வேளச்சேரி சாலைக்கு ‘மேஜர் முகுந்த் வரதராஜன்’ பெயர் :  அரசு உத்தரவு!

Published On:

| By Kavi

தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து வேளச்சேரி வரையிலான சாலைக்கு ‘மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை’ என பெயர் சூட்டி  முதல்வர்  விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இதுகுறித்து இன்று (ஜூன் 24)தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்,  ”இந்திய ராணுவத்தில் திறம்படப் பணியாற்றி, பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளின்போது வீரமரணம் அடைந்தவரும், மரணத்திற்குப் பிறகு, இந்திய அரசின் அமைதிக்கால உயரிய விருதான அசோக் சக்ரா விருது பெற்றவருமான மேஜர் முகுந்த் வரதராஜன் தியாகத்தைப் போற்றுகின்ற வகையில், தாம்பரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி வரையிலான சாலைக்கு “மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை” எனப் பெயர் சூட்டிட வேண்டும் என முதல்வர் விஜய்யை, இந்திய ராணுவத்தின் தென்னிந்திய பகுதிகளுக்கான தளபதி லெப்டினண்ட் ஜெனரல் வி.ஶ்ரீஹரி நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார்.

ADVERTISEMENT

இந்தக் கோரிக்கையினைக் கனிவுடன் பரிசீலித்த முதல்வர், இக்கோரிக்கையின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். அதனடிப்படையில், தாம்பரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி வரையிலான சாலைக்கு, இந்தியத் திருநாட்டிற்காகப் போராடி உயிர்நீத்த வீரரின் மாபெரும் தியாகத்தைப் போற்றுகின்ற வகையில், தமிழில் “மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை” எனவும், ஆங்கிலத்தில் “MAJOR MUKUND VARADARAJAN SALAI” எனவும் பெயர் சூட்டுவதற்கான அரசாணை 23.06.2026 அன்று வெளியிடப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தாம்பரம்- வேளச்சேரி சாலைக்கு அவரது பெயரைச் சூட்ட தாம்பரம் மாநகராட்சிக் கூட்டத்தில் கடந்த வாரம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

ADVERTISEMENT

மேஜர் முகுந்த் வரதராஜன், தாம்பரம் மாநகராட்சி உட்பட்ட அனந்தபுரத்தைச் சேர்ந்தவர். இவர் தாம்பரத்தில் உள்ள சென்னை கிறித்துவக் கல்லூரியில் பட்டப்படிப்பினை நிறைவுசெய்து பின்னர் ராணுவத்தில் பணிபுரிந்து திறம்படப் பணியாற்றி, பணியின்போது வீர மரணம் அடைந்ததால் இவர் “தாம்பரம் மண்ணின் மைந்தர்” எனப் போற்றப்பட்டு வருகிறார். 

முதலமைச்சர் விஜய் அரசாணை வெளியிட்ட நிலையில், முகுந்த் வரதராஜன் பெற்றோர்களை அமைச்சர் சரத்குமார்  இன்று மாலை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். 

ADVERTISEMENT

.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share