‘கிரீன்வேஸ் சாலை’ டூ ‘ராயப்பேட்டை’.. அரசு இல்லத்தை காலி செய்த எடப்பாடி.. பின்னணி என்ன?

By Pandeeswari Gurusamy

|

Published on 29 May 2026, 10:27 AM

Who is in the NDA alliance

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னை பசுமைவழிச் சாலையில் வசித்து வந்த அரசு இல்லத்தைக் காலி செய்து ராயப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்கி உள்ளார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆளும் கட்சியான திமுக 59 இடங்களிலும், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக 47 இடங்களிலும் வெற்றி பெற்றன. தவெக தலைவர் விஜய் தமிழக முதல்வராக கடந்த மே 10 ம் தேதி முதல்வராக பொறுப்பேற்றார்.

ADVERTISEMENT

இந்நிலையில், அதிமுக தரப்பில் வெற்றி பெற்ற நான்கு எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2011 முதல் 2021 வரை 10 ஆண்டுகள் ஆளும் கட்சியாக இருந்த அதிமுக, தற்போது பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்து மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. இதனால் அதிமுக தொண்டர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதற்கிடையில், எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை இழந்ததால் எடப்பாடி பழனிசாமி அரசு பங்களாவை காலி செய்ய வேண்டிய நிலை உருவானது. இதனைத் தொடர்ந்து, பசுமைவழிச் சாலையில் உள்ள அரசு இல்லத்தைக் காலி செய்த எடப்பாடி பழனிசாமி, ராயப்பேட்டையில் உள்ள இல்லத்திற்கு இன்று காலை குடிபெயர்ந்தார்.

ADVERTISEMENT

அமைச்சர், தமிழக முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் என கடந்த 15 ஆண்டுகளாகப் பசுமைவழிச் சாலையில் வசித்து வந்த எடப்பாடி பழனிசாமி, தற்போது எம்எல்ஏவாக மட்டுமே இருப்பதால் அரசு இல்லத்தைக் காலி செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

முன்னதாக, கடந்த 2021-ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த எடப்பாடி பழனிசாமி, தான் முதல்வராக இருந்தபோது தங்கியிருந்த அதே கிரீன்வேஸ் சாலை இல்லத்திலேயே தொடர்ந்து வசிக்க விரும்புவதாக என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர் தொடர்ச்சியாக அந்த இல்லத்தில் வசித்து வந்தார்.

ADVERTISEMENT

இதுகுறித்து நமது மின்னம்பலத்தில் டிஜிட்டல் திண்ணை: எடப்பாடிக்கு ஓகே சொன்ன ஸ்டாலின்.. உதயநிதிக்கு விஜய்..? செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி இன்று தனது வீட்டை மாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel