தமிழக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ள விஜய்யின் தவெக ஆட்சி அமைப்பதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரவு தருமா? என்பது குறித்து அக்கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் இன்று மே 5-ந் தேதி செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது: நாங்களும் இடதுசாரித் தலைவர்களும் இணைந்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து, தேர்தல் முடிவுகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினோம். மக்கள் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பை நாங்கள் முழுமையாக மதிக்கிறோம்.
ஒரு கூட்டணி ஆட்சியைத்தான் தமிழ்நாட்டு மக்கள் விரும்புகிறார்கள் என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன. தற்போதைய சூழலில், தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைப்பதற்குத் தேவையான அறுதிப் பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால், அவர்களுக்கு வெளியிலிருந்து ஆதரவு தேவைப்படும் சூழல் உருவாகியுள்ளது.
இருப்பினும், மதச்சார்பின்மைக் கொள்கையின் அடிப்படையில் திமுக தலைமையிலான இந்தக் கூட்டணியிலேயே நாங்கள் உறுதியாக நீடிக்கிறோம். தவெகவுடன் இணைந்து ஆட்சி அமைப்பது குறித்த எந்தவிதமான சிந்தனையோ அல்லது திட்டமோ எங்களிடம் இல்லை; நாங்கள் எங்களது கூட்டணிப் பயணத்தைத் தொடர்வோம். மக்களால் வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பு, மதவாத சக்திகளுக்கு எதிரான ஒன்றாக உள்ளது, அதற்காக நாங்கள் மக்களுக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தரப்பிலிருந்து அழைப்பு வரும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அதனால் அது தொடர்பான யூகங்களுக்கு நாங்கள் பதில் அளிக்க விரும்பவில்லை. காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு அல்லது எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்த கேள்விகள் ஊகங்கள் சார்ந்தவை என்பதால், அது குறித்துப் பேசுவதைத் தவிர்க்கிறேன். ஒட்டுமொத்தத்தில், மக்களின் நலனை முன்னிறுத்தி தற்போதைய கூட்டணியில் நாங்கள் தொடர்ந்து பயணிப்போம் என்பதைத் தெளிவாகத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
