எஸ்கே உடன் மனக்கசப்பா? கங்கை அமரன் பேச்சுக்கு வெங்கட் பிரபு முற்றுப்புள்ளி!

Published On:

| By Pandeeswari Gurusamy

ஒரு நல்ல கதை அமைந்தால் எஸ்கே உடன் இணைந்து பணியாற்ற நான் நிச்சயமாக விரும்புவேன் என இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர், பாடகர், நடிகர், இயக்குனர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர் கங்கை அமரன். இவர் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தனது மகன் வெங்கட் பிரபுவின் அடுத்த படம் தாமதம் குறித்து ஆதங்கத்தை பகிர்ந்திருந்தார்.

ADVERTISEMENT

அதில் அவர் பேசுகையில், “வெங்கட் பிரபுவின் வளர்ச்சி நன்றாக உள்ளது; அவனிடம் நல்ல கதைகளும் ஐடியாக்களும் உள்ளன. அவன் வேறு ஒரு நடிகரை நம்பி இருந்ததால், அந்தப் படம் தாமதமாகிவிட்டது. கதையெல்லாம் தயார் செய்து, முன் தயாரிப்புப் பணிகளுக்காக அமெரிக்கா வரை சென்று வந்த நிலையில், அந்த நடிகர் மற்றொரு படத்தின் வெற்றிக்குப் பிறகு, அதே இயக்குனருடன் தொடர்ந்து படங்கள் பண்ணப்போவதாகக் கூறி வெங்கட் பிரபுவின் படத்தைத் தள்ளிப்போட்டுவிட்டார். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் நமது குடும்பத்திற்கு அவமானம் இல்லையா? உன்னை ஒருவர் தவிர்க்கும்போது நீ அவரைத் தவிர்த்துவிடு” என்று காரசாரமாகப் பேசியிருந்தார்.

கங்கை அமரனின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அந்த நடிகர் சிவகார்த்திகேயன் தான் என்று வலைதளங்களில் சர்ச்சைகள் எழத் தொடங்கின.

ADVERTISEMENT

இந்நிலையில், இந்தச் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இயக்குனர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தெளிவான விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், “எஸ்கே (SK) எப்போதும் எனக்கு ஒரு அன்பான நண்பர் மற்றும் சகோதரர். பலவிதமான யூகங்களும் சர்ச்சைகளும் சுற்றி வருகின்றன. ஒரு தந்தையாக, தன் மகனின் படம் தாமதமாகும் போது அந்த ஆதங்கம் ஏற்படுவது இயல்புதான். அவருக்கு முழுமையான சூழல் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, அதற்காக நான் அவரை நிச்சயம் குறை சொல்ல மாட்டேன்.

ADVERTISEMENT

நான் என் வேலையைப் பொறுத்தவரை மிகவும் அமைதியானவன். தொழில்முறை விஷயங்களை என் தந்தை உட்பட யாருடனும் விரிவாக விவாதிக்க மாட்டேன். பல காரணங்களால் இந்தத் திட்டம் தள்ளிப்போனதே தவிர, இதில் எந்தவித மனக்கசப்பும் இல்லை.

நேரம் கூடிவந்து, ஒரு நல்ல கதை அமைந்தால் எஸ்கே உடன் இணைந்து பணியாற்ற நான் நிச்சயமாக விரும்புவேன். எனவே, தயவுசெய்து இந்தச் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம். நான் என் அடுத்த வேலையில் பிஸியாக இருக்கிறேன். என் சகோதரரின் ‘சேயன்’ திரைப்படத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.

வெங்கட் பிரபுவின் இந்த நெகிழ்ச்சியான பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி, அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share