வெனிசுலாவின் வடக்குக் கடலோரப் பகுதியில் நேற்று மாலை அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு பயங்கர நிலநடுக்கங்கள் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளன. கடந்த பல தசாப்தங்களில் வெனிசுலா சந்தித்த மிக மோசமான பேரழிவாக இது பார்க்கப்படுகிறது.
கரீபியன் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் நேற்று அடுத்தடுத்து 2 சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் (USGS) வெளியிட்டுள்ள தகவலின்படி, யாராகுய் மாநிலத்தில் உள்ள சான் ஃபெலிப் மற்றும் யுமாரே பகுதிகளுக்கு அருகில் நேற்று மாலை முதலில் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக நிலநடுக்கம் பதிவானது.
அது ஏற்பட்ட அடுத்த 39 முதல் 40 விநாடிகளுக்குள், அதைவிடப் பயங்கரமான 7.5 ரிக்டர் அளவில் முதன்மை நிலநடுக்கம் தாக்கியுள்ளது. மிக குறுகிய நேரத்தில் அடுத்தடுத்து இரு பெரும் அதிர்வுகள் ஏற்பட்டதால் பாதிப்புகள் கடுமையாக உள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
கள நிலவரம் மற்றும் சேதங்கள்:
தலைநகர் காரகாஸ் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் இதன் பாதிப்பு மிகக் கொடூரமாக இருந்தது. நிலநடுக்கத்தின் தீவிரத்தால் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் கண் இமைக்கும் நேரத்தில் இடிந்து விழுந்தன. சில இடங்களில் ஒட்டுமொத்த கட்டிடங்களும் தரைமட்டமாகியுள்ளன.
நிலநடுக்கம் ஏற்பட்ட மாலை நேரத்தில் வீடுகள் மற்றும் கடைகளில் இருந்த மக்கள் அலறியடித்தபடி தெருக்களுக்கு ஓடி வந்தனர். தலைநகரின் பல பகுதிகள் இடிபாடுகளாலும், தூசிப் படலங்களாலும் சூழ்ந்துள்ளன. பொதுமக்கள் தங்களின் உடமைகள் மற்றும் செல்லப் பிராணிகளுடன் விடிய விடிய வீதிகளிலேயே தஞ்சமடைந்துள்ளனர்.
நிலநடுக்கத்தின் காரணமாக நிலைமை மிக மோசமாக உள்ளதால், நாடு முழுவதும் உடனடியாக அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சார இணைப்புகளும், மொபைல் உள்ளிட்ட தொலைத்தொடர்பு சேவைகளும் பெருமளவு துண்டிக்கப்பட்டுள்ளன.
தலைநகரின் முதன்மை விமான நிலையமான ‘சிமோன் பொலிவர் சர்வதேச விமான நிலையம்’ தற்காலிகமாக மூடப்பட்டு, விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மறு உத்தரவு வரும் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மீட்புப் பணிகள் மற்றும் உயிரிழப்பு அச்சம்:
தற்போது இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. உள்ளூர் ராணுவம் மற்றும் தீயணைப்பு மீட்புக் குழுவினர் இதில் முழுமையாக ஈடுபட்டுள்ளனர். அண்டை நாடான கொலம்பியா உள்ளிட்ட நாடுகள் அவசர உதவிகளை அனுப்ப முன்வந்துள்ளன.
இதுவரை அதிகாரப்பூர்வமாக எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்ற மொத்த எண்ணிக்கை வெளியாகவில்லை. இருப்பினும், நிலநடுக்கத்தின் தன்மையைக் கணக்கிட்டு USGS வெளியிட்டுள்ள எச்சரிக்கையின்படி, உயிரிழப்புகள் 10,000 கடந்து இருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், முழுமையான சேத விவரங்கள் அடுத்த சில நாட்களில் தான் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெனிசுலா அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும், “பொதுமக்கள் அனைவரும் அமைதியாகவும் ஒற்றுமையாகவும் இருக்க வேண்டும்” என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதேபோல் வெனிசுலா நாட்டின் உள்துறை அமைச்சர் தியோஸ்டாடோ கபெல்லோ கூறுகையில், “நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதால், அடுத்தடுத்து வரக்கூடிய நிலநடுக்க அதிர்வுகளுக்கு அவை இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே மக்கள் அனைவரும் திறந்தவெளியில் பாதுகாப்பாக இருக்க வேண்டும்” என எச்சரித்துள்ளார்.
