கைரளி தொலைக்காட்சி சார்பில் நடைபெற்ற ‘டாக்டர்ஸ் அவார்ட்’ விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் மம்மூட்டி, மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு இடையேயான உறவு குறித்து மனம் திறந்து பேசினார்.
அப்போது அவர் பேசுகையில் “நான் பல ஆண்டுகளாக ஒரு நோயாளியாக இருந்தேன்; இப்போது அந்த நோயிலிருந்து முழுமையாகக் குணமடைந்துவிட்டேன் என்று நம்புகிறேன். அந்தக்காலத்தில் எனக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களை இந்தத் தருணத்தில் நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.
நான் ஒரு பிரபலமாக இருந்தேன் என்பதற்காக என்னை அவர்கள் தனித்துவமாக நடத்தவில்லை. என் நோயின் தீவிரம் குறித்து அவர்கள் எப்போதுமே என்னிடம் அச்சம் தரும் விதமாகப் பேசியது கிடையாது. இதுதான் என் அனுபவத்திலிருந்து நான் புரிந்து கொண்டது.
கடுமையான நோய் உடலைப் பாதிக்கும் போது ஆரம்பத்தில் மன உளைச்சலும் பயமும் ஏற்படுவது இயல்புதான். ஆனால், மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்கும் இடையேயான பந்தம் மிகவும் ஆழமானது. எந்த ஒரு மருத்துவர் கூட என்னிடம் ஒருபோதும் எதிர்மறையாகப் பேசியதில்லை. நோயின் பெயரைக் கேட்டாலே பயம் வரும்; ஆனால், மருத்துவர்கள் என்னை எப்போதுமே அந்தப் பயத்தை ஊட்டும் விதமாக நடத்தியதில்லை. ஒரு நோயாளியாக நான் உணர்ந்த உண்மை இதுதான்” என்று மம்மூட்டி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
“மம்முட்டிக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக சமூக வலைத்தளங்களிலும் சில செய்திகள் வெளியான நிலையில் இந்தத் தகவலை மம்மூட்டி தரப்பு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை, இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் மம்முட்டி தனது உடல் நிலை குறித்து பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
