சிறப்புக் கட்டுரை: வேளாண் கொள்கை ஒரு பார்வை!

Published On:

| By Balaji

இந்தியாவின் வேளாண் துறையில் அரசின் தலையீடுகளால் ஏற்பட்டுள்ள நன்மை மற்றும் தீமைகள் குறித்தும், விவசாயிகளின் வருவாயை மேம்படுத்துவதற்கான காரணிகள் குறித்தும், வேளாண் துறை எதிர்நோக்கியுள்ள எதிர்கால சவால்கள் குறித்தும் வேளாண் துறையில் நீண்டகாலமாக நடைமுறையில் உள்ள கொள்கைகள் குறித்தும், அதற்கான சீர்திருத்தங்கள் குறித்தும் இக்கட்டுரையில் காணலாம்.

1990களின் மத்தியிலிருந்தே இந்தியா தனது தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவை ஆண்டுக்கு 5 சதவிகிதம் என்ற அளவில் உயர்த்தி வந்துள்ளது. வறுமையையும் பாதியாகக் குறைத்துள்ள இந்தியா, ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான பிரச்சினைகளைக் குறைத்து வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்யும் முக்கியச் சந்தையாக உருவெடுத்துள்ளது. 2014ஆம் ஆண்டிலிருந்தே பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளால் ஜி-20 நாடுகளில் மிக வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது.

விவசாயத் துறையில் உரம், விதை போன்ற மூலப்பொருட்கள் விவசாயிகளுக்கு எளிதாகக் கிடைப்பதாலும், நீர்ப்பாசனம், காப்பீடு உள்ளிட்ட வசதிகளாலும் இந்தியாவின் வேளாண் உற்பத்தி 2011ஆம் ஆண்டு முதலே ஆண்டுக்கு 3.6 சதவிகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மக்களிடையே மாறுபடும் தேவைகள், நகரமயமாதல் போன்ற காரணங்களால் இந்தியா தானியம், பருப்பு வகைகள், காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விரிவடைந்துள்ளது. 1990-92ஆம் ஆண்டுகளில் 24 சதவிகித ஊட்டச்சத்துப் பற்றாக்குறையைக் கொண்டிருந்த இந்தியா இப்போது மக்கள்தொகையில் பெரும்பங்கை ஊட்டச்சத்து குறைபாடற்றதாக மாற்றியுள்ளது. வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்யும் உலகின் மிக முக்கியச் சந்தையாக உருவெடுத்துள்ள இந்தியா, அரிசி ஏற்றுமதியில் முதலிடமும், பருத்தி ஏற்றுமதியில் இரண்டாமிடமும் வகிக்கிறது. இந்த ஆதிக்கத்தை எதிர்காலத்திலும் இந்தியா தொடரவேண்டுமானால் இப்போது நடைமுறையில் இருக்கும் கொள்கைகளைச் சிறப்பாகச் செயல்படுத்துவதிலும், புதிய துணிச்சலான சீர்திருத்தங்களை மேற்கொள்வதிலும் இந்தியா சிறப்பாகச் செயல்பட்டாக வேண்டும்.

பொருளாதார ஒத்துழைப்பு & மேம்பாட்டு அமைப்பு (OECD) மற்றும் சர்வதேசப் பொருளாதார உறவுகள் ஆராய்ச்சிக்கான இந்திய கவுன்சில் (ICRIER) இணைந்து வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை ஒன்றில், இந்தியாவில் உள்ள வேளாண் கொள்கைகளால் விவசாயிகளின் வருமானம் அதிகரித்து, சமூகத்தில் மிகவும் பின்தங்கியுள்ள மக்களுக்கு ஊட்டச்சத்துகள் கிடைக்கப்பெற்று, இந்தியாவின் வேளாண் மற்றும் உணவுத் துறை வளர்ச்சியடையும் எனவும், அதனால் சர்வதேச உணவுச் சந்தையில் இந்தியாவின் போட்டித்தன்மை வலுப்பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் இந்திய வேளாண் துறையின் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சி மற்றும் இத்துறைக்கு எதிர்காலத்தில் காத்திருக்கும் சவால்கள் குறித்தும் இந்த அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது. உணவுப் பாதுகாப்பில் சிக்கல், ஊட்டச்சத்து குறைபாடுகள், போதிய வசதிகளில்லா பண்ணைகள், தண்ணீர் வளக் குறைபாடு, குறைவான உற்பத்தி வளர்ச்சி மற்றும் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்டவை எதிர்காலத்தில் வேளாண் துறை சந்திக்கும் சவால்களில் அங்கங்களாக உள்ளன. விவசாயிகளின் உற்பத்தியை மேம்படுத்தி ஊட்டச்சத்து குறைபாடுகளைக் களையும் வகையில் புதிய கொள்கைகளை உருவாக்க வேண்டிய தேவை கொள்கை வடிவமைப்பாளர்களுக்கு இருப்பதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இந்தியாவில் வேளாண் கொள்கைகள் நிறுவனங்களின் சிக்கலான அமைப்புகளால் உருவாக்கப்பட்டு அமல்படுத்தப்படுகின்றன. மாநில அரசுகளுக்குச் சட்டரீதியாகக் கொள்கை உருவாக்கத்தில் பொறுப்புகள் இருந்தாலும், தேசிய அளவில் கொள்கைகளைச் சிறப்பாக உருவாக்குவதற்கும், அக்கொள்கைகளை மாநிலங்களில் சிறப்பான வகையில் அமல்படுத்துவதற்கான நிதியுதவியை வழங்குவதிலும் மத்திய அரசு முக்கியமான பொறுப்பைக் கொண்டுள்ளது. ஆனாலும், கொள்கை உருவாக்கத்திலும், பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணுவதிலும், செயல்பாடுகளைக் கண்காணிக்கவும் மத்திய அரசையும் மாநில அரசுகளையும் சேர்ந்த கொள்கை வடிவமைப்பாளர்கள் இணைந்து செயல்படுவதற்கான போதுமான அல்லது வலுவான அமைப்பு எதுவும் இல்லை.

கடந்த பல நூற்றாண்டுகளாகவே இந்தியாவில் வேளாண் கொள்கைகள், விவசாயிகளுக்கு போதிய விலை கிடைப்பதையும், உள்நாட்டு உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதையும், பொருட்களை வாங்கும் நுகர்வோருக்குப் பெரும் சுமை ஏற்படாமல் இருப்பதையும் உறுதி செய்யும் வகையிலேயே உருவாக்கப்பட்டும் அமல்படுத்தப்பட்டும் உள்ளன.

உள்நாட்டில் உள்ள கடினமான சந்தை விதிமுறைகளாலும், இறக்குமதி – ஏற்றுமதி வர்த்தகக் கட்டுப்பாடுகளாலும் இந்திய விவசாயிகள் அதிகமாகப் பாதிக்கப்படுவதாகவும், இதுபோன்ற காரணங்களால் இதர நாடுகளின் சந்தை விலையை விட இந்திய வேளாண் பொருட்களின் விலை குறைவாக இருப்பதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது. விவசாயிகளுக்கு உதவும் வகையில் உரம், மின்சாரம், நீர்ப்பாசனம் உள்ளிட்டவற்றுக்கு மானிய உதவிகள் வழங்கப்பட்டாலும், உண்மையில் வேளாண் கொள்கைகளால் 2014-16ஆம் ஆண்டுகளில் விவசாய வருவாய் ஆண்டுக்கு 6 சதவிகிதம் சரிவைச் சந்தித்துள்ளது.

உற்பத்தியாளர்களுக்கான அரசின் இந்த ஆதரவானது மொத்த வேளாண் வருவாயில் நுகர்வோர் மற்றும் வரி செலுத்துவோரின் பங்கை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது. இது மொத்த வேளாண் வருவாயில் (-)13.1 சதவிகித எதிர்மறை சந்தை விலை ஆதரவு மற்றும் மொத்த வேளாண் உற்பத்தியில் 6.9 சதவிகித அளவு நிதிநிலைச் செலவுகளை அடிப்படையாகக் கொண்டதாகும். இவை இணைந்து மொத்தத்தில் ஒரு எதிர்மறை உற்பத்தி ஆதரவு மதிப்பீட்டை உருவாக்குகின்றன. 2000 முதல் 2016 வரையில் மேற்கொள்ளப்பட்ட மொத்த ஆய்வுகளில் இந்தியாவின் உற்பத்தி ஆதரவு மதிப்பீடு சராசரியாக (-)14 சதவிகிதமாக இருந்தது.

எதிர்மறை சந்தை விலை ஆதரவு மற்றும் அதன் அளவைப் பொறுத்தவரையில் இந்தியா இதர உலக நாடுகளுக்கு முரணாக இருப்பதாகப் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு கூறுகிறது. 2000 முதல் 2016 வரையிலான காலத்தில் இந்த ஆய்வுக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட உற்பத்தி விலைகள் பல ஆண்டுகளுக்குத் தொடர்ந்தன.

இந்தியாவில் வேளாண் பொருட்களைச் சந்தைப்படுத்துவதில் ‘வேளாண் உற்பத்தி சந்தைக் குழுச் சட்டம்’ மற்றும் ‘அத்தியாவசியப் பொருட்கள் சட்டம்’ ஆகிய இரு சட்டங்கள்தான் மிகுந்த பயன்பாட்டைக் கொண்டிருந்தன. இச்சட்டங்களால் உற்பத்திப் பொருட்களின் விலையானது கொள்முதல், விலையைப் பாதிக்கும் கட்டுப்பாடுகள், இருப்பு வைத்தல், பொருட்களின் வர்த்தகம் போன்ற காரணிகளால் பாதிக்கப்பட்டது. இச்சட்டங்களால் சந்தைப்படுத்துதல் உள்கட்டுமானப் பிரிவில் குவியும் தனியார் துறை முதலீடுகளிலும் பாதிப்பு ஏற்பட்டது. வெவ்வேறு மாநிலங்களில் இச்சட்டங்களைச் செயல்படுத்துவதில் விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டதோடு, பரிவர்த்தனைச் செலவுகளும் அதிகரித்தன. மொத்தத்தில் சந்தைக் கட்டுப்பாடுகளும், உள்கட்டுமானக் குறைபாடுகளும் இணைந்து விளைபொருட்களின் விலைகளில் அழுத்தத்தை ஏற்படுத்தின.

2000 முதல் 2016 வரையிலான ஆண்டுகளில் பல்வேறு ஏற்றுமதி விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் பல்வேறு விளைபொருட்களின் ஏற்றுமதியைக் குறைத்ததோடு, அப்பொருட்களின் விலைச் சரிவுக்கும் காரணமாயின. கோதுமை, பாஸ்மதி அல்லாத அரிசிகள், சர்க்கரை, பால், கொண்டைக்கடலை உள்ளிட்ட பொருட்கள் சில உதாரணங்களாகும்.

வேளாண் உற்பத்தியாளர்களுக்கான வரவு செலவுத் திட்டங்கள் யாவும் உரம், மின்சாரம், நீர்ப் பாசனம் உள்ளிட்டவற்றுக்கான உள்ளீட்டுச் செலவுக்கான மானியங்களாகவே உள்ளன. ஆனால், வேளாண் துறைக்கான நிதியுதவி கடந்த பத்து ஆண்டுகளில் குறைந்து வந்துள்ளது. இதில் பெரும்பாலான தொகையானது உள்கட்டுமானம் மற்றும் மேலாண்மை ஆகியவற்றுக்காகவே பெருமளவில் செலவிடப்பட்டுள்ளது. வேளாண் அறிவு மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கும் சேமிப்பு வசதிகளுக்கும் அதிகளவில் செலவிடப்பட்டுள்ளது.

வேளாண் கொள்கைகளின் தலையீடு காரணமாக, நுகர்வோர்கள் பொருட்களுக்கான விலையில் 25 சதவிகிதம் குறைவான அளவிலேயே கொடுப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது. பொருட்களின் விலையைக் குறைவாகவே வைத்திருக்க அரசு முயற்சிகள் மேற்கொண்டு வந்தாலும், உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பிரச்சினைகளும் எழுகின்றன. பொது விநியோகத் திட்டம் சிறப்பாகச் செயல்படாததும் அதிகப் பொருட்கள் வீணாவதுமே அதற்குக் காரணமாகும்.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) வேளாண் மற்றும் உணவு சார்ந்த செலவுகள் சுமார் 1.9 சதவிகிதத்தைக் கொண்டுள்ளது. இது இந்தியப் பொருளாதாரத்தில் பெரும் செலவைக் கொண்டிருந்தாலும், வேளாண் துறைக்கான உற்பத்தி மற்றும் வளர்ச்சியானது அதற்கு ஈடாக இல்லை என்பதை வைத்துப் பார்க்கும்போது இன்னும் சிறப்பான நடவடிக்கைகள் தேவை என்பது தெரிகிறது.

தற்போது வேளாண் துறைக்கான கொள்கைகள் பல உருவாக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் அக்கொள்கைகள் வேளாண் துறையின் நிலையான உற்பத்தி, சிறப்பான சந்தைச் செயல்பாடு, விவசாயிகளுக்கு உரிய விலை கிடைத்தல் போன்றவற்றை ஈடுசெய்வதாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட கொள்கைகள்தான் நாட்டின் வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்பை வழங்குவதற்கும் உதவும்.

**கொள்கைக்கான முக்கியப் பரிந்துரைகள்**

நிலப் பிரச்சினைகள் சார்ந்த சுற்றுச் சூழல் விதிமுறைகளை வலுப்படுத்துவது, மாநிலங்களின் சந்தைச் செயல்பாடுகள் மற்றும் சந்தை விதிமுறைகளைப் பலப்படுத்துவது, ஆன்லைன் மின்னணு சந்தை போன்ற திட்டங்களை வளர்த்தெடுத்தல், போட்டி மிக்க சந்தைகளில் விவசாயிகளை ஒருங்கிணைப்பது மற்றும் இப்பிரிவில் தனியார் துறையின் பங்களிப்பை அனுமதிப்பது, உரம் உள்ளிட்ட வேளாண் உள்ளீட்டுப் பொருட்களைச் சரியாகப் பயன்படுத்துவதற்கு விவசாயிகளை ஊக்குவிப்பது, தண்ணீர் மேலாண்மைத் திட்டங்களை முறையாகச் செயல்படுத்துவது, விவசாயிகளுக்கான நீண்டகாலக் கடன் உதவியை எளிதாகக் கிடைக்கச் செய்வது, கிராமப் புறங்களில் கல்வி, உள்கட்டுமானம் போன்ற பிரிவுகளில் மேற்கொள்ளும் முதலீடுகளில் மீண்டும் கவனம் செலுத்துதல், கிராமப் புறங்களில் டிஜிட்டல் மயமாக்கத்தில் முதலீடு செய்தல் மற்றும் சுற்றுச் சூழல் சார்ந்த சவால்களைச் சமாளிக்க வழிவகை செய்தல் போன்ற அம்சங்கள் கொள்கை உருவாக்கத்தில் இடம்பெற வேண்டும்.

இந்திய மக்கள் தொகையில் நடுத்தர மக்களின் பங்கும் வருவாயும் அதிகரித்து வருவதால் அதற்கேற்ப பொது விநியோகத் திட்டத்தை மதிப்பீடு செய்தல், நேரடிப் பயன் பரிமாற்றுத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் இலக்கை நோக்கிய செயல்பாடுகள், சேமிப்பு வசதிகளில் தனியாரின் பங்களிப்பை அனுமதிப்பு போன்ற அம்சங்களால் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்.

முக்கியமான கொள்கைத் திட்டங்களை ஒரே குடைக்குள் கொண்டு வந்து தேசிய அளவில் பொறுப்புகள் மற்றும் பங்குகளைத் தெளிவுபடுத்துதல், மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையேயான மற்றும் மத்திய அமைச்சரவை, ஏஜென்சிகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பைப் பலப்படுத்துவது, வேளாண் பொருட்களுக்கு ஒற்றைச் சந்தையை மேம்படுத்துவதற்கான நிறுவனச் சீர்திருத்தங்களை அனுமதிப்பது போன்ற அம்சங்களால் வேளாண் நிறுவனங்கள் மற்றும் மேலாண்மை அமைப்புகளைப் பலப்படுத்தலாம்.

பல்வேறு அமைச்சரவை மற்றும் நிறுவனங்களின் வர்த்தகக் கொள்கைகளின் குறைகளைக் களையவும், செயல்பாடுகளை எளிதாக்கவும் உள்ள பங்கு மற்றும் பொறுப்புகளைத் தெளிவுபடுத்துவது, நிலையான சந்தைச் சூழலை உருவாக்கும் வகையில் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தாமல் இருப்பது, இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது மற்றும் விநியோகத் தரப்பில் உள்ள குறைபாடுகளைக் களைவது போன்ற நடவடிக்கைகளால் வர்த்தகத்தை இந்திய வேளாண் துறைக்கு உகந்ததாக உருவாக்க முடியும்.

இந்தியாவின் வேளாண் மற்றும் உணவுத் துறையானது இக்கட்டான சூழலில் இருக்கும் நிலையில், பல்வேறு சவால்களும் வாய்ப்புகளும் காத்திருக்கின்றன. எனவே இந்த ஆய்வில் வழங்கப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டால் இந்தியா தனது மக்கள் தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப உணவுப் பாதுகாப்பை வழங்க முடியும். சுற்றுச் சூழல் சார்ந்த சவால்களைக் கடந்து இந்தியா தனது மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்த முடியும்.

**நன்றி:** [OECD](https://www.oecd-ilibrary.org/agriculture-and-food/agricultural-policies-in-india_9789264302334-en)

**தமிழில்: செந்தில் குமரன்**

**நேற்றைய கட்டுரை: ** [நாட்டு மாடுகளுக்கும் காலநிலை மாற்றத்துக்கும் என்ன தொடர்பு?](https://minnambalam.com/k/2018/08/03/26),”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share