அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த விவகாரத்தில் திமுக (DMK) மீது மதிமுக (MDMK) பொதுச்செயலாளர் வைகோ (Vaiko) சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
விருதுநகர் சத்திரப்பட்டியில் இன்று மே 29-ந் தேதி வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது: அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலே வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் நான்கு பேர், தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டதாக செய்தி வந்த கணம் முதல்… கடுமையான விமர்சனங்கள், ‘குதிரை பேரம்’ என்றும், ‘ஏமாற்று வேலை’ என்றும் பல பேர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
I differ from them (நான் அவர்களிடமிருந்து மாறுபடுகிறேன்).
அன்று மதிமுகவின் கம்பம் ராமகிருஷ்ணன்

ஏனெனில், 2006-ஆம் ஆண்டில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பம்பரம் சின்னத்தில் கம்பம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கம்பம் ராமகிருஷ்ணன் MLA… எங்க சின்னத்துல போட்டியிட்டு நான் ஊர் ஊரா போய் பிரச்சாரம் பண்ணி ஜெயிச்சவரு… 2009-இல் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மறுநாளே திமுகவிலே போய் சேர்ந்தார். அதற்குப் பிறகு நடைபெற்ற இடைத்தேர்தலில், அவர் திமுகவின் சின்னத்தில் போட்டியிட்டு, திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.
அன்று அதிமுகவின் அனிதா ராதாகிருஷ்ணன்

அதேபோல, அனிதா ராதாகிருஷ்ணன், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலே அமைச்சராக இருந்தவர், ஒரு கட்டத்தில் அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்துவிட்டு, எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்துவிட்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தில் வந்து சேர்ந்தார். அதே தொகுதியில், திருச்செந்தூர் தொகுதி இடைத்தேர்தலில், திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு ஜெயித்து, சட்டசபை உறுப்பினர் ஆனார்.
அன்று திமுக செய்ததுதான்..
அன்று அவர்கள் செய்ததைத்தானே இன்றைக்கு இந்த 4 சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள் செய்கிறார்கள்? அதையெல்லாம் மறந்து போய்விட்டதா? சிலர் காட்டிய வழியைச் சிலர் பின்பற்றுகிறார்கள்.
I am neither against them nor for them (நான் அவர்களுக்கு எதிராகவும் இல்லை, அவர்களுக்கு ஆதரவாகவும் இல்லை).
அப்போ ஏன் யாரும் பேசலை?
இந்தக் கருத்தை முதல்ல வெளியில் தெரியணும்கிறதுக்காக… இது முந்தி நடந்தது இல்ல? அப்ப யாரும் வாயைத் திறக்கல, விமர்சனம் பண்ணல. இப்ப, அவர்கள் எப்படி ஒரு வழியைப் பார்த்தார்களோ, அந்த வழியை இப்ப அதிமுகவில் இருந்து வந்த நான்கு எம்.எல்.ஏ.க்கள் பின்பற்றி இருக்கிறார்கள்.
That’s all (அவ்வளவுதான்). இதான் என்னுடைய கருத்து. இவ்வாறு வைகோ கூறினார்.
ஆப்சென்ட் ஆன மதிமுக எம்.எல்.ஏ.க்கள்
தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த போது திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். ஆனால் அன்றைய தினம் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்ற மதிமுகவின் எம்.எல்.ஏ.க்கள் இருவரும் சென்னையில் இருந்த போதும் மதிமுகவின் நிர்வாக குழு கூட்டத்தை காரணம் காட்டி சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
டெல்லியில் விஜய், துரை வைகோ


தமிழக முதல்வர் விஜய் மே 27-ந் தேதி டெல்லி சென்று பிரதமர் மோடி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். அன்றைய தினம் மதிமுகவின் முதன்மை செயலாளர் துரை வைகோ டெல்லியில் மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்தார். டெல்லியில் முதல்வர் விஜய்யை துரை வைகோ சந்தித்து பேசியதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.
சிபிஐ, சிபிஎம், விசிக வரிசையில் மதிமுக
ஏற்கனவே திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவு தருகின்றன. விசிகவும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் முதல்வர் விஜய் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளன. இதனால் விசிக, முஸ்லிம் லீக் கட்சிகளை திமுகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அரியலூர் குன்னத்தில் திமுக- விசிக தொண்டர்களிடையே மோதலும் ஏற்பட்டிருந்தது. தற்போது திமுகவின் கூட்டணி கட்சிகளின் ஒன்றான மதிமுகவின் பொதுச்செயலாளர் திமுக மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
