சென்னையில் முதல்வர் விஜய் தலைமையில் தமிழ்நாடு அரசின் “வெற்றி முதலீட்டாளர்கள் மாநாடு” நேற்று நடைபெற்றது.

இம்மாநாடு தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் முன்னிலையில் 13.8.2026 அன்று சென்னையில் நடைபெற்ற வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், 67,452 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1,06,998 வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த அரசு பொறுப்பேற்ற 100 நாட்களில் 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும், வர்த்தகம், வணிகம், இருதரப்பு முதலீடுகள் மற்றும் சகோதர நகர ஒத்துழைப்பு, இணையப் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்கள், செமிகண்டக்டர் துறையில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றம் ஆகிய துறைகளில், கஜகஸ்தான், நியூசிலாந்து மற்றும் ரஷ்யா நாடுகளைச் சார்ந்த நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுடன், தமிழ்நாடு 7 நிறுவன ரீதியான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.
இதில் 55 திட்டங்கள் புதிய திட்டங்களாகவும் (Greenfield), 50 திட்டங்கள் ஏற்கனவே செயல்பட்டுவரும் நிறுவனங்களின் விரிவாக்கத் திட்டங்களாகவும் (Brownfield) உள்ளன.
புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட சில முக்கிய திட்டங்களின் விவரங்கள்:
ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்: தூத்துக்குடியில் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம், இந்தியாவின் முதல் தனியார் சுற்றுப்பாதை ஏவுகலன் தயாரிப்பு நிறுவனமாக, ஏவுகலன்களின் உற்பத்தி, சேமிப்பு, ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை வசதிகளை அமைக்க உள்ளது. இதற்காக 250 கோடி ரூபாய் முதலீடு செய்து, 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படவுள்ளது.
அக்னிகுல் காஸ்மாஸ்: தூத்துக்குடியில் அக்னிகுல் காஸ்மாஸ் நிறுவனம், இந்தியாவின் முதல் தனியார், மீண்டும் பயன்படுத்தக்கூடிய திரவ உந்துவிசை ஏவுகலன் தயாரிப்பு நிறுவனமாக, மீண்டும் பயன்படுத்தக்கூடிய திரவ உந்துவிசை ஏவுகலன்களின் ஒருங்கிணைப்பு மற்றும் தயாரிப்பு வசதிகளை அமைக்கவுள்ளது. இதற்காக 400 கோடி ரூபாய் முதலீடு செய்து, 1,500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படவுள்ளது.
அல்ட்ராவயலட்: கிருஷ்ணகிரியில் அல்ட்ராவயலட் நிறுவனம், மின்சார இருசக்கர வாகனங்களுக்கான உற்பத்தி ஆலையை (OEM) அமைக்கவுள்ளது. இதற்காக 779 கோடி ரூபாய் முதலீடு செய்து, 4,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படவுள்ளது.
சூப்பர் மைக்ரோ: சென்னையில், அமெரிக்காவைச் சேர்ந்த Fortune 500 (தத்தரவரிசை 292) நிறுவனமான சூப்பர் மைக்ரோ, சர்வர்கள் (Servers) உற்பத்தி மற்றும் ஒருங்கிணைப்பு மையத்தை அமைக்கவுள்ளது. இதற்காக 477 கோடி ரூபாய் முதலீடு செய்து, 150 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படவுள்ளது.
YKK, ஜப்பான்: திருவள்ளூரில் ஜப்பானைச் சேர்ந்த YKK நிறுவனம், ஜிப்பர்கள் மற்றும் இணைப்பு சாதனங்கள் உற்பத்தி செய்யும் ஆலையை அமைக்கவுள்ளது. உலகின் மிகப்பெரிய ஜிப்பர் மற்றும் இணைப்பு சாதனங்கள் உற்பத்தியாளரான YKK, இதற்காக 1,651 கோடி ரூபாய் முதலீடு செய்து, 4,316 நபர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவுள்ளது.
ஷைலி இன்ஜினீயரிங் ப்ளாஸ்டிக்ஸ்: ஷைலி இன்ஜினீயரிங் ப்ளாஸ்டிக்ஸ் நிறுவனம், நுகர்வோர் மின்னணு சாதனங்களுக்கான உதிரிபாகங்களை உற்பத்தி செய்யும் ஆலையைத் தமிழ்நாட்டில் அமைக்கவுள்ளது. குஜராத்திற்கு வெளியே இந்நிறுவனம் மேற்கொள்ளும் முதல் முதலீடு இதுவாகும். இதற்காக 500 கோடி ரூபாய் முதலீடு செய்து, 400 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படவுள்ளது.
ஆவிட் குழுமம் (Avid Group) : ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆவிட் குழுமம், அடுத்த ஐந்து ஆண்டுகளில், தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுலா, சுகாதாரம், சுரங்க உபகரண உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடு செய்ய முன்வந்துந்துள்ளது. முதற்கட்டமாக, 7,000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 12,000 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில், மேற்கண்ட துறைகளில், திருவள்ளூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் முதலீடு மேற்கொள்ளவுள்ளது.
பிட்சர் (BITZER), ஜெர்மனி : ஜெர்மனியைச் சேர்ந்த உலகின் முன்னணி HVAC கம்ப்ரசர் உற்பத்தியாளரான BITZER, இந்தியாவில் தனது முதல் HVAC கம்ப்ரஸர்கள் உற்பத்தி ஆலையை சுமார் 300 கோடி ரூபாய் முதலீட்டில் காஞ்சிபுரத்தில் அமைக்கிறது.
JK டயர் : JK டயர் நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனது டயர் உற்பத்தித் திட்டத்தை 5,143 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 3,510 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில், விரிவாக்கம் மேற்கொள்ளவுள்ளது.
டைம்லர், ஜெர்மனி : ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டைம்லர் நிறுவனம், தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சிப்காட் ஒரகடம் தொழிற்பூங்காவில், வணிக வாகனங்கள் உற்பத்தி செய்து வருகிறது. இந்நிறுவனம், ஒரகடத்தில் அமைந்துள்ள தனது 400 ஏக்கர் பரப்பிலான உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி மையத்தை 4,000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 400 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் வணிக வாகனங்களுக்கான வடிவமைப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தி ஆகிய பணிகளுக்காக இந்த மையத்தை மேம்படுத்தவுள்ளது.
மேற்கூறிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
- திருவள்ளூர்
- காஞ்சிபுரம்
- திண்டுக்கல்
- கடலூர்
- சென்னை
- தூத்துக்குடி
- சிவகங்கை
- கிருஷ்ணகிரி
- செங்கல்பட்டு
- தென்காசி
- திருநெல்வேலி
- ராணிப்பேட்டை
- வேலூர்
- கோயம்புத்தூர்
- ராமநாதபுரம்
- ஈரோடு
- கரூர்
- நாமக்கல்
- திருவண்ணாமலை
- திருப்பூர்
- புதுக்கோட்டை
- திருச்சிராப்பள்ளி
- நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களில் பரவலாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் இராமநாதபுரம் மாவட்டத்தில், முதன்முதலாக தொழில் திட்டம் தொடங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
நிறுவன புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
மேலும், வர்த்தகம், வணிகம் மற்றும் இருதரப்பு முதலீடுகள், இணையப் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்கள், செமிகண்டக்டர் துறையில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றம் ஆகிய துறைகளில், கஜகஸ்தான், நியூசிலாந்து மற்றும் ரஷ்யா நாடுகளைச் சார்ந்த நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுடன், தமிழ்நாடு 7 நிறுவன ரீதியான புரிந்துணர்வு ஒப்பந்தங்களைொண்டுள்ளது.
அதன் விவரங்கள் பின்வருமாறு :-
- இன்வெஸ்ட் கஜகஸ்தான் நிறுவனம், இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டை மேம்படுத்தும் நோக்கில், 2026 செப்டம்பரில் 100 பேர் கொண்ட வர்த்தகக் குழுவை தமிழ்நாட்டிற்கு அழைத்துவர உள்ளது.
- INZBC, நியூசிலாந்து நிறுவனம், 2026 அக்டோபரில் கிறைஸ்ட்செர்ச் நகர் மேயர் தலைமையிலான குழுவை தமிழ்நாட்டிற்கு அழைத்துவர உள்ளது.
- Idea to Impact Foundation நிறுவனத்துடன் வழிகாட்டி நிறுவனம், 3 ஆண்டுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு, வால்மார்ட் விரிவாக்கத் திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்த உள்ளது. இதன்மூலம் தமிழ்நாடு தொழில் நிறுவனங்களுக்கு நவீன வர்த்தகம், மின்னணு வர்த்தகம் மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளுக்கான வாய்ப்புகள் உருவாகும்.
முதற்கட்டமாக 9 மாவட்டங்களில், உள்ளூர் உற்பத்தியாளர்களின் திறனை மேம்படுத்தி, அவர்களின் தயாரிப்புகளை தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளுக்குக் கொண்டுசெல்லும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
சென்னை, கோயம்புத்தூர், காஞ்சிபுரம், மதுரை, சேலம், தூத்துக்குடி, திருப்பூர், திருவள்ளூர் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் இந்நிகழ்வுகள் மேற்கொள்ளப்படும்.
- டிட்கோ நிறுவனம், Bosch Global Software Technologies நிறுவனத்துடன் இணைந்து இணையப் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களுக்கான சிறப்பு மையத்தை அமைத்திடும். இதன்மூலம், 10,000 மாணவர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும். 500-க்கும் மேற்பட்ட புத்தாழில் மற்றும் குறு, சிறு நிறுவனங்களுக்கு ஆதரவு மற்றும் 100-க்கும் மேற்பட்ட உயர்திறன் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
- WOWsemi நிறுவனம் கோயம்புத்தூரில் செமிகண்டக்டர் துறை திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையம் (Skilling Academy) அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்காக அடுத்த 2 ஆண்டுகளில் 75 கோடி ரூபாய் முதலீடு செய்து, Wafer on Wheels, அனுபவ மையம் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையம் அமைக்கப்படும். இதன்மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் 75,000-க்கும் மேற்பட்டோருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு, குறைந்தபட்சம் 15,000 நபர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
- Sberbank – ரஷ்யா : ரஷ்யாவின் முன்னணி வங்கியான Sberbank, தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு, கல்வி, சுகாதாரம், நகர்ப்புற மேம்பாடு மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைக்கவுள்ளது. இது தமிழ்நாடு–ரஷ்யா இடையிலான பொருளாதார மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பில் புதிய வாய்ப்புகளுக்கு வழிகோலும்.
