நடிகர் தனுஷின் 56-வது படமான D56 படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 25-ம் தேதி பூஜையுடன் தொடங்கியுள்ளது. லப்பர் பந்து படத்தை இயக்கிய தமிழரசன் பச்சமுத்து இந்தப் படத்தை இயக்குகிறார்.
D56 படத்தில் தனுஷுடன் வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, ‘உறியடி’ விஜயகுமார், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

தனுஷும் வடிவேலுவும் முதல் முறையாக ஒரே படத்தில் இணைந்து நடிப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பூஜை நிகழ்ச்சியில் பேசிய வடிவேலு, தனுஷுடன் இதுவரை இணைந்து நடிக்காமல் போனதற்குப் பின்னால் 3-வது நபரால் ஏற்பட்ட தவறான புரிதல் இருந்தது என்றார்.
ராயன் படத்துக்குப் பிறகு தனுஷ் – எஸ்.ஜே.சூர்யா கூட்டணியும் இந்தப் படத்தில் மீண்டும் இணைகிறது.

D56 படத்தின் தொடக்க விழா சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே உள்ள மாரநாடு கருப்பணசாமி கோயிலில் நடைபெற்றது. இதில் தனுஷ், வடிவேலு உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின்போது கருப்பணசாமிக்கு 18 அடி உயர அரிவாளை தனுஷ் காணிக்கையாக வழங்கினார்.

D56 படத்துக்கு ‘படையல்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் படக்குழு இதுவரை படத்தின் பெயரை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

Sithara Entertainments, Srikara Studios மற்றும் Primark Productions இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
