ஒரு மாதத்தில், ஒரு லட்சம் பேர் என் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறீர்கள், என்னை எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்று தெரிந்தது. “இது போதும் எனக்கு” என நடிகர் வையாபுரி தெரிவித்துள்ளார்.
நடிகர் வையாபுரி தான் இன்ஸ்டா கணக்கு தொடங்க காரணமாக நிகழ்வு குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், “எனது இன்ஸ்டாகிராம் தொடங்கி ஒரு மாதம் மட்டுமே ஆகிறது; ஒரு லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள் என்று நினைக்கும்போது உண்மையில் மிகப்பெரிய சந்தோசமாக உள்ளது. நான் எதற்காக இன்ஸ்டாகிராம் ஆரம்பித்தேன் என்றால், ஒரு பெரிய ப்ரொடக்ஷன் மேனேஜர், “நீங்கள் ஆபீஸ் வாருங்கள், நாம் டைரக்டரைப் பார்க்கலாம்” என்று அழைத்திருந்தார். நான் டைரக்டரைப் பார்க்கப் போனேன்; உடனே அந்த டைரக்டர் மேனேஜரிடம் அவரெல்லாம் பழைய ஆர்டிஸ்ட்.. நான் இல்லை என்று சொல்லிவிடுங்கள்” என்று சொல்லிவிட்டார். எனக்கு ரொம்ப சங்கடமாக இருந்தது. அது எனக்கு தெரியாது அந்த மேனேஜர் வெளியே வந்து அந்த டைரக்டருக்கு உங்களை பார்க்க விரும்பம் இல்லையாம் என்றார்.
நான் “ஏன்?” என்று கேட்டபோது, “இப்போது இன்ஸ்டா, ஃபேஸ்புக் போன்றவற்றிலிருந்து நிறைய பேர் புதிது புதிதாக வருகிறார்கள். இவர் எல்லாம் ரொம்ப பழசு” என்று டைரக்டர் சொன்னதாக அந்த மேனேஜர் தெரிவித்தார். இதனால் என் மனம் மிகவும் பாதிக்கப்பட்டது. அப்போது தான் “ஏன் நாம் இன்ஸ்டாகிராம் ஆரம்பிக்கக் கூடாது?” என்று எனக்குத் தோன்றியது. எனக்கு அது பற்றி பெரிதாகத் தெரியவில்லை. “இது மாதிரி இப்போதுள்ள டைரக்டர்களுக்கு எல்லாம் இன்ஸ்டா, ஃபேஸ்புக் எல்லாம் பிடித்திருக்கிறது; அதனால் அவர்களை ஞாபகப்படுத்துவதற்காக நாம் இதில் நமது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வோம்” என்று நினைத்துத்தான் ஆரம்பித்தேன்.

உண்மையில் இந்த ஒரு மாதத்தில், ஒரு லட்சம் பேர் என் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறீர்கள், என்னை எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்று தெரிந்தது. “இது போதும் எனக்கு” என்று கண்கலங்கிய நிலையில் அவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முன்னதாக தேனியில் இருந்து சினிமா கனவுடன் 1980களில் சென்னைக்கு வந்தார் வையாபுரி. வாய்ப்பு தேடிய நாட்களில் தனது வாழ்வாதாரத்திற்காக ஹோட்டலில் வேலை பார்த்துக்கொண்டு தொலைக்காட்சி வாயிலாகவே நடிப்பில் காலடி வைத்தார். ஆரம்பத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த இவர் இயக்குனர் பாலுமகேந்திராவின் இயக்கத்தில் வெளியான ராமன் அப்துல்லா படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் கவனம் பெற்றார். தொடர்ச்சியாக காதலா காதலா, துள்ளாத மனமும் துள்ளும், ஜெமினி, போக்கிரி என பல படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். நடிகர் கமல்ஹாசனுடன் பல படங்களில் கைகோர்த்த இவர் நடிகர் விஜய்யின் லியோ படத்தில் நடித்திருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளாராக பங்கேற்றிருந்த இவர் தற்போது இஸ்டா வீடியோக்கள் மூலம் இளைய தலைமுறையின் கவனத்தை ஈர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
