டாடா சன்ஸ் குழும தலைவர் என்.சந்திரசேகரன் ராஜினாமா- என்ன நடந்தது?

Published On:

| By Mathi

N Chandrasekaran Steps Down as Tata Sons Chairman

நாட்டின் முன்னணி தொழில் குழுமமான டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக (Tata Sons Chairman) திகழ்ந்து வரும் தமிழரான என். சந்திரசேகரன் (N Chandrasekaran) தாம் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்தவர் நடராஜன். மோகனூர் அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் கற்று கோவை மற்றும் திருச்சியில் கல்லூரி கல்வியை நிறைவு செய்தார்.

ADVERTISEMENT

2007-ம் ஆண்டு முதல்

டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் TCS நிறுவனத்தில் 1987-ல் பொறியாளராக பணியில் சேர்ந்த நடராஜன் 2007-ல் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உயர்வு பெற்றார்.

2017-ம் ஆண்டு டாடா நிறுவனங்களின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக நடராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டார். டாடா குடும்பத்தைச் சேராத, டாடா குடும்பத்தின் ரத்த உறவு இல்லாத ஒருவர் அக்குழுமத்தின் தலைவரான முதல் முறை. இதனால் தமிழ்நாடும் பெருமிதமடைந்தது.

ADVERTISEMENT

2022-ஆம் ஆண்டு நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருது, நடராஜனுக்கு வழங்கப்பட்டது.

ராஜினாமா அறிவிப்பு

இந்த நிலையில் டாடா குழும நிறுவனங்களின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக நடராஜன் அறிவித்துள்ளார். அவரது பதவி காலம் 2027-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முடிவடையும் நிலையில் நடராஜன் இந்த முடிவை அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT

விலகல் ஏன்? நடராஜனின் அறிக்கை

டாடா குழும தலைவர் பதவியில் இருந்து தாம் விலகுவது தொடர்பாக நடராஜன் வெளியிட்ட அறிக்கை: நான் டாடா குழுமத்தில் 40 ஆண்டுகால பணி வாழ்க்கையை நிறைவு செய்துள்ளேன். இந்த நிறுவனத்திற்கு பங்களிக்கும் வாய்ப்பு கிடைத்ததற்கு நான் மிகவும் நன்றியுடன் இருக்கிறேன்.

கடந்த 10 ஆண்டுகளாக டாடா சன்ஸை வழிநடத்தியது எனக்குக் கிடைத்த பெரும் கௌரவமாகவும், அதே சமயம் பெரும் பொறுப்பாகவும் கருதுகிறேன்.

டாடா சன்ஸ் நிர்வாக குழுவில் எதிர்ப்பு

டாடா சன்ஸ் தலைவராக எனது தற்போதைய பதவிக்காலம் பிப்ரவரி 20, 2027 அன்று முடிவடைகிறது. சர் டோராப்ஜி டாடா அறக்கட்டளை மற்றும் சர் ரத்தன் டாடா அறக்கட்டளை ஆகியவை எனது பதவிக்காலத்தை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க ஒருமனதாகத் தீர்மானித்து பரிந்துரைத்தன.

இது டாடா சன்ஸ் நிர்வாக குழு கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 24, 2026 அன்று டாடா சன்ஸ் நிர்வாக குழு கூட்டத்தில் இத் தீர்மானம் முன்வைக்கப்பட்டது. ஆனால் டாடா சன்ஸ் நிர்வாகக் குழு உறுப்பினர் ஒருவர் இதற்கு ஆதரவு அளிக்கவில்லை. இப்படி ஒருமனதான ஆதரவு இல்லாத சூழலில், இந்த முடிவை ஒத்திவைக்க நான் தீர்மானித்துள்ளேன்.

தலைமைத்துவம் குறித்த தெளிவு தேவை

டாடா சன்ஸ் நிர்வாக குழுக் கூட்டத்திற்குப் பிறகு 6 மாதங்கள் கடந்துவிட்டன, இதுவரை எந்தத் தீர்மானமும் எட்டப்படவில்லை. டாடா சன்ஸ் என்பது மிகப் பெரும் ஒரு நிறுவனம், இதில் பல முக்கிய திட்டங்கள் மிக முக்கியமான கட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பிப்ரவரி 2027-க்கு அப்பால் குழுமத்தை வழிநடத்த ஒரு தலைவர் இருப்பது அவசியமானது மட்டுமல்லாமல், ஊழியர்கள், முதலீட்டாளர்கள், பங்குதாரர்களுக்குத் தலைமைத்துவம் குறித்த தெளிவு இருப்பதும் மிக முக்கியமாகும்.

சுமூகமான தலைமை மாற்றம்

இத்தகைய சூழ்நிலையில், பிப்ரவரி 20, 2027 அன்று எனது பதவிக்காலம் முடிவடையும் போது, மீண்டும் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை என்ற எனது முடிவை இன்று டாடா சன்ஸ் நிர்வாகக் குழுவுக்குத் தெரிவித்துள்ளேன். சுமூகமான தலைமை மாற்றத்தை உறுதி செய்திட, எனக்கு அடுத்த தலைவர் யார் என்பது குறித்து டாடா சன்ஸ் நிர்வாக குழு விரைவில் முடிவெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளேன். அனைவரது ஆதரவுக்கும் நான் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பங்கு சந்தையில் சரிவு

டாடா குழும தலைவர் பதவியில் இருந்து நடராஜன் விலகுவதாக அறிவித்த நிலையில் பங்குச் சந்தையில் டாடா பங்குகள் 3% அளவுக்கு சரிவை சந்தித்துள்ளன.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share