புதுச்சேரியில் சொகுசு விடுதியில் தங்கியுள்ள அதிமுக எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ஆலோசனை நடத்திவிட்டு சென்னை புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 47 இடங்களில் வெற்றி பெற்று மூன்றாம் இடத்துக்கு அதிமுக தள்ளப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும் பெரும்பான்மை இல்லாமல் ஆட்சியமைக்க முடியாமல் தவெக திணறி வருகிறது.
இதற்கிடையே திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் என யூகங்கள் பரவி வருகின்றன.
இந்தசூழலில் புதுச்சேரி சொகுசு விடுதியில் தங்கியிருக்கும் அதிமுக எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ஆலோசனை செய்தார்.
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் கூறுகையில், “எடப்பாடியார் இங்கு வந்திருப்பதன் நோக்கம், பாண்டிச்சேரி ரிசார்ட்டில் தங்கியிருக்கும் கழக நிர்வாகிகளையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து அவர்களுக்கு ஆதரவாகப் பேசுவதற்காகத்தான்
ஆலோசனை கூட்டத்தில் 45-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சி.வி. சண்முகம் மற்றும் இரண்டு மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது சொந்த வேலை காரணமாக வரவில்லை.
1968-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்களால் தமிழகத்திலிருந்து துரத்தியடிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சி, இன்று வரை தமிழகத்தில் கால் ஊன்ற முடியவில்லை .
காங்கிரஸ் கட்சி ஒரு சந்தர்ப்பவாத கட்சி. திமுகவின் ஆதரவோடு வெற்றி பெற்ற 5 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள காங்கிரஸ், தற்போது விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பது பதவி வெறியின் காரணமாகத்தான்.
எடப்பாடியார் ஆட்சி அமைக்கும் வரை எம்.எல்.ஏ.க்கள் இங்கேயே தங்கியிருப்பார்கள்” என்றார்.
