தமிழகத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கப்படும் என்று முதல்வர் விஜய் இன்று சட்டப்பேரவையில் அறிவித்தார். தமிழக அரசின் அறிவிப்புக்கு நடிகர் அஜித் குமார் நன்றி தெரிவித்துள்ளார்.
அஜித் குமார் சினிமாவில் நடிக்கும் அதேநேரம் தனக்கு மிகவும் பிடித்த கார் பந்தயத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார். உலக அளவில் நடைபெறும் பல்வேறு கார் ரேஸ் போட்டிகளில் அஜித்குமாரின் குழுவினர் பங்கேற்று வெற்றி பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கும் முன்னெடுப்பிற்கு தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அஜித் குமார் தரப்பில் அறிக்கை ஒன்றை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா பகிர்ந்துள்ளார். அதில் “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு,
தமிழ்நாட்டின் இளைஞர்களை விளையாட்டுத் துறையின் பக்கம் ஈர்த்து, அவர்களிடம் உள்ள திறமைகளைக் கண்டறிந்து, அவற்றை முறையாக வளர்த்தெடுப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு முன்னெடுப்புகள் மிகுந்த பாராட்டுக்குரியவை.
குறிப்பாக, தமிழ்நாட்டில் பிரத்யேகமான மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
தற்போது மோட்டார் ஸ்போர்ட்ஸில் ஈடுபட்டு வரும் ஒருவராக, விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் புகழ்பெற்ற வார்த்தைகளை சற்றே மாற்றி இவ்வாறு கூற விரும்புகிறேன்:
“One small step by the Tamil Nadu Government, one giant leap for Indian motorsports (தமிழக அரசின் ஒரு சிறிய அடி, இந்திய மோட்டார் பந்தயத்துறைக்கு ஒரு மாபெரும் பாய்ச்சல்)”
மாண்புமிகு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களின் அனைத்து முயற்சிகளும் பெரும் வெற்றிபெற எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் அனைத்து விளையாட்டு முன்னெடுப்புகளும் மாபெரும் வெற்றி பெறட்டும்.” என தெரிவித்துள்ளார்.
