தமிழக அமைச்சர்கள் (Ministers) 22 பேருக்கு சென்னை பசுமைவழிச் சாலையில் அரசு பங்களாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
ஆட்சிகள் மாறும்.. அமைச்சரவைகள் மாறும்.. அதேபோல சென்னை கிரீன்வேஸ் சாலை எனப்படும் பசுமைவழிச் சாலையின் பங்களாக்களின் முகங்களும் மாறும்..
சென்னை பசுமைவழிச் சாலையில் அமைச்சர்களுக்கான பங்களாக்கள் அமைந்துள்ளன. தற்போதைய முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சியில் 22 அமைச்சர்களுக்கு பசுமைவழிச் சாலை பங்களாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.


அமைச்சர்களுக்கான பங்களாக்கள் ஒதுக்கீடு:
- அருண்ராஜ் – முல்லை
- ஸ்ரீநாத் – தாமிரபரணி
- கமலி – NCB No.16
- ராஜ்குமார் – பாமனி
- காந்திராஜ் – சிறுவாணி
- ஜெகதீஸ்வரி – NCB No.19
- ராஜேஷ் குமார் – NB No.37
- விஜய் பாலாஜி – NCB No.17
- விஜய் தமிழன் பார்த்திபன் – ரோஜா
- ரமேஷ் – NCB No.15
- விஸ்வநாதன் – NCB No.12
- குமார் – அன்பு
- தென்னரசு – பொதிகை
- சம்பத் குமார் – NCB No.18
- முகமது ஃபர்வாஸ் – மனோரஞ்சிதம்
- மேரி வில்சன் – NCB No.7A
- விக்னேஷ் – PB No.1
- ஷாஜகான் – NCB No.1
- வன்னி அரசு – சாமந்தி
- விஜயலட்சுமி – NCB No.7
- லோகேஷ் தமிழ்செல்வன் – NB No.36
- வினோத் – PB No.2
பங்களாக்களின் ‘அரசியல்’ வரலாறு
முல்லை இல்லம் (NB No.27): அதிமுக ஆட்சியில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வசித்த இந்த இல்லத்தில், திமுக ஆட்சியில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வசித்து வந்தார். தற்போதைய தவெக ஆட்சியில் இந்த இல்லம் சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் அருண்ராஜுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
தாமிரபரணி இல்லம் (NB No.15): அதிமுக ஆட்சியில் செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு வசித்த இந்த இல்லத்தில், திமுக ஆட்சியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் வசித்து வந்தார். தற்போதைய தவெக ஆட்சியில் இந்த இல்லம் மீன்வளம் – மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
சாமந்தி இல்லம் (NB No.6): அதிமுக ஆட்சியில் வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு வசித்த இந்த இல்லத்தில், திமுக ஆட்சியில் சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் வசித்து வந்தார். தற்போதைய தவெக ஆட்சியில் இந்த இல்லம் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
ரோஜா இல்லம் (NB No.11): அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வசித்த இந்த இல்லத்தில், திமுக ஆட்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு ஒதுக்கப்பட்டது. தற்போதைய தவெக ஆட்சியில் இந்த இல்லம் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
சிறுவாணி இல்லம் (NB No.12 A): அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வசித்த இந்த இல்லத்தில், திமுக ஆட்சியில் சட்ட அமைச்சர் ரகுபதி வசித்து வந்தார். தற்போதைய தவெக ஆட்சியில் இந்த இல்லம் கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மனோரஞ்சிதம் இல்லம் (NB No.24): அதிமுக ஆட்சியில் மின்துறை அமைச்சர் தங்கமணி வசித்த இந்த இல்லத்தில், திமுக ஆட்சியில் ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வசித்து வந்தார். தற்போதைய தவெக ஆட்சியில் இந்த இல்லம் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் முகமது ஃபர்வாஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அன்பு இல்லம்: அதிமுக ஆட்சியில் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் வசித்த இந்த இல்லத்தில், திமுக ஆட்சியில் வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வசித்து வந்தார். தற்போதைய தவெக ஆட்சியில் இந்த இல்லம் செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் குமாருக்கு தரப்பட்டுள்ளது.
பொதிகை இல்லம்: அதிமுக ஆட்சியில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வசித்த இந்த இல்லத்தில் (திருவரங்கம்), திமுக ஆட்சியில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வசித்து வந்தார். தற்போதைய தவெக ஆட்சியில் ‘பொதிகை’ இல்லம் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் தென்னரசுவுக்கு தரப்பட்டுள்ளது.
அதே வளாக பங்களா (NCB No.18): அதிமுக ஆட்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி வசித்த இந்த இல்லத்தில், திமுக ஆட்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜு வசித்து வந்தார். தற்போதைய தவெக ஆட்சியில் இந்த NCB No.18 பங்களா பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமாருக்கு தரப்பட்டுள்ளது.
அதே வளாக பங்களா (NCB No.15): அதிமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வசித்த இந்த இல்லத்தில், திமுக ஆட்சியில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வசித்து வந்தார். தற்போதைய தவெக ஆட்சியில் இந்த NCB No.15 பங்களா இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
பசுமைவழிச் சாலையின் பிற பங்களாக்கள் யார் யாரிடம் இருந்தது என்கிற விவரங்களை பார்க்கலாம்..
சூரியகாந்தி இல்லம்: அதிமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வசித்த இந்த இல்லம், திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு ஒதுக்கப்பட்டது.
செண்பகம் இல்லம்: அதிமுக ஆட்சியில்ா சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வசித்த இந்த இல்லம், திமுக ஆட்சியில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டது.
செந்தாமரை இல்லம்: அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வசித்த இந்த இல்லம், திமுக ஆட்சியில் செய்தித்துறை அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதனுக்கு ஒதுக்கப்பட்டது.
செவ்வந்தி இல்லம்: அதிமுக ஆட்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வசித்த இந்த இல்லம், திமுக ஆட்சியில் அவர் எதிர்க்கட்சித் தலைவராக மாறியபோதும் அதே இல்லத்தில் வசிக்க அனுமதிக்கப்பட்டார். இன்று மே 29-ந் தேதி இந்த பங்களாவை எடப்பாடி பழனிசாமி காலி செய்துவிட்டு சென்னை ராயப்பேட்டை பகுதியில் புதிய வீட்டுக்கு குடியேறினார்.
வைகை இல்லம்: அதிமுக ஆட்சியில் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் வசித்த இந்த இல்லம், திமுக ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு ஒதுக்கப்பட்டது.
தென்பெண்ணை இல்லம்: அதிமுக ஆட்சியில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வசித்த இந்த இல்லம், திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு ஒதுக்கப்பட்டது.
காவேரி இல்லம்: அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வசித்த இந்த இல்லம், திமுக ஆட்சியில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணிக்கு ஒதுக்கப்பட்டது.
எழில் இல்லம்: அதிமுக ஆட்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ வசித்த இந்த இல்லம், திமுக ஆட்சியில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு ஒதுக்கப்பட்டது.
- அதிமுக ஆட்சியில் கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வசித்த இல்லம், திமுக ஆட்சியில் துணை சபாநாயகர் பிச்சாண்டிக்கு ஒதுக்கப்பட்டது.
- அதிமுக ஆட்சியில் வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி வசித்த இல்லம், திமுக ஆட்சியில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ஒதுக்கப்பட்டது.
- அதிமுக ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் வசித்த இல்லம், திமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசருக்கு ஒதுக்கப்பட்டது.
- அதிமுக ஆட்சியில் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா வசித்த இல்லம், திமுக ஆட்சியில் அரசு கொறடா கோவி.செழியனுக்கு ஒதுக்கப்பட்டது.
- அதிமுக ஆட்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி வசித்த இல்லம், திமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு ஒதுக்கப்பட்டது.
- அதிமுக ஆட்சியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் வசித்த இல்லம், திமுக ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசனுக்கு ஒதுக்கப்பட்டது.
- அதிமுக ஆட்சியில் அரசு கொறடா ராஜேந்திரன் வசித்த இல்லம், திமுக ஆட்சியில் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்திக்கு ஒதுக்கப்பட்டது.
- அதிமுக ஆட்சியில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் வசித்த இல்லம், திமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கப்பட்டது.
- அதிமுக ஆட்சியில் கதர் கிராமத் தொழில் அமைச்சர் பாஸ்கரன் வசித்த இல்லம், திமுக ஆட்சியில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனுக்கு ஒதுக்கப்பட்டது.
- அதிமுக ஆட்சியில் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வசித்த இல்லம், திமுக ஆட்சியில் காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு வழங்கப்பட்டது.
- அதிமுக ஆட்சியில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் வசித்த இல்லம், திமுக ஆட்சியில் கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்திக்கு ஒதுக்கப்பட்டது.
