை, மலைவேம்பு, மகோகனி, ரோஸ்வுட் உள்ளிட்ட மதிப்புமிக்க டிம்பர் மரங்களின் கன்றுகளும், தொடர்ச்சியான வருமானத்தைப் பெறுவதற்காக சமவெளிப் பகுதிகளில் வளரக்கூடிய மிளகு, அவகாடோ, ஜாதிக்காய் போன்ற பயிர்களின் கன்றுகளும் விவசாயிகளுக்கு, ஈஷா நாற்றுப்பண்ணைகள் மூலம் மிகக் குறைந்த விலையில் வழங்கப்படுகின்றன.
ஆசியாவிலேயே மிகப் பெரிய நர்சரி
ஆசியாவிலேயே மிகப்பெரியதும், முழுமையாக பெண்களால் நிர்வகிக்கப்படுவதுமான கடலூர் நர்சரியில் ஆண்டுதோறும் 85 லட்சம் மரக்கன்றுகளும், திருவண்ணாமலை நர்சரியில் 15 லட்சம் மரக்கன்றுகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த இரு நர்சரிகளும் இணைந்து தமிழ்நாட்டிலுள்ள 45 விநியோக மையங்களுக்கும், கர்நாடகாவிலுள்ள 8 விநியோக மையங்களுக்கும் மரக்கன்றுகளை வழங்கி, மரம் சார்ந்த விவசாயத்தை ஊக்குவிக்கும் பணியில் முக்கிய பங்காற்றி வருகின்றன. இதனுடன் மரக்கன்று நடவு மற்றும் பராமரிப்பு தொடர்பான தொழில்நுட்ப வழிகாட்டல்களையும் காவேரி கூக்குரல் இயக்கம் இலவசமாக வழங்கி வருகிறது. மண்ணுக்கு ஏற்ற மரவகைகள் தேர்வு, நீர் மற்றும் களை மேலாண்மை, ஊடுபயிர் சாகுபடி உள்ளிட்ட ஆலோசனைகளை, காவேரி கூக்குரல் களப்பணியாளர்கள் நேரடியாக விவசாய நிலங்களுக்குச் சென்று வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
