நடிகர் விஜயை பொதுமன்றம் கண்டிக்கத் தவறுவது ஆபத்தான போக்கு!

Published On:

| By Minnambalam Desk

actor Vijay

ராஜன் குறை

கடந்த மூன்றாண்டுகளாகவே ஒரு முக்கியமான பிரச்சினையை பொதுமன்றத்தில் காண முடிகிறது. அது என்னவென்றால் கட்சி துவங்கிய நடிகர் விஜய் குறித்து எந்த விவாதமும் நடப்பதில்லை. அவருக்கு ஆதரவு இருக்கிறதா இல்லையா, அவருக்கு ஏன் கூட்டம் கூடுகிறது, அவருக்குக் கூடும் கூட்டம் அவரது நாயக பிம்பத்தின் ரசிகர்களா, அல்லது அரசியல் மாற்றத்திற்கு ஏங்குபவர்களா என்றெல்லாம் ஏராளமான விவாதங்கள். அதாவது விஜய்க்காகவே கூட்டம் கூடினாலும், விவாதம் கூட்டத்தைப் பற்றியதாகத்தான் இருக்கிறதே தவிர, விஜய் குறித்ததாக இருப்பதில்லை.

அவரை பார்க்கக் கூடும் கூட்டம் கட்டுப்பாடில்லாமல் நடந்து கொள்வது, மரங்கள் மீதும், டிரான்ஸ்ஃபார்மர் மீதும் ஏறுவது, அவரது வாகனத்தைப் பைக்கில் பின் தொடர்ந்து சென்று விபத்தைச் சந்திப்பது என்பது போன்ற அம்சங்களால் பலராலும் “தற்குறிகள்” என்று அழைக்கப்பட அது பரவலான பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. இப்போது அப்படி அவர்களை தற்குறி என்று அழைக்கலாமா என்று ஒரு புதிய விவாதம் தொடங்கியுள்ளது. அவர்கள் உளவியல் என்ன, சமூகவியல் என்ன, எதனால் விஜயைப் பார்க்க அப்படி கூடுகிறார்கள் என்றெல்லாம் பல கேள்விகள், தர்க்கங்கள்.

ADVERTISEMENT

ஆக மொத்தம் விவாதம் எப்போதுமே விஜய்க்கான ஆதரவு தளம், அவருக்குக் கூடும் கூட்டம் என்பதாக இருக்கிறதே தவிர விஜய் என்ன செய்கிறார். அவர் என்ன பேசுகிறார், ஒரு அரசியல் தலைவருக்கு இருக்க வேண்டிய பண்பு நலன்கள் அவரிடம் இருக்கிறதா, ஒரு முதல்வராக நாட்டை நிர்வகிக்கும் ஆற்றல் அவரிடம் தென்படுகிறதா என்பதெல்லாம் விவாதிக்கப்படுவது இல்லை.

actor Vijay

அவ்வப்போது சிலர் அவருடைய போதாமைகளைப் பேசுகிறார்கள். இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், நடிகர் பிரகாஷ் ராஜ், நடிகர் சத்யராஜ் என ஒரு சிலர் விஜயின் அரசியல் பயிற்சியின்மையை விமர்சித்து பேசியுள்ளார்கள். ஆனால் பிரதான அரசியல் கட்சிகள் விஜயின் பேச்சையோ, அவர் கூறும் கருத்துக்களையோ பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஊடகங்களோ அவரது காட்சி அரசியலில் பங்கேற்று பலன்பெறவே விரும்புகின்றன. கூட்டக்காட்சியை அரசியலாக மாற்றுகின்றன. மக்களாட்சிக்கு துரோகம் செய்கின்றன.

ADVERTISEMENT

இதன் விளைவாக விஜய் என்ன வேண்டுமானாலும் பேசலாம், பேசாமல் இருக்கலாம்; பிரசாரத்திற்கு போகலாம், போகாமல் இருக்கலாம்; அவருக்கும் தோன்றும் வாக்குறுதிகளைக் கொடுக்கலாம், யாரை வேண்டுமானால் ஏசலாம் என்று ஒரு அலாதி சுதந்திரம் அவருக்குக் கிடைத்துவிட்டது. அவர் என்ன செய்தாலும் அவருக்குக் கூட்டம் கூடுகிறதே! அப்படியானால் அவர் என்ன வேண்டுமானால் செய்யலாம், பேசலாம் என்று பொதுமன்றம் கருதுகிறது. அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தால்தானே அவர்கள் கேள்வி கேட்பார்கள். அவர் சந்திக்கவே மாட்டார். அவர் வீட்டிற்கே ஆங்கில சேனல்கள் சென்றாலும் நேர்காணலை பதிவு செய்ய அனுமதிக்க மாட்டார்.

மொத்தத்தில் விஜய் பொதுமன்றத்தின் ஆய்வுக்கு அப்பாற்பட்டவர். ஆங்கிலத்தில் அக்கவுண்டபிலிடி என்பார்கள். ஒருவர் என்ன பேசுகிறார், செய்கிறார் என்பதற்கு பொறுப்பேற்பது. இதிலிருந்து விஜய்க்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் பொதுமன்றத்தின் கவலையெல்லாம் அவருக்குக் கூடும் கூட்டம் பற்றித்தான் அவரைப்பற்றியதல்ல. கூட்டத்தைக் கூட்டிக் காட்டிவிட்டால் அவருக்கு இம்யூனிட்டி என்று சொல்லப்படும் மக்களாட்சி பாதுகாப்பு கிடைத்துவிடுகிறது போலத் தோன்றுகிறது. ஆனால் வேறு பல கட்சித் தலைவர்களுக்கு இது கிடைக்காது. அவர்கள் ஒவ்வொரு பேச்சும் விசாரணக்குள்ளாகும்.

ADVERTISEMENT

கூட்டம் கூடுவது மக்களாட்சியின் பலவீனம். கூட்டம் காந்திக்கும் கூடியது; ஹிட்லருக்கும், முசோலினிக்கும் கூடியது. டொனால்ட் டிரம்பிற்கும் கூடுகிறது. மக்கள் ஆதரவு என்பது மட்டும் யாரையும் புனிதப்படுத்திவிட முடியாது. பொதுமன்றத்தின் கவனம் யாருக்காக கூட்டம் கூடுகிறது என்பதில்தான் இருக்க வேண்டும். அவருக்கு அரசியலுக்குத் தேவையான தலைமைப்பண்பு இருக்கிறதா. ஆட்சி செய்யும் ஆற்றல் கொண்டவரா, அவருக்கு சிந்தனைத் தெளிவு இருக்கிறதா என்பதையெல்லாம் பொதுமன்றம் விசாரிக்க வேண்டும். அவர் கேள்விகளுக்கு முகம் கொடுக்கவில்லையென்றால் கண்டிக்க வேண்டும். அவரது பொதுவாழ்வு செயல்பாடுகளை ஆராய வேண்டும்.

ஆனால் விஜய்க்கு எத்தனை வாக்குகள் கிடைக்கும், எந்த கட்சியின் வாக்குகளைப் பிரிப்பார், எத்தனை இடங்கள் கிடைக்கும் என்ற விவாதத்தின் முன் அவருடைய போலித்தனங்களை, பொய்மைகளை யாரும் பொருட்படுத்தவதில்லை. எல்லாவற்றையும் “அரசியலில் இது சாதாரணம்” என்ற விதியின்படி உதாசீனம் செய்கிறது பொதுமன்றம். விஜய் தான்தோன்றித்தனமாக எதையும் பேசுகிறார்.

விஜயின் இறுதிநாள் பிரசாரத்தின் உச்சகட்ட பொய்மை

தேர்தல் பிரசாரத்தின் கடைசி தினத்தில் நடிகர் விஜய் சற்றே விரிவாக முப்பது நிமிடங்கள் வரை பேசினார். வழக்கம்போல துண்டு துண்டாகவும், வழமையான வசனங்களால் நிரம்பியிருந்தாலும் அவர் கூறியவற்றின் பொய்மைகளை கவனிக்க வேண்டியது அவசியம்.

சிறுபான்மையினர் நலன்

முதலில் அவர் மத நல்லிணக்கத்தின் முகம் என்றார். சிறுபான்மையினர் நலன்களுக்காக நிற்பேன் என்றார். இது உண்மையா? இந்த தேர்தலை நோக்கி நகர்ந்த நாட்களில் இரண்டு முக்கிய பிரச்சினைகள் கவனம் பெற்றன. ஒன்று திருப்பரங்குன்றத்தில் மலை மேல் உள்ள தர்காவைக் குறிவைத்து அது என்ன சிக்கந்தர் மலையா என்று விஷமப் பிரசாரம் செய்தது பாஜக. தர்கா அருகில் இருக்கும் நில அளவைத் தூண்தான் தீபத்தூண் என்று இட்டுக்கட்டினார்கள். அங்கேதான் கார்த்திகை தீபம் ஏற்றவேண்டும் என்று பிரச்சினை செய்தார்கள். திருப்பரங்குன்றத்தை தமிழ்நாட்டின் அயோத்தியாக மாற்றுவோம் என பாஜக தலைவர்கள் கூறினார்கள். தர்கா அருகில் தீபம் ஏற்றவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் ஆதரவு நீதிபதியின் துணையுடன் முயற்சித்தார்கள்.

தி.மு.க அரசு உறுதியாக நின்று அவர்களை அனுமதிக்க மறுத்தது. உள்ளூர் மக்கள் அவர்கள் கலவர நோக்கத்திற்கு ஒத்துழைக்க மறுத்தார்கள். பல்வேறு பொதுநல ஆர்வலர்கள் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்தார்கள். மத நல்லிணக்க பேரணிகளை நடத்தினார்கள். விஜய் இந்த பிரச்சினையில் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. கோயில் நிர்வாகம் வழமையாகச் செய்வதை மாற்றவேண்டியதில்லை என்றாவது ஒரு அறிக்கை கொடுத்திருக்கலாம். ஆனால் மெளனம் சாதித்தார்.

கிறிஸ்துவர்களுக்கு ஒரு தீவிரமான பிரச்சினை எழுந்துள்ளது. அது வெளிநாட்டிலிருந்து கிறிஸ்துவ சேவை அமைப்புகள் நிதியுதவி பெறுவது. அதற்கான FCRA என்ற வெளிநாட்டு நிதி விதிமுறைகளில் பல்வேறு மாற்றங்களைச் செய்ய பாஜக அரசு முனைந்துள்ளது. அது பெருமளவு நிதி வருவதைக் குறைத்துவிடும். அவர்கள் செய்யும் நலப்பணிகளால் பல விளிம்பு நிலை சமூகங்கள் பயன்பெறுகின்றன. அவையனைத்தும் நின்று போய் விடும் என்பதால் கிறிஸ்துவ மத நிறுவன ங்கள் அந்த சட்ட திருத்தத்தைக் கைவிடச் சொல்கின்றன. தி.மு.க அவர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளது. ஆனால் சிறுபான்மை நலன்களை காப்பேன் என்று சொல்லும் விஜய் அது குறித்து எங்கும் பேசவில்லை.

அவர் பத்திரிகையாளர்களை சந்திப்பவராக இருந்தால் நிச்சயம் அவர்கள் இந்த பிரச்சினைகள் குறித்து கருத்துக் கேட்டிருப்பார்கள். அவர்தான் அவர்களை மதிப்பதே இல்லையே. அதனால் அவர் பேசினால்தான் உண்டு. இல்லாவிட்டால் யாரும் அதனை பொருட்படுத்துவதில்லை. அவருக்குக் கூடும் கூட்டம் இதனால் எல்லாம் கவலைப்படப் போவதில்லை. அது “விஜய், விஜய்” என்று கத்திக்கொண்டேயிருக்கும்.

கரூர் கூட்ட நெரிசல் மரணங்கள்

திடீரென்று கரூர் கூட்ட நெரிசல் மரணங்கள் குறித்துப் பேசினார். அவர் பேசிய விதம் முற்றிலும் முதிர்ச்சியற்றிருந்தது. அந்த நிகழ்வு நடந்த தருணத்தில் இருந்தே விஜய் எதையுமே முதிர்ச்சியுடன் அணுகவில்லை. அவர் கட்சிக்காரர்களும் முதிர்ச்சியுடன் அணுகவில்லை. தங்களால் விளைந்த விபரீதத்திலிருந்து எப்படியாவது தங்களை விலக்கிக் கொள்ள வேண்டும் என்றுதான் நினைத்தார்கள். அது ஒரு அரசியல் கட்சியே கிடையாது என்பதை கரூர் சம்பவத்தை வைத்துப் பார்த்தாலே புரிந்துகொள்ளலாம். உள்ளூர் அமைப்பாளர்கள் சிறையில் இருக்க, மொத்த கட்சியுமே சில வாரங்கள் காணாமல் போய்விட்டது.

நடிகர் விஜய் எதற்கும் பொறுப்பேற்பதில்லை. எல்லாவற்றிற்கும் பிறர்தான் காரணம்; தான் எந்த பிழையும் செய்வதில்லை என்று கூறுகிறார். இது மிக மோசமான சமூக முன்னுதாரணம். ஒருவர் நிபந்தனைக்குட்பட்டாவது பொறுப்பேற்க வேண்டும். நாற்பத்தோரு உயிர்கள் பறிபோக நானும் ஒரு வகையில் காரணம். என்னைப்பார்க்கத்தான் அவர்கள் வந்தார்கள் என்பதற்கு வருந்துகிறேன் என்றாவது ஒரு மனிதர் சொல்லவேண்டாமா? ஆனால் ‘என் மீது பழிபோடுகிறார்கள்’ என்று சிறுபிள்ளைத்தனமாக பேசுகிறார். 

விஜய் கட்சியினர் அனுமதி வாங்கிய நேரம் வேறு; மக்களுக்கு அறிவித்த நேரம் வேறு. மக்களை காலையிலேயே சம்பவம் நடந்த இடத்தில் கூடச்செய்து விட்டார்கள். அவர்களுக்கு குடிக்கத் தண்ணீரோ, உணவோ ஏற்பாடு செய்யப்படவில்லை. மாலை ஆக, ஆக கூட்டம் அதிகரித்துள்ளது. கூட்டம் சேர்ந்தால்தான் காட்சி நன்றாக இருக்கும் என்பதைத் தவிர வேறு எந்த அக்கறையும் அந்தக் கட்சியினருக்கு இருந்ததாகத் தெரியவில்லை. எல்லாவற்றிற்கும் காவல்துறை மீது பழிபோட நினைக்கிறார்கள். அவர்கள் பொறுப்பை சுட்டிக்காட்டினால் எங்கள் மீது பழி போடுகிறார்கள் என்று புலம்புகிறார்கள்.

இதைவிட பெரிய அநீதி விஜய் செந்தில் பாலாஜி கோவையில் போட்டியிடுவதைக் குறித்து பேசியதுதான். அதாவது கரூர் சம்பவத்தின் காரணமாகத்தான் செந்தில் பாலாஜி கரூரில் போட்டியிடாமல் கோவையில் போட்டியிடுகிறாராம். இது முற்றிலும் தரங்கெட்ட அரசியல் என்றுதான் கூற வேண்டும். கரூர் கூட்ட நெரிசல் மரணங்கள் நிகழ்ந்த பிறகு விஜய், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா என யாருமே அங்கே நிற்கவில்லை. ஆதவ் அர்ஜுனா நாம் இங்கிருந்து கிளம்ப வேண்டும் (We have to evacuate this place) என்று சொன்னது பதிவாகியுள்ளதாம். அதன் பிறகு செந்தில் பாலாஜிதான் களத்திற்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்துள்ளார். அன்பில் மகேஷ் உள்ளிட்ட பிற அமைச்சர்கள், தி.மு.க-வினரும் சென்று உதவினார்கள். அ.இ.அ.தி.மு.க-வினரும் உதவினார்கள். செந்தில் பாலாஜி எங்கேயும் ஓடி ஒளியவில்லை. பின்னர் பத்திரிகையாளர் சந்திப்பும் நிகழ்த்தி நடந்தவற்றை விளக்கினார். கேள்விகளுக்கு பொறுமையாக பதில் சொன்னார்.

அவர் எதற்காக அந்த சம்பவத்தை முன்னிட்டு கரூரில் போட்டியிடாமல் கோவைக்குச் செல்ல வேண்டும்? அவர் கோவையில் போட்டியிடும் காரணம் வெளிப்படையானது. அ.இ.அ.தி.மு.க சென்ற முறை கோவை மாவட்ட தொகுதிகளில் வென்றதால் இந்த முறை அந்த தொகுதிகளை தி.மு.க வசமாக்க மண்டலப் பொறுப்பாளரான அவர் கோவையில் போட்டியிடுகிறார் என்பது எத்தனையோ பத்திரிகைகளில், தொலைகாட்சி ஊடகங்களில் பேசப்பட்ட செய்திதான்.

தன்னுடைய காட்சி அரசியல் தேவைகளுக்காக கூட்ட நெரிசலை உருவாக்கிய விஜய் தான் அதற்குப் பொறுப்பல்ல, தன் மீது பழி போடுகிறார்கள் என்று கூறி தப்பிக்க முயல்வதுடன், செந்தில் பாலாஜி மீது பழி போடவும் முயற்சிப்பது அரசியல் தரத்தை வெகுவாக சீரழிக்கும் முயற்சி என்பதில் ஐயமில்லை. ஆனால் பொதுமன்றத்தில் இதனை யாரும் கண்டிப்பதில்லை.

எல்லோரும் என்னை எதிர்க்கிறார்கள் என்ற சுயமோகப் பிதற்றல்

விஜய் இறுதிப் பரப்புரை பேச்சில் கூறிய மற்றொரு முக்கியமான விஷயம். அவர் பாஜக-வை எதிர்ப்பதில் அவர் கட்சி துவங்கியதிலிருந்தே உறுதியாக இருக்கிறாராம். பாஜக-வை எதிர்த்து என்ன போராடினார், எந்த வகையான ஆர்பாட்டங்களை முன்னெடுத்தார் என்றால் அது எதுவும் கிடையாது. பாஜக-வை எதிர்க்கிறேன் என்று சொல்வதுடன் எதிர்ப்பு நிறைவு பெற்றுவிடுகிறது. தொகுதி மறுவரையறையை எதிர்த்து தி.மு.க பல போராட்ட வடிவங்களை முன்னெடுத்தது. முதல்வர் இல்லங்களில் கருப்புக் கொடி ஏற்றச் சொன்னார். கோலம் போடச்சொன்னார். அவரே சட்ட முன்வரைவின் நகலை எரித்தார். கருப்புச் சட்டை அணிந்தார். விஜய் ஒரு அறிக்கை மட்டும் வெளியிட்டார்.  இவ்வளவு முக்கியமான பிரச்சினையில் ஒரு பொதுக்கூட்டம் கூட நடத்தவில்லை.

இப்போது என்ன சொல்கிறார், தி.மு.க-விற்கும், பாஜக-விற்கும் ரகசிய ஒப்பந்தம் இருக்கிறதாம். விஜய் ஏற்கனவே கூறியதை மமதா பானர்ஜி கண்டுபிடித்து சொல்லிவிட்டாராம். மம தா கூறியதை அவர் கட்சியே தவறாகப் பதிவானதாக விளக்கிவிட்டது. ஆனால் விஜய் என்ன சொல்கிறார் பாஜக அ.இ.அ.தி.மு.க-வுடன் நேரடியாகக் கூட்டணி வைத்துள்ளதாம். தி.மு.க-வுடன் மறைமுகமாகக் கூட்டணி வைத்துள்ளதாம்.  அதனால் பாஜக, தி.மு.க, அ.இ.அ.தி.மு.க ஆகிய மூன்று கட்சிகளும் சேர்ந்து அவரை எதிர்க்கின்றனவாம். எதனால் அவரை அப்படி அனைவரும் ஒன்று திரண்டு எதிர்க்க வேண்டும்? ஏனென்றால் அவர் ஊழலற்ற ஆட்சி தரப்போகிறாராம்.

தேர்தல் களத்தின் முரண்பாடுகளை இவ்வளவு மோசமாகத் திரித்து சுயமயக்கப் பிதற்றலை வெளிப்படுத்துபவர் ஒரு அரசியல் தலைவராக இருக்க தகுதியானவரா என்று பொதுமன்றம் கேட்க வேண்டும். தி.மு.க-வை ஆட்சியிலிருந்து அகற்றத்தான் பாஜக-வும், அ.இ.அ.தி.மு.க-வும் அவர்கள் வேறுபாடுகளை மறந்து கூட்டணி அமைத்துள்ளார்கள். அதனைச் சொல்லித்தான் கடுமையாக பிரசாரம் செய்கிறார்கள். அவர்களுக்கு விஜயை எதிர்க்க நேரமில்லை. தி.மு.க டில்லி அணிக்கும், தமிழ்நாடு அணிக்கும் போட்டி என்று தேர்தலில் பாஜக எதிர்ப்பை சமரசமின்றி கூர்மைப்படுத்தி போட்டியிடுகிறது. விஜயை குறித்து தி.மு.க-வின் முக்கிய தலைவர்கள் பேசுவதேயில்லை.

விஜய் காங்கிரஸ் கட்சி தன்னுடன் கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்த்தார். அது நடக்கவில்லை. ஏனெனில் இவர் செயல்பாடுகள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களுக்கு உவப்பானதாக இல்லை. இவரது பகுதி நேர அரசியல் குறித்து தமிழ்நாட்டு மக்களிடையே நிலவும் கருத்துக்களை அவர்கள் அறிவார்கள்.ஆனால் விஜய் தி.மு.க பல நூறு கோடி ரூபாய்கள் கொடுத்து காங்கிரஸ் கட்சியை விலைக்கு வாங்கிவிட்டதாகக் கூறுகிறார்.  இவ்வளவு மோசமாக எதிரிகளை அவதூறு பேச எந்த ஆதாரமாவது அவரிடம் இருக்கிறதா என்று வியப்பாக இருக்கிறது. காங்கிரஸ்-தி.மு.க கூட்டணி கடந்த ஏழாண்டுகளாக மிக உறுதியாக தொடர்ந்து வரும், தேர்தல்களில் வெற்றியை ஈட்டிவரும் கூட்டணி என்பதை மறந்துவிட்டு வாய்க்கு வந்தபடி பேசுகிறார்.

அதைவிட பெரிய வேடிக்கை அவர் கருத்துக் கணிப்புகள் பற்றி பேசி இருப்பது. எந்த கருத்துக் கணிப்பும் அவர் கட்சி வென்று ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறவில்லை. அந்த அளவு உண்மையை திரித்துப் பேச முடியாது என்பதுதான் காரணம். ஆனால் விஜய் அவர்கள் எல்லோருமே மற்ற கட்சிகளிடம் பணத்தை வாங்கிக்கொண்டு பொய்யான தகவல்களை வெளியிடுவதாகக் கூறுகிறார்.

பொதுவாக தங்களுக்கு சாதகமில்லாத கருத்துக் கணிப்புகளை கட்சித் தலைவர்கள் புறக்கணிப்பார்கள். அது கருத்துத் திணிப்பு என்பார்கள். அந்த கணிப்பு சரியாகச் செய்யப்படவில்லை என்பார்கள். ஆனால் விஜய் நேரடியாக பணம் வாங்கிக்கொண்டு பொய்யான தகவல்களைக் கூறுவதாகக் குற்றம் சாட்டுகிறார்.  

இப்படி தன்னைத் தவிர எல்லோருமே ஊழல் செய்கிறார்கள், பணம் கொடுத்து அனைவரையும் விலைக்கு வாங்குகிறார்கள் என்றெல்லாம் சொல்லும் விஜய்,அவர் கட்சி நிதியாதாரங்களைக் குறித்து வெளிப்படையாக எதுவும் கூறுவதில்லை. அவர் கட்சியில் இணைந்துள்ளவர்கள் பிற கட்சிகளிலிருந்து வந்தவர்கள்தான். குறிப்பாக செங்கோட்டையன் அ.இ.அ.தி.மு.க-வின் சீனியர் லீடர். அவர்மீது ஊழல் குற்றச்சாட்டுகள், வேறு சில முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் எல்லாம் இருக்கின்றன. ஆதவ் அர்ஜுனா தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக-விற்கு அதிக நிதியளித்த லாட்டரி அதிபர் மார்டினின் மருமகன். அவர்தான் விஜயின் வலது கரம். விஜய் வேட்பாளர்களாக நிறுத்தியுள்ள பலர் கடைசி நேரத்தில் பிற கட்சிகளிலிருந்து வந்தவர்கள். பலர் மீது கிரிமனல் குற்றச்சாட்டுகள் உள்ளன.

இதெல்லாம் தவிர அவர் கடைசி நேரம் வரை பாஜக-வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையிலும் இருந்துள்ளார் என்றுதான் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். துணை முதல்வர் பதவி அல்லது இரண்டரை ஆண்டுகாலம் சுழற்சி முறையில் முதல்வர் பதவி என்றெல்லாம் கூட பேசப்பட்டதாக அவர் கூறினார். எனவே, பேரம் படியவில்லை என்பதால்தான் விஜய் எல்லா கட்சிகளையும் எதிர்க்கிறார் எனலாம்.

அவருடைய ஒரே நோக்கம் அவர் முதல்வர் பதவியைக் கைப்பற்ற வேண்டும் என்பதுதான். அதற்காக முறையாக வேர்மட்ட கட்சி அமைப்புகளை உருவாக்கி. அவர்களுடன் தானே பழகி, பயிற்றுவித்து, மக்கள் ஆதரவைத் திரட்டி அரசியல் செய்யும் ஆற்றலோ, பக்குவமோ அவருக்குக் கிடையாது என்பது தெளிவு. கூட்டங்களில் பேசுவதே பேப்பரிலிருந்துதான் படிக்கிறார். அது தவறல்ல. ஆனால் பேப்பர் இல்லாமல் ஊடகங்களுடன் உரையாடினால்தானே அவருக்கு என்ன வகையான புரிதல் உள்ளது என்பது வெளிப்படும்.

கல்விப் புலத்தில் ஆய்வு மாணவர்கள் பல ஆண்டுகள் உழைத்து ஆராய்ந்து எழுதி ஆய்வேடுகள் சமர்ப்பிர்ப்பார்கள். இறுதியில் அவர்கள் வைவா வோஸே என்ற நேர்முக வாய்மொழித் தேர்வினை எதிர்கொள்ள வேண்டும். அப்போதுதான் முனைவர் பட்டம் கிடைக்கும். அதன் காரணம் என்னவென்றால் அந்த ஆய்வேட்டில் எழுதியுள்ளதை அவர் புரிந்துகொண்டுதான் எழுதியுள்ளாரா என்று பரிசீலிப்பதுதான். ஒரு முனைவர் பட்டத்திற்கே, நேர்முக வாய்மொழித் தேர்வில் அவையில் கூடியுள்ளவர்கள் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும். ஆனால் எட்டு கோடி பேரை ஆள நினைப்பவர் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பைக் கூட செய்ய மறுக்கிறார் என்றால் பொதுமன்றம் அதனைக் கண்டிக்க வேண்டியது அவசரமானதும், அவசியமானதுமாகும்.

விஜயைப் பொறுத்தவரை ஆங்கில தமிழ் தொலைகாட்சி ஊடகங்கள், அச்சு ஊடகங்கள் பலவும் மக்களாட்சியை காக்கும் பணியை செய்யத் தவறியுள்ளன. கரூர் நெரிசல் மரணங்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாக விஜய் பிம்பத்தின் கட்டமைப்பிற்கு ஊடகங்கள் பொறுப்பேற்க வேண்டும். அவைதான் அந்த பிம்பத்தை ஊதிப் பெருக்கியதுடன், அவரைக் கண்டிக்க மறுத்தும் நிற்கின்றன.

கட்டுரையாளர் குறிப்பு:  

The failure of the public sphere to condemn actor Vijay is a dangerous trend - Article in Tamil by Rajan Kurai

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள:rajankurai@gmail.com

Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share