Netflix-ன் Never Have I Ever (நெவர் ஹேவ் ஐ எவர்) தொடர் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணன். கனடாவில் பிறந்து வளர்ந்தவர். ஆனால், தனது வேர்களைப் பற்றிப் பேசும்போதெல்லாம் மைத்ரேயி அழுத்தமாக முன்வைக்கும் ஓர் அடையாளம் இருக்கிறது.
தமிழ்… ஈழத் தமிழ்… தமிழீழத் தமிழ்!
தனது பூர்வீகம் இலங்கை என்பதால் தன்னை வெறுமனே “இலங்கையர்” என்று அடையாளப்படுத்திக் கொள்வதைவிட, தனது ஈழத் தமிழ் அடையாளத்தையே மைத்ரேயி தொடர்ந்து முன்னிறுத்தி வருகிறார்.
தற்போது அந்த அடையாளமே அவரைச் சுற்றி மிகப்பெரிய இணைய மோதலுக்கு காரணமாகியுள்ளது.
யார் இந்த மைத்ரேயி ராமகிருஷ்ணன்?
2001-ம் ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள மிசிசாகாவில் பிறந்தவர் மைத்ரேயி ராமகிருஷ்ணன். இலங்கையின் உள்நாட்டுப் போர் காலத்தில் கனடாவுக்குப் புலம்பெயர்ந்த ஈழத் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
2019-ம் ஆண்டு Netflix நடத்திய நடிகர் தேர்வில் சுமார் 15 ஆயிரம் பேரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு Never Have I Ever (நெவர் ஹேவ் ஐ எவர்) தொடரில் தேவி விஸ்வகுமார் கதாபாத்திரத்தில் நடித்தார். 2020-ல் வெளியான இந்தத் தொடர் மைத்ரேயியை சர்வதேச அளவில் பிரபலப்படுத்தியது. நான்கு சீசன்களாக 2023 வரை இந்தத் தொடர் வெளியானது.
Pixar-ன் Turning Red (டர்னிங் ரெட்) படத்திலும் குரல் கொடுத்திருக்கிறார்.
ஆனால் மைத்ரேயியின் திரையுலக அடையாளத்தைத் தாண்டி, அவரது ஈழத் தமிழ் அடையாளமும் தொடர்ந்து கவனம் பெற்றிருக்கிறது.
2023-ல் Vogue India, மைத்ரேயி ராமகிருஷ்ணன் மற்றும் இசைக் கலைஞர் பிரியா ரகு இடையிலான உரையாடலை வெளியிட்டபோதே, இருவருடைய பின்னணியையும் “shared Eelam Tamil heritage” – “பகிர்ந்துகொள்ளும் ஈழத் தமிழ் பாரம்பரியம்” என்று குறிப்பிட்டிருந்தது.
இப்போது மைத்ரேயி நடித்துள்ள புதிய Netflix படம் Best of the Best (பெஸ்ட் ஆஃப் தி பெஸ்ட்). கல்லூரி மாணவர்களின் பாலிவுட் நடனப் போட்டியை மையமாகக் கொண்ட இந்தப் படத்தில் மாயா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்காக பரதநாட்டியப் பயிற்சியும் பெற்றிருக்கிறார்.
இந்தப் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளுக்கு நடுவேதான் மைத்ரேயியின் அடையாளம் மீண்டும் பேசுபொருளாகி இருக்கிறது.
“Tamil Eelam woman” – பற்றிக்கொண்ட சர்ச்சை
மைத்ரேயி தன்னை “Tamil Eelam woman” – “தமிழீழப் பெண்” என்று அடையாளப்படுத்திப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
மைத்ரேயி கனடாவில் பிறந்தவர். அவரது பெற்றோர் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள். ஆனால் தனது அடையாளத்தைச் சொல்லும்போது ஈழத் தமிழர் – தமிழீழத் தமிழர் என்ற அடையாளத்தை முன்னிறுத்துகிறார்.
படத்தின் வசனத்தையே மாற்றிய மைத்ரேயி
மைத்ரேயியின் ஈழத் தமிழ் அடையாளம் வெறும் பேட்டிகளோடு நின்றுவிடவில்லை. Best of the Best (பெஸ்ட் ஆஃப் தி பெஸ்ட்) படத்திலும் தனது கதாபாத்திரத்தின் அடையாளம் எப்படி குறிப்பிடப்பட வேண்டும் என்பதில் அவர் கவனம் செலுத்தியிருக்கிறார்.
படத்தில் முதலில் மாயா தனது அடையாளத்தை “Tamil Sri Lankan” – “இலங்கைத் தமிழர்” என்று குறிப்பிடும் வகையில் வசனம் எழுதப்பட்டிருந்தது. ஆனால், தன்னை அப்படி அடையாளப்படுத்திக் கொள்வதில்லை என்று கூறி அந்த வசனத்தை மாற்ற மைத்ரேயி கேட்டுக்கொண்டார். அதன்பின்னர்,
“I’m Tamil. My family’s from Sri Lanka” – “நான் தமிழர். எனது குடும்பம் இலங்கையைச் சேர்ந்தது” என்று வசனம் மாற்றப்பட்டது. இப்படி தனது ஈழத் தமிழர் அடையாளத்தை அழுத்தமாக முன்வைக்கும் மைத்ரேயி, இதற்கான தனது நிலைப்பாட்டையும் தெளிவாகப் பதிவு செய்திருக்கிறார்.
“எனது கலாசாரம் தமிழ். எனது நாடு கனடா. எனது வேர்கள் இலங்கையில் இருக்கின்றன” என்று அவர் கூறியிருக்கிறார். அவரது பெற்றோர் இலங்கையில் வளர்ந்து, உள்நாட்டுப் போரின்போது அகதிகளாக அங்கிருந்து வெளியேறியவர்கள்.
இது இப்போது புதிதாக மைத்ரேயி எடுத்திருக்கும் நிலைப்பாடும் அல்ல. 2019-ம் ஆண்டிலேயே தன்னை “Tamil Canadian – தமிழ் கனேடியர்” என்றே குறிப்பிட வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். அப்போதே, “இலங்கையர் என்பது எனது அடையாளம் அல்ல. எனது நாடு கனடா. ஆனால் எனது கலாசாரம் நிச்சயமாக தமிழ்” என்று தெரிவித்திருந்தார்
இதற்கு இலங்கையைச் சேர்ந்த சிங்கள இனவெறியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் மைத்ரேயி மீது வன்மத்தைக் கொட்டுகின்றனர். இந்த எதிர்ப்பு மைத்ரேயியை விமர்சிப்பதோடு மட்டும் நிற்கவில்லை.
அவர் நடித்த படத்தையே குறிவைக்கும் அளவுக்குச் சென்றதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
படத்துக்கு ஒரு ஸ்டார் போடுங்கள்
மைத்ரேயியின் ஈழத் தமிழ் அடையாள நிலைப்பாட்டை எதிர்க்கும் சில சிங்கள தேசியவாத சமூக ஊடகப் பக்கங்கள், அவர் நடித்துள்ள Best of the Best (பெஸ்ட் ஆஃப் தி பெஸ்ட்) படத்தின் IMDb மதிப்பீட்டைக் குறிவைத்துள்ளன. படத்திற்கு ஒரே ஒரு நட்சத்திர மதிப்பீடு கொடுக்குமாறு தங்களது பின்தொடர்பாளர்களைத் தூண்டும் வகையில், சோசியல் மீடியாவில் சிங்கள இனவெறியர்கள் பதிவுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
அதாவது மைத்ரேயியின் அரசியல் அல்லது இன அடையாளக் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக, அவர் நடித்த திரைப்படத்தின் மதிப்பீட்டைக் குறைக்கும் முயற்சியில் சிங்கள இனவாத கும்பல் இறங்கி இருக்கிறது.
இதனால் இலங்கையிலிருந்து பதிவான Best of the Best (பெஸ்ட் ஆஃப் தி பெஸ்ட்) படத்திற்கான மதிப்பீடுகளில் 90 சதவிகிதத்துக்கும் அதிகமானவை ஒரு நட்சத்திர மதிப்பீடுகளாக பதிவாகியுள்ளதாக Jaffna Monitor தெரிவித்துள்ளது.
AI மூலம் நெகட்டிவ் விமர்சனம்?
அத்துடன் படத்தைப் பற்றி எதிர்மறையான விமர்சனங்களை எழுத செயற்கை நுண்ணறிவு கருவிகளையும் சிங்கள இனவெறியர்கள் சமூக ஊடகங்களில் பயன்படுத்தி வருகின்றனர்.
மைத்ரேயியை விடுதலைப் புலிகள் ஆதரவாளராக சித்தரிக்கும் பதிவுகளும் வெளியிடப்பட்டு வருகின்றன.
உடையிலும் தமிழ் பாரம்பரியம்
இதற்கிடையே மைத்ரேயி ராமகிருஷ்ணன் அணிந்திருந்த உடையும் தற்போது கவனம் பெற்றுள்ளது.
அமெரிக்காவின் பிரபலமான The Drew Barrymore Show (தி ட்ரூ பேரிமோர் ஷோ) நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகர் ஹசன் மின்ஹாஜுடன் மைத்ரேயி பங்கேற்றார். அப்போது தமிழ்நாட்டின் பாரம்பரிய பல வண்ண கட்டம் போட்ட புடவையை நவீன உடையாக மாற்றி மைத்ரேயி அணிந்திருந்தார்.
சென்னையைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் அஷ்வின் தியாகராஜன் இந்த உடையை வடிவமைத்துள்ளார். ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, மெரூன், சிவப்பு உள்ளிட்ட நிறங்களைக் கொண்டு இந்த நவீன ஆடை உருவாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அஷ்வின் தியாகராஜன், “இத்தகைய புடவை தமிழ் குடும்பங்களின் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்று. பட்டில் நெய்யப்படும் இது பாரம்பரியம் மற்றும் கொண்டாட்டத்தின் அடையாளம். காலத்தைக் கடந்து நிற்கும் இந்தப் புடவையை நவீன வடிவத்தில் கொண்டுவர விரும்பினோம்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த உடை தொடர்பாக அவர் செப்டம்பர் 22-ம் தேதி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு 5 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. மைத்ரேயியின் இந்த பாரம்பரியம் கலந்த நவீன உடைக்கும் சமூக வலைதளங்களில் வரவேற்பு கிடைத்துள்ளது.
இதற்கிடையே மைத்ரேயியைச் சுற்றி இன்னொரு விவாதமும் எழுந்துள்ளது.
ஈழத் தமிழர் பரதநாட்டியம் ஆடலாமா?
இந்த மோதலுக்கு நடுவில்தான் இன்னொரு விவாதமும் உள்ளே வருகிறது.
Best of the Best (பெஸ்ட் ஆஃப் தி பெஸ்ட்) படத்திற்காக மைத்ரேயி பரதநாட்டியம் பயிற்சி பெற்றிருக்கிறார்.
அப்போது சோசியல் மீடியாவில் சிலர், மைத்ரேயி இந்தியர் இல்லை…
கனடாவில் பிறந்தவர்… இலங்கைத் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்தவர்… அப்படியிருக்க இந்தியப் பண்பாட்டை மையமாகக் கொண்ட பாலிவுட் படத்திலும் பரதநாட்டியத்திலும் அவர் ஏன் பங்கேற்கிறார்? என்று கேள்வி எழுப்புகின்றனர்.
இந்தியப் பண்பாட்டை மையமாகக் கொண்ட கதாபாத்திரங்களுக்கு இந்திய நடிகர்களையே தேர்வு செய்ய வேண்டும் என்ற விமர்சனமும் எழுந்தது. இதற்கு தமிழர்கள் தரப்பிலிருந்து எதிர்வினைகள் வரத் தொடங்கின.
“மைத்ரேயி ஈழத் தமிழர். ஈழத் தமிழர்களும் தமிழர்கள்தான். பரதநாட்டியத்திற்குத் தமிழ்நாட்டுடன் நீண்ட வரலாற்றுத் தொடர்பு இருக்கும்போது, ஈழத் தமிழரான மைத்ரேயிக்கு அந்தக் கலையுடன் தொடர்பில்லை என்று எப்படிச் சொல்ல முடியும்?” என்பது அவர்களது வாதம்.
இதற்கு நடுவே பரதநாட்டியம் எங்கிருந்து வந்தது? அதற்கு முந்தைய சதிராட்டம் என்ன? தேவதாசி மரபுக்கும் சதிராட்டத்துக்கும் என்ன தொடர்பு? இசை வேளாளர் சமூகத்தின் பங்களிப்பு என்ன? ருக்மிணி தேவி அருண்டேலின் பங்கு என்ன? என்று பரதநாட்டியத்தின் வரலாற்றையே சமூக வலைதளங்களில் விவாதிக்கவும் தொடங்கி இருக்கின்றனர்.
ஒருபக்கம் தனது ஈழத் தமிழ் அடையாளத்தை வெளிப்படையாக முன்வைக்கும் மைத்ரேயி… இன்னொரு பக்கம் அதற்கு எதிராக வெடிக்கும் சிங்கள தேசியவாத எதிர்ப்புகள்… அதற்கு நடுவே தமிழ் பாரம்பரிய உடை, பரதநாட்டியம் என நீளும் பண்பாட்டு விவாதங்கள்… மைத்ரேயியின் புதிய படம் மட்டுமல்ல, அவரது ‘தமிழ் அடையாளமும்’ தற்போது சர்வதேச அளவில் பேசுபொருளாகியிருக்கிறது.
