திரைக்கதை ‘ட்ரீட்மெண்டை’ மாற்றியமைத்திருக்கலாம்..!
‘சூப்பரா நடிக்குறாங்க’ என்று சொல்லக்கூடிய இரண்டு நடிப்புக்கலைஞர்கள் ஒரே பிரேமில் தோன்றினால் எப்படியிருக்கும்? அதற்கு ரசிகர்கள் தரும் வரவேற்பு எப்படிப்பட்டதாக அமையும்? அது போன்ற எதிர்பார்ப்பினை உருவாக்கியது ‘மாரீசன்’ படத்தில் வடிவேலுவும் பகத் பாசிலும் இணைந்து நடிக்கின்றனர் என்ற தகவல். டீசர், ட்ரெய்லர் போன்றவற்றைத் தந்து அந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்திய அப்படம் தற்போது தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது.
ஆர்.பி.சௌத்ரி இதனைத் தயாரித்திருக்கிறார். கிருஷ்ணமூர்த்தி இப்படத்தின் கதை திரைக்கதை வசனத்தை அமைக்க, சுதீஷ் சங்கர் இயக்கியிருக்கிறார். யுவன்சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
சரி, எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்கிற வகையில் ‘மாரீசன்’ உள்ளதா?

எதிர்பாராத சந்திப்பு!
எதிரும்புதிருமான இரண்டு மனிதர்கள். இருவருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஆனால், இருவரும் ஒன்றாகச் சில மணி நேரங்கள், நாட்கள் பயணிக்க நேர்கிறது.
அந்தப் பயணத்தின்போது இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டார்களா? அவர்களது எதிர்பாராத சந்திப்பு நடக்கக் காரணமானது எது? இதற்கான பதில்கள் எப்படிப்பட்டவையாக இருக்கும் என்பதே ‘மாரீசன்’ படத்தின் கதையாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு, சிலரது மனங்களில் விரிந்திருக்கும்.
கிட்டத்தட்ட அப்படியொரு புள்ளியில் தொடங்கி மேற்சொன்னவாறே திரையில் கதை விரிகிறது. ஆனால், அது உண்மையல்ல என்று சொல்கிறது இடைவேளைப் பகுதி.
‘மாயமான்’ போன்று தோற்றமளிக்கிற மேற்சொன்ன கதைக்குப் பின்னால் இருக்கும் உண்மை என்ன? ஒன்றாகப் பயணிக்கிற அந்த இருவரில் யார் உண்மையைச் சொல்கிறார்? யார் உண்மையை மறைக்கிறார்? இருவரில் யார் நல்லவர் என்று பல கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது இரண்டாம் பாதி.
இந்தக் கதையில் அல்சைமர்ஸ் எனும் மறதி நோயில் அவதிப்படுகிற வேலாயுதம் பிள்ளை எனும் நபராக நமக்கு அறிமுகமாகிறார் வடிவேலு. அவரைத் தற்செயலாகச் சந்திக்கிற ஒரு திருடனாக, தயாளன் எனும் பாத்திரத்தில் தோன்றியிருக்கிறார் பகத் பாசில்.
இப்போது, ‘மாரீசன்’ படம் குறித்த ஒரு சித்திரம் மனதுக்குள் தானாக மேலெழும். ஏதோ ஒரு விஷயம் இதில் மறைந்திருப்பதாக அல்லது சொல்லாமல் தவிர்க்கப்பட்டதாக உணர வைக்கும். அது, இரண்டாம் பாதியில் பிளாஷ்பேக் ஆகச் சொல்லப்பட்டிருக்கிறது.
முழுமையாகப் படத்தைக் கண்டபிறகு, முதல் பாதியுடன் இரண்டாம் பாதியைப் பொருத்திப் பார்க்க முடிந்தவர்களுக்கு இப்படைப்பு பிடித்துப் போகும்.
‘மாரீசன்’னின் பலமாகவும் பலவீனமாகவும் அதுவே இருக்கிறது.

’கொஞ்சம்’ வித்தியாசமான அனுபவம்!
‘மாரீசன்’ படம் குறித்துச் சிலாகித்தாலும், இகழ்ந்தாலும் அதில் இருக்கிற சில அம்சங்கள் பற்றிக் குறிப்பிட வேண்டியிருக்கும். அவற்றில் சில ‘ஸ்பாய்லர்’களாகவும் இருக்கக்கூடும்.
அது வேண்டாமே என்பவர்கள் இந்த இடத்தில் நின்றுகொள்ளலாம்.
அல்சைமர்ஸ் நோயால் அவதிப்படுகிற ஒரு பாத்திரம், அதனை ஏமாற்ற முனைகிற இன்னொரு பாத்திரம். இவற்றைக் கொண்டு நகைச்சுவையையும் செண்டிமெண்ட்டையும் வாரி இறைத்திருக்க முடியும். ஆனால், எழுத்தாக்கம் செய்திருக்கும் கிருஷ்ணமூர்த்தி இரண்டையுமே மிகக் குறைந்த அளவில் திரையில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
வெள்ளைத்தாளில் ஆங்காங்கே எழுதுகோலை நகர்த்திச் சில புள்ளிகளை இட்டு, அந்த புள்ளிகளைக் கூர்ந்து கவனித்தால் ஒரு வரைபடம் தென்படுவதாகத் திரைக்கதை அமைத்திருக்கிறார்.
அப்படியொரு உத்தியைச் செயல்படுத்தும்போது, திரைக்கதையில் அப்புள்ளிகளை அழுத்தமாகத் தெரியுமாறு பதிக்க வேண்டும். இரண்டாம் பாதியை முதல் பாதியோடு சரியாகப் பொருந்துகிற வகையில் திரைக்கதை ட்ரீட்மெண்டை அமைத்திருக்க வேண்டும். அந்த மாற்றத்தைச் செய்யத் தவறியிருக்கிறது கிருஷ்ணமூர்த்தி மற்றும் இயக்குனர் சுதீஷ் சங்கர் கூட்டணி.
அதேநேரத்தில், வழக்கமானதொரு கதை சொல்லலைத் தவிர்த்திருக்கின்றனர்.
கொஞ்சம் முயன்றிருந்தால், இதனைப் பரபரப்புமிக்க ‘காமெடி ஆக்ஷன் த்ரில்லர்’ ஆகவும் மாற்றியிருக்க முடியும். அவ்வாறு ஆக்கியிருந்தால், இப்படம் டாம்க்ரூஸ், ஜேமி பாக்ஸ் நடித்த ஆங்கிலப் படமான ‘கொலேட்டரல்’ போன்றதொரு அனுபவத்தைத் தந்திருக்கும்.
ஒளிப்பதிவாளர் கலைச்செல்வன் சிவாஜி, தயாரிப்பு வடிவமைப்பாளர் பங்கலான், படத்தொகுப்பாளர் ஸ்ரீஜித் சாரங்க் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களின் ஒருங்கிணைத்து தான் விரும்பியவாறு திரையில் கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் சுதீஷ் சங்கர்.

’ஃபா ஃபா’ மற்றும் ‘மாரீசா சும்மா கிடைக்குமா சுகுமாரி’ பாடல்கள் சட்டென்று ஈர்க்கின்றன. அதைவிடப் பல மடங்கு உழைப்பைப் பின்னணி இசையில் கொட்டியிருக்கிறார் யுவன் சங்கர் ராஜா.
இந்தப் படத்தில் பகத் பாசில் ’மிக இயல்பாக’த் தோன்றியிருக்கிறார். அதுவே வடிவேலுவின் பாத்திரம் ‘புதிரானது’ என்ற எண்ணத்தை மனதின் அடியாழத்தில் ஏற்படுத்தும். அதற்கேற்ப, அவரும் ‘மிகச்சரியாக’ நடித்திருக்கிறார்.
இவர்களது நடிப்பு ‘அபாரமாக’ இருப்பதாலேயே முதல் பாதி மெதுவாக நகர்வது நமக்கு அயர்ச்சியைத் தருவதில்லை.
இரண்டாம் பாதியில் அவர்களது நடிப்பு ‘வழக்கமான தமிழ் சினிமா நாயர்களையே’ முன்னிறுத்துகிறது. அது மட்டுமே நமக்கு ஏமாற்றம் தருகிறது.
இதர பாத்திரங்களில் நடித்திருக்கிற சித்தாரா, கோவை சரளா, பி.எல்.தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவண சுப்பையா, கிருஷ்ணா, டெலிபோன் ராஜா ஆகியோருக்குச் சரியான முக்கியத்துவம் தரப்படவில்லை. அதனைக் கொஞ்சம் உற்றுநோக்கியிருக்கலாம்.
இந்தக் கதையில் பகத் பாசிலும் வடிவேலுவும் சேர்ந்து பயணிக்காவிட்டால்தான் என்ன என்ற கேள்விக்கான பதிலாக விவேக் பிரசன்னா பாத்திரம் நுழைக்கப்பட்டிருக்கிறது. அவர் அதனைக் கவனமாகத் திரையில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
கிருஷ்ணமூர்த்தி – சுதீஷ் சங்கர் கூட்டணியானது ‘மாரீசன்’னில் பகத் பாசிலையும் வடிவேலுவையும் ஒரே பிரேமில் காட்டி, அவர்களது செம்மையான நடிப்புத் திறமையைக் காட்ட முனைந்திருக்கிறது. அதில் வெற்றி கண்டிருக்கிறது.
அதேநேரத்தில், தமிழ் திரை வரலாற்றில் இடம்பெறுகிற ஒரு ‘காம்போ’வாக, அதற்கேற்ற நேர்த்தியான கதை சொல்லல் கொண்டதாக ஆக்கியிருந்தால் ‘மாரீசன்’ படத்தின் உயரம் பல மடங்கு மேலேறியிருக்கும்.
அதனைச் செய்யாமல் விட்டதனால், ‘கொஞ்சம் வித்தியாசமான திரையனுபவம்’ என்ற எல்லையோடு நின்றிருக்கிறது ‘மாரீசன்’. வடிவேலு, பகத் பாசில் ரசிகர்களுக்கு இது ஏமாற்றம் அளிக்கத்தான் செய்யும்..!
