திமுக – அதிமுக கூட்டணி?:  டி.கே.எஸ். இளங்கோவன் பதில்!

Published On:

| By Kavi

திமுக அதிமுக கூட்டணி  என்ற தகவலை எங்கள் தலைவர் மறுத்திருக்கிறார் என்று டிகேஎஸ் இளங்கோவன் விளக்கமளித்துள்ளார். 

திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்   அண்ணா அறிவாலயத்தில் இன்று (மே 7) நடைபெற்றது. 

ADVERTISEMENT

அப்போது காங்கிரஸுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக செய்தித்தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன்,  “தமிழ்நாட்டு மக்கள் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணிக்கு வாக்களித்ததற்காக, அவர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.  

ADVERTISEMENT

காங்கிரஸ் கட்சிக்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறோம். 

திமுக பெற்ற வாக்கு எண்ணிக்கைக்கும், தமிழக வெற்றிக் கழகம் பெற்ற வாக்கு எண்ணிக்கைக்கும் பெரிய வேறுபாடு இல்லை. அதனால், மக்கள் எங்களோடு இருக்கிறார்கள் என்பதை உணர்த்துவதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதே இந்த கூட்டத்தின் நோக்கம்” என்றார். 

ADVERTISEMENT

காங்கிரஸுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியிருப்பது பற்றிய கேள்விக்கு,  “காங்கிரஸ் 28 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றார்கள் என்றால், மீதமுள்ள 23 இடங்களில் அவர்களைத் தோற்கடித்தது யார்? இதையெல்லாம் அவர்கள் சிந்திக்க வேண்டும்.

சிந்திக்காமல்  தவெகவுக்கு ஆதரவு கொடுக்கிறார்கள் என்றால், அவர்களுடைய அரசியல் எல்லா மாநிலங்களிலும் இப்படித்தான் இருந்து வருகிறது. அதனால்தான் இந்தக் கண்டனம்” என கூறினார். 

திமுக – அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள் என நேற்றிலிருந்து பேசப்பட்டு வருகிறதே என்ற கேள்விக்கு,  “எங்கள் தலைவர் அதை மறுத்திருக்கிறார். அவர் முடிவெடுப்பார். அப்படி ஒரு முடிவை அவர் எடுத்தால் அதை திமுக ஏற்றுக் கொள்ளும். ஆனால் இதுவரை அப்படி ஒரு முடிவு எடுக்கப்படவில்லை”  என்றார். 

ஆளுநரின் செயல்பாடு மற்றும்  தவெக ஆட்சி அமைப்பது குறித்த கேள்விக்கு, “நாங்கள் தடுக்கவே இல்லை. எப்படித் தடுப்போம்? நாங்கள் ஆளுநரைப் பார்த்து இவர்களை அனுமதிக்காதீர்கள் என்று சொல்லவில்லை.

ஆளுநர் எண்ணிக்கையைத் தானே கேட்கிறார்? அந்த எண்ணிக்கையை அவர்கள் காட்டினால் அனுமதிக்கப்போகிறார். நாங்கள் எப்படித் தடுக்க முடியும்?

உண்மையிலேயே சட்டமன்றத்தில் பெரும்பான்மை இருக்கிறது என்ற எண்ணிக்கையை, ஆதரவை காட்டினால் தான் முதலமைச்சராக முடியும். இது எல்லா மாநிலங்களிலும் காலம் காலமாக நடந்து வருவதுதான்” என விளக்கமளித்தார். 

ஆளுநரிடம் பெரும்பான்மையை காட்ட வேண்டுமா என்ற கேள்விக்கு,  “ஆளுநர் தான் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப் போகிறார். சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பது ஒரு பக்கம் இருந்தாலும், ஆளுநரிடம் அதைக் காட்ட வேண்டாமா?

ஆளுநர் இப்பொழுது அவர்களுக்கு எண்ணிக்கை குறைவாக இருக்கும் நிலையில் பதவிப்பிரமாணம் செய்து வைத்து, நாளை சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடரிலேயே அந்த அரசாங்கம் கவிழும் நிலை ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு? ஆளுநர் தானே பொறுப்பு. எனவே அவருடைய முடிவை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம், அதில் நாங்கள் தலையிடவில்லை” என பதிலளித்தார். 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share