Ambika Vs Radha: நடிகை ராதா கொடுத்த செக் மோசடி புகார் குறித்து அம்பிகா விளக்கம்

Published On:

| By Pandeeswari Gurusamy

நடிகைகள் அம்பிகா – ராதா இடையேயான சொத்து விவகாரம் தற்போது போலீஸ் புகார் வரை சென்றுள்ளது. ”தனது 5 காசோலைகளை எடுத்துச் சென்று, அதில் மொத்தம் ரூ.46 கோடிக்குத் தொகையை நிரப்பி, அம்பிகாவின் பெயரில் வங்கியில் செலுத்த முயற்சி செய்யப்பட்டதாக” சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை ராதா புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அம்பிகா தன் மீதான புகாருக்கு விளக்கம் அளித்துள்ளார். அதில், “ராதா 5 செக்குகளைக் கொடுத்தார் என்பதும் உண்மை; அதை அவர்கள் நிறுத்தி வைத்துள்ளார்கள் என்பதும் உண்மை. ஆனால், ராதா செக் விஷயத்தைச் சொல்லும்போது எனது பெயரிலும் புகார்கள் உள்ளன என்பதை அவர்கள் ஏன் சொல்லவில்லை? நானாக இருந்திருந்தால் அதற்கான காரணத்தைச் சொல்லியிருப்பேன்.

ADVERTISEMENT

ஏ.ஆர்.எஸ். கார்டன் (ARS Garden) என்பது எல்லோருக்கும் தெரியும். ஏ.ஆர்.எஸ். கார்டன் தொடங்கியபோது, எம்.ஜி.ஆரைப் பார்த்து அவரது பெயர் வைக்க வேண்டும் என்று சொன்னபோது, “எதற்காக? உங்கள் மூன்று பேரின் பெயரையும் சேர்த்துப் போடுங்கள்” என்று யோசனை கொடுத்ததே எம்.ஜி.ஆர். தான். ஏ.ஆர்.எஸ். கார்டன் என்னுடைய குழந்தையைப் போலத்தான் நான் இப்போது வரை நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

சில நாட்களுக்கு முன் நான் அங்கு சென்றபோது ‘ஏ.ஆர்.எஸ். கார்டன்’ போர்டை காணவில்லை; வேறு ஒரு போர்டு இருந்தது. எனக்கு இரண்டு மூன்று நிமிடங்கள் எங்கே இருக்கிறேன் என்பதே தெரியவில்லை; தலை சுற்றிவிட்டது; பெரிய அளவில் ‘பேனிக் அட்டாக்’ (Panic attack) வந்துவிட்டது. அந்த ஏ.ஆர்.எஸ். கார்டன் வாங்குவதற்கான முதன்மைக் காரணம் நான் தான் என்பது இந்தச் சினிமா உலகத்திற்குத் தெரியும். அது குறித்த ‘ஷேர்’ (Share) விஷயங்கள் குறித்த பிரச்சினைகள் நீண்ட நாட்களாகச் சென்று கொண்டிருக்கின்றன.

ADVERTISEMENT

ஏ.ஆர்.எஸ். என்ற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனம் (Production company) உள்ளது. அதில் அம்பிகா பெயர் உள்ளது; அதில் மூன்றில் ஒரு பங்கு ‘ஷேர்’ என்னிடம் உள்ளது. அதைப்பற்றிப் பேசினோம்; அதற்குப் பதில் இல்லை. இதுகுறித்துக் கடந்த ஜூலை மாதம் ஆணையரிடம் (Commissioner) புகார் கொடுக்கப்பட்டது; அதுகுறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. அதற்கு பத்து முறை சம்மன் அனுப்பியும் அவர்கள் வரவில்லை.

பின்னர் வருமான வரிச் சோதனை (Income Tax Raid) நடந்த சமயத்தில் நானும் எனது அம்மாவும் சேர்ந்து போய் என்னுடைய நகைகளைக் கேட்டோம்; அதற்கும் பதில் வரவில்லை. என்னுடைய தங்கையைப் பொறுத்தவரை, தங்கத்தைப் பார்த்தாலே ஒரு மாதிரியாக ஆகிவிடுவார். அவரிடம் பேசலாம் என்று பார்த்தால் போனை எடுக்கவில்லை. அம்மா இறந்தபோது பேச்சு வார்த்தை நடத்தி அஃபிடவிட் (Affidavit) போட்டுச் செட்டில்மென்ட் வாங்கியுள்ளோம்; இதெல்லாம் முடிவான விஷயங்கள். அவர் நம்மிடம் பேசும்போது ஒரு மாதிரியாகப் பேசுவார், வீட்டிற்குச் சென்றவுடன் வேறு மாதிரியாகப் பேசுவார். ஏ.ஆர்.எஸ். கார்டன் விஷயத்தில் அம்மா இறப்பதற்கு முன்னால் அவரிடம் பேசியிருக்கிறார்கள்.

ADVERTISEMENT

அப்போது அம்மாவிடம், “எனது பெயரை எடுத்துவிட்டு அக்காவின் பெயரை வையுங்கள்” என்று சொல்லியுள்ளார். இதை ராதாவின் கணவர் ராஜசேகரன் நாயர் ஒரு நேர்காணலில் (Interview) சொல்லியுள்ளார். ஆனால், இப்போது எங்கள் இரண்டு பேரின் பெயரையும் வைக்காமல் அவருடைய பெயரை மட்டும் வைத்தால் எனக்கு எப்படி இருக்கும்? நான் இறந்துவிடவில்லையே, நான் உயிரோடுதானே இருக்கிறேன்! ஒரு வார்த்தை சொல்ல வேண்டாமா? எல்லோரும் சேர்ந்துதானே வாங்கினோம், சொல்ல வேண்டும் அல்லவா?

என்னுடைய தங்கை ராதா எப்போதும் மிகவும் கவனமாக இருப்பவர் வீட்டில் இருந்தால் கூட ஹேண்ட் பேக்கை பூட்டி வைப்பவர். அவர் வந்து, “இந்தச் செக்கை நான் வீட்டில் வைத்துவிட்டுச் சென்றுவிட்டேன், கபோர்டில் வைத்துவிட்டுச் சென்றுவிட்டேன்” என்று சொன்னால் கேட்பவர்கள் எல்லாம் எப்படி நினைப்பார்கள்? அந்தச் செக்கில் கையெழுத்துப் போட்டுள்ளார்கள்; அந்தச் செக்கை எப்படி “என்னுடைய இடத்தில் வைத்துவிட்டுப் போய்விட்டேன்” என்று சொல்ல முடியும்?

காவல் நிலையத்திற்குப் பிரச்சினைகளைப் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்க்கச் சென்றபோது தம்பியிடம் செக் கொடுத்துள்ளார்கள். அது மூன்று செட்டில்மென்ட்களுக்கான தொகை, ஏ.ஆர்.எஸ். தொடர்பான செட்டில்மென்ட் தொகை, அதில் பங்குதாரருக்கான (Partnership) ஒரு தொகை, மற்றும் 1,299 கிராம் நகைக்கான ஒரு செட்டில்மென்ட் தொகை போட்டுக் கொடுத்துள்ளார்கள். இது தொடர்பான வழக்குத் தொடர்ச்சியாகச் சென்றால் ராதா சிறைக்குப் போக வேண்டிய நிலை வரலாம் என்பதால், அதற்காக அவர் செட்டில்மென்ட் எழுதிக் கொடுத்துள்ளார்.

இந்த விவகாரத்தில் செக் கொடுத்தது அவர்; அதை நிறுத்தி வைத்தது அவர்; அது பவுன்ஸ் (Bounce) ஆகிக் காசு போனது எனக்கு. நான் தானே வழக்கு போட வேண்டும்? ஆனால் அவர் வழக்கு போட்டுள்ளார். அப்படியெல்லாம் போகும் குணமுடையவரா (Character) அவர் என்று மனசில் நினைத்துப் பார்க்கிறேன். திடீரென எப்படி வேறு மாதிரியான நபராக மாறினார் ராதா என்பது எனக்கு வருத்தமாக இருந்தது. ஆனால் அவர் சொல்லும் பொய் விஷயங்களும் எனக்கு மிகவும் வருத்தமளிக்கின்றன.

நான் இந்த விவகாரத்தை வெளியில் சொல்லக் கூடாது என்பதற்கு என்னால் இயன்றவரை முயற்சித்தேன். அவர்கள் எங்கள் மீது ரூ.46 கோடி புகார் அளித்துள்ளனர். ஆனால் எங்களுக்குத்தான் ரூ.97 கோடி வர வேண்டும்.

ராதா குடும்பத்திற்கு ARS கார்டனை ரிசார்ட் ஆக்க வேண்டும் என்று எண்ணம் இருந்தது. ஆனால் அவர்களுக்கு கேரளாவில் நட்சத்திர விடுதிகள் உள்ளன. பல்வேறு இடங்களில் பிரம்மாண்டமான இடங்கள் வீடுகள் ரிசார்ட்கள் உள்ளன. அவர்களுக்கு ரூ.5000 கோடி அளவில் சொத்து இருக்கிறது. சந்தோசம்.

நான் இங்கு ARS கார்டனில் உள்ள எனது பங்கை மட்டும் தானே கேட்கிறேன். ஒரு பிரச்சனை நடக்கும் போது பேச வேண்டும் அல்லவா என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share