துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களிலும் பல நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்து கொள்வது வழக்கமான ஒன்றுதான். யாருக்கு தேதி கொடுக்கிறாரோ இல்லையோ அமைச்சர் செந்தில்பாலாஜி கேட்டால் எத்தகைய நெருக்கடியான சூழலாக இருந்தாலும், செந்தில்பாலாஜி கேட்ட தேதியை கொடுத்து விடுவார் துணை முதல்வர்.
ஆனால் சமீப நாட்களாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோவை வருவார் வருவார் என சொல்லப்பட்டு, அந்த நிகழ்ச்சிக்காக போடப்பட்ட பிரம்மாண்ட பந்தலும் கூட, காத்திருந்து சில நாட்களுக்கு முன்புதான் அது பிரிக்கப்பட்டது. Ud
hayanithi- sendhilbalaji what happend

இதை சுட்டிக்காட்டி கோவை, கரூர், சென்னை அரசியல் வட்டாரங்களில் பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன.
கடந்த மார்ச் 23ஆம் தேதி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோவைக்குச் சென்று அங்கே பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள திட்டமிட்டிருந்தார். இதற்கான அறிவிப்புகளும் வெளியாகின.
சாதாரணமான விழா என்றாலே பிரம்மாண்டமாக நடத்தும் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி, துணை முதலமைச்சர் உதயநிதி கலந்து கொள்கிற விழா என்றதும் கூடுதல் பிரம்மாண்டமாக ஏற்பாடுகளை செய்திருந்தார்.

உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்ளும் விழாவுக்காக ஆர்.எஸ்.புரம் இருபாலர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் விழா அரங்கை பார்வையிட்டு பல்வேறு ஆலோசனைகளை சொன்னார் செந்தில்பாலாஜி. அதேபோல கோவையில், வன காவலர்களுக்கு வன ஆயுதங்கள் வழங்கி, ரூ. 19.50 கோடி மதிப்பிலான அதிநவீன வன உயிரின மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தை திறந்து வைப்பதற்காக வனக்கல்லூரியில் அமைந்துள்ள விழா அரங்கையும் பார்வையிட்டு ஏற்பாடுகளை துரிதப்படுத்தினார்.

ஆனால் திட்டமிட்டபடி 23ஆம் தேதி அந்த நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்ளவில்லை. இதை அடிப்படையாக வைத்து உதயநிதிக்கும் செந்தில் பாலாஜிக்கும் உரசல் என்ற பேச்சுகள் ஆரம்பித்தன.
உதயநிதி வருகைக்கான வரவேற்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக செய்யப்பட்ட நிலையில்… 22 ஆம் தேதி மாலைதான் உதயநிதி கோவை வரவில்லை என்ற தகவல் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தெரியப்படுத்தப்பட்டது. Udhayanithi- sendhilbalaji what happend
இது பற்றி திமுக வட்டாரங்களில் பேசியபோது,
“கோவையில் துணை முதலமைச்சர் உதயநிதி கலந்து கொள்கிற நிகழ்ச்சி மார்ச் 23ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கு அடுத்த நாளான மார்ச் 24ம் தேதி தான் உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணை வர இருந்தது.
அதற்கு முந்தைய விசாரணைகளிலேயே செந்தில் பாலாஜி அமைச்சராக பதவி ஏற்றது சரியா, ஜாமீன் கொடுத்த ஓரிரு நாட்களிலேயே அவர் அமைச்சராக பதவி ஏற்றது எங்களுக்கு வியப்பை அளிக்கிறது என்றெல்லாம் உச்சநீதிமன்றம் கருத்துக்களை வெளியிட்டு இருந்தது.
இந்த சூழ்நிலையில் 24ஆம் தேதி விசாரணையில் செந்தில் பாலாஜிக்கு எதிராக சில கடுமையான கருத்துக்கள் உச்ச நீதிமன்றத்தில் இருந்து வரலாம் என்றும், இந்த விவகாரம் மேலும் பல வகையில் சிக்கலை ஏற்படுத்தும் வகையில் தொடரலாம் என்றும் தகவல் முதலமைச்சருக்கு சென்றது.
அந்த சூழலில் தான் கோவைக்கு இப்போதைக்கு செல்ல வேண்டாம் என துணை முதல்வர் உதயநிதிக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் அந்த அடிப்படையிலேயே அவர் கோவை பயணத்தை ரத்து செய்தார் என்கிறார்கள். Udhayanithi- sendhilbalaji what happend
எதிர்பார்க்கப்பட்டது போலவே மார்ச் 24ஆம் தேதி அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
செந்தில் பாலாஜியை உச்ச நீதிமன்ற நீதிபதி ஓக்கா கடுமையாக சாடியதோடு 10 நாட்களுக்குள் பதில் தாக்கல் செய்ய வேண்டும் என கெடு விதித்தார். அதற்குப் பிறகு செந்தில் பாலாஜி தரப்பு உச்சநீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்ததும், செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் சென்னை செஷன் நீதிமன்றத்தில் ஆஜரானதும் என இந்த விவகாரங்களில் பரபரப்புகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன” என்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில் மிஸ் ஆன அந்த விழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கோவைக்கு அழைத்து வந்து மீண்டும் நடத்திட அமைச்சர் செந்தில் பாலாஜி தீவிர முயற்சியில் இருக்கிறார். உதயநிதி வருவார் என அறிவித்து நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து, அது ரத்து செய்யப்பட்டதில் செந்தில் பாலாஜி வருத்தமாக இருக்கிறார். அதேநேரம் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், சட்டமன்றம் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதன் காரணமாக துணை முதலமைச்சர் வரமுடியவில்லை என கோவை மாவட்ட நிர்வாகிகளிடம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை உதயநிதியை கோவைக்கு அழைத்து வந்து விழாவை நடத்திட செந்தில் பாலாஜி தீவிர முயற்சியில் இருக்கிறார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.