திருப்பூர் வேலம்பாளையம் அரசு மருத்துவமனையில் ஊதிய உயர்வு கோரி தூய்மைப்பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு பகுதி 15 வேலம்பாளையத்தில் 5 தளங்களுடன் 100 படுக்கை வசதி கொண்ட அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் தனியார் நிறுவனம் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் 17 தூய்மைப் பணியாளர்கள், 6 காவலாளிகள், 4 உதவி செவிலியர்கள், 2 சூப்பர்வைசர்கள், ஒரு மேலாளர் என மொத்தம் 30 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களுக்கு ஒப்பந்த நிறுவனம் சார்பில் மாதம் 12 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போதைய விலைவாசி உயர்வுக்கு இந்த ஊதியம் போதுமானதாக இல்லை என்பதால், தங்களது மாத சம்பளத்தை 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என கடந்த பல மாதங்களாக தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதில் சிலருக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் சீருடை அணிவதில் தவறுகள நடந்தால் பைன் போடப்படுகிறது. இதுகுறித்து கேட்டால் ஒப்பந்த நிறுவனம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதைக் கண்டித்து ஒப்பந்தப் பணியாளர்கள் 30 பேரும் இன்று தங்களது பணிகளைப் புறக்கணித்தனர். தொடர்ந்து, மருத்துவமனைக்கு வெளியே 15 வேலம்பாளையம் சாலையில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த 15 வேலம்பாளையம் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஒப்பந்த ஊழியர்களின் இந்த திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தால், இன்று அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணிகளும், மருத்துவப் பணிகளும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
